புதுடில்லி:கோடை வெயில் உக்கிரமடைந்துள்ள நிலையில், அதனால் ஏற்படக் கூடிய தாக