கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டம் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பங்களாதேஷில் உள்ள முஸ்லிம் அல்லாத சிறுபான்மையினர் இந்தியாவில் குடியுரிமை பெற அனுமதிக்கும் வகையில் இருந்தது. இதற்கு இந்தியா முழுவதும் பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து பெருமளவில் போராட்டங்கள் நடைபெற்றன.
இதைத் தொடர்ந்து கொரோனா உள்ளிட்ட காரணங்களை முன்வைத்து, இந்தச் சட்டம் அமல்படுத்தப்படாமல் கிடப்பில் போடப்பட்டது. இருப்பினும், அவ்வப்போது பா.ஜ.க தலைவர்கள் குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்படும் எனத் தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில், மேற்கு வங்கத்துக்கு மூன்றுநாள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா செய்தியாளர்கள் சந்திப்பின் போது, “பீர்பூமில் ஒன்பது பேரை உயிரோடு எரித்த ‘தீதி’ தானே மம்தா பானர்ஜி… மேற்கு வங்க மக்களால் மூன்று முறை தேர்ந்தெடுக்கப்பட்டீர்கள், ஆனாலும் உங்களை நீங்கள் திருத்திக்கொள்ளவில்லை.
நீங்கள் வன்முறையை நிறுத்தும் வரை, பா.ஜ.க உங்களுக்கு எதிரானப் போராட்டத்தைத் தொடரும் என்று நான் உறுதியளிக்கிறேன். சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு, இங்குச் சட்டத்தின் ஆட்சி இல்லை, இங்கு ஆட்சியாளரின் ஆட்சி மட்டுமே உள்ளது என மனித உரிமைகள் ஆணையம் தெரிவிக்கிறது.
100 கொலைகள், 1,829 தாக்குதல்கள் மற்றும் 161 வழக்குகளில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டுள்ளனர். சி.ஏ.ஏ அமல்படுத்தப்படாது என திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பொய் பிரசாரம் செய்கிறது. கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு நாங்கள் சி.ஏ.ஏ வை அமல்படுத்துவோம்” எனத் தெரிவித்துள்ளார்.
இந்த சி.ஏ.ஏ-வுக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றிய மாநிலங்களில் மேற்கு வங்கமும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.