Tuesday, July 5, 2022
Homeதமிழக சிறப்புச் செய்திகள்கொல்லிமலை: மூங்கில் தேர், அவரைக்கொட்டை அவியல் படையல்... மழைவேண்டி மக்களின் வேண்டுதல் திருவிழா!

கொல்லிமலை: மூங்கில் தேர், அவரைக்கொட்டை அவியல் படையல்… மழைவேண்டி மக்களின் வேண்டுதல் திருவிழா!

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் இருக்கிறது மேட்டுவிளாரம். இந்த மலைக்கிராமத்தின் முகப்பில் இருக்கும் ஆலமரத்தடியில் அமைந்திருக்கும் கொட்டைச் சாமிக்கு, “மும்மாரி மழை பெய்ய வேண்டும். வெள்ளாமை சீரும் சிறப்புமாக நடக்க வேண்டும். எங்களுக்கு வேண்டிய மழையைக் கொடுத்து, துணையாக நில்லு சாமி” என்று ஊரே கூடி நடத்தும் திருவிழா, காலம் காலமாக நடத்தப்படுகிறது.

அவரைக்கொட்டை சாமி

70 கொண்டை ஊசி வளைவுகள் கொண்ட கொல்லிமலை சுற்றுலாத் தலமாக உள்ளது. இந்த மலையில், மிளகு, சவுக்கு, கொண்டைக்கடலை உள்ளிட்டப் பயிர்கள் விளைவிக்கப்படுகின்றன. 1950 க்கு பிறகுதான் கொல்லிமலைக்கு சாலைவசதி அமைக்கப்பட்டாலும், அதற்கு முன்பு இங்குள்ள பூர்வக்குடி மக்கள் நடந்தே அடிவாரத்துக்கு வந்து சென்றிருக்கிறார்கள். இப்போது, கொல்லிமலையில் நாகரிகம் தலைகாட்டினாலும், பல பழைமையான விஷயங்களை இன்னமும் விடாமல் செயல்படுத்தி வருகிறார்கள்.

கொல்லிமலை திருவிழா

அவற்றில் ஒன்றுதான், மழைவேண்டி சாமிக்குப் படையல் போட்டு, திருவிழா எடுப்பது. கொல்லி உச்சியில் உள்ள மேட்டுவிளாரம் மற்றும் பெரும்பரப்புபட்டி ஆகிய கிராம மக்கள் சேர்ந்து, இந்தத் திருவிழாவை நடத்தி வருகிறார்கள். பொதுவாக சித்திரை மாதக் கடைசியில்தான் விழா எடுப்பார்களாம். இந்த வருடமும் அந்தத் திருவிழாவை சிறப்பாக நடத்தியிருக்கிறார்கள்.

ஊர் முகப்பில் உள்ள ஆலமரத்தடியில் இருக்கும் கொட்டைச்சாமி சிலைக்கு முன்பாக, இயற்கையாக உள்ள மரக்கிளைகள், இலை, தழைகளை வைத்துப் பந்தல் அமைக்கிறார்கள். அதோடு, மூங்கில் கழிகள், மரக்கிளைகளை வைத்து தேர், காவடி, பொய்க்கால் குதிரை உள்ளிட்டவற்றைச் செய்து, கலர் கலர் சேலைகளால் சுற்றி, தேர், காவடி அமைப்புகளை உருவாக்குகிறார்கள். காட்டில் விளையும் அவரை மொச்சைகளை சாமிக்குப் படைக்கப் பொதுவாக அவிக்கிறார்கள். அதேபோல், வீட்டுக்கு வீடு அவரைக் கொட்டைகளை அவிக்கிறார்கள். திருவிழா நடத்தும் இந்த இரண்டு கிராம மக்களும், பக்கத்து ஊரான பரியூர்பட்டியைச் சேர்ந்தவர்களை, ‘நாங்க திருவிழா நடத்துறோம். நீங்க எல்லோரும் வாங்க’ என்று வரவேற்கிறார்கள்.

மலை அவரைக்கொட்டை அவியல் படையல்

அவர்களும் குடும்பம் குடும்பமாக இங்கே வருகிறார்கள். அதன்பிறகு, அவித்த அவரைக்கொட்டை அவியலை வைத்து, கொட்டைச் சாமிக்குப் படையல் போடுகிறார்கள். அதன்பிறகு, தேங்காய் உடைத்து, தீபமேற்றி, ‘தடையில்லாம இந்த வருடமும் மாரி(மழை) வரணும் சாமி. காடு, கழனியெல்லாம் பச்சைக்குக் குறைவிருக்ககூடாது. அதுக்கு நீதான் வழிசெய்யணும்’ என்று வேண்டிக்கொள்கிறார்கள். அதன்பிறகு, மூங்கிலால் செய்த தேர், காவடி, பொய்க்கால் குதிரை உள்ளிட்டவற்றைத் தூக்கியபடி கோயிலைச் சுற்றி வந்து, சாமிக்கு சிறப்பு செய்கிறார்கள்.

கொல்லிமலை திருவிழா
கொல்லிமலை திருவிழா
கொல்லிமலை திருவிழா
கொல்லிமலை திருவிழா
கொல்லிமலை திருவிழா

தொடர்ந்து, சைவ சாப்பாடு, அவித்த கொட்டையைப் பிரசாதமாக இலையில் வைத்து வந்த விருந்தாளிகளுக்குப் போடப்படுகிறது. உணவு உண்டபின் அவர்கள் ஓய்வு எடுக்கிறார்கள். அன்று இரவு கோயிலுக்கு முன்பு உள்ள சிறிய திடலில் இலை, தழைகளால் மேடையமைத்து, கூத்து நடத்தப்படுகிறது. அந்த ஊரைச் சேர்ந்தவர்களே, வேடம்தரித்துக் கூத்துக் கட்டுகிறார்கள். வந்திருக்கும் உறவினர்களை மகிழ்விக்கதான் இந்த ஏற்பாடாம். விடிய விடிய நடக்கிறது கூத்து.

கொல்லிமலை திருவிழா

பிறகு, மறுநாள் சாமிக்குப் பன்றி ஒன்றைக் காவு கொடுக்கிறார்கள். அதன்பிறகு, ஆடு, கோழிகளும் காவு கொடுக்கப்படுகின்றன. அவற்றை சமையல் செய்து, திருவிழாவுக்கு வந்திருக்கும் விருந்தினர்களை விருந்துண்ண வைக்கிறார்கள். அதன்பிறகு, அன்றைக்கு மாலையோடு திருவிழா முடிவுக்கு வருகிறது. இந்த கொட்டைச் சாமிக்கு திருவிழா நடத்தினால், எவ்வளவு வன்கோடையிலும் திருவிழா நடத்திய இரண்டொரு நாள்களில் மழை வந்துவிடும் என்பது ஐதிகம். இந்த வருடம் திருவிழா தொடங்கிய முதல் நாளிலேயே மழை பிய்த்து எடுத்ததாம்.

திருவிழாக் கொண்டாட்டத்தில் மூழ்கியிருந்த மேட்டுவிளாரத்தைச் சேர்ந்த செல்வராஜ் என்பவரிடம் பேசினோம்.

“இந்தத் திருவிழா நடத்த வசதியாக இதுக்குனு தனியா ஊர் நாட்டாமையா குப்புசாமிங்கிறவர் இருக்கிறார். பூசாரியா, தங்கதுரைங்கிறவர் இருக்கிறார். பெரும்பாலும் சித்திரை மாசக் கடைசியில்தான் திருவிழா பண்ணுவோம். திருவிழா நடக்கும் நாளுக்கு நாலு நாளைக்கு முன்னாடியே நாட்டாமை ஊர் மக்களைக் கூட்டுவார். திருவிழா தேதி குறிப்பார். அதன்பிறகு, ஒவ்வொரு வேலையா எல்லோருக்கும் பிரிச்சுத் தருவார். ஊர் மக்களே திரண்டுபோய், அடுத்த நாட்டு (அடுத்த ஊர்) மக்களை திருவிழாவுக்கு அழைப்போம். இரண்டு நாள் திருவிழாவும் தடபுடலா நடக்கும். மழை வேண்டி எங்க ஊர் மக்கள் காலம்காலமா நடத்தும் திருவிழா இது. பல தலைமுறைக்கு முன்னால எங்க பகுதியில இந்த அவரைக்கொட்டை மட்டும்தான் அதிகம் விளைஞ்சுருக்கு. அதை அவிச்சு சாப்பிட்டுதான் ஊர் மக்கள் சீவனம் பண்ணிட்டு வந்திருக்காங்க.

செல்வராஜ்

அதனால் மழை வேண்டி, அந்த அவரைக் கொட்டையை அவிச்சு சாமிக்கு படைச்சுருக்காங்க. அந்த சாமிக்கும் அவரைக்கொட்டை சாமின்னே பெயர் வச்சு அழைச்சுருக்காங்க. அதன்பிறகு, கேழ்வரகு, கம்பு, தினை, வரகு, சோளம், பலானு வெள்ளாமை நடந்திருக்கு. காலஓட்டத்துல இங்க பயிர் செய்யப்படும் பயிர்கள் மாறியிருக்கு. இப்போ, மிளகுதான் அதிகம் பயிராகுது. இருந்தாலும், எங்க மண்ணோட ஆரம்ப காலப் பயிரான இந்த மலை அவரைக்கொட்டையை வச்சுதான் அந்த சாமிக்குப் படையல் போடுறோம். இந்தத் திருவிழா நடத்தினால், எவ்வளவு வறட்சியிலும் திருவிழா நடந்த இரண்டு நாளைக்குள்ள மழை வந்திரும். அப்படித்தான், இதுவரை நடந்திருக்கு. இந்த வருடம் சாமிக்கு படையல் போட்ட அடுத்த அரைமணி நேரத்துல மழை வந்துட்டு. எங்க காலத்துக்குப் பிறகும் இந்தத் திருவிழா நிக்காம நடக்கணும்” என்றார்.

Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments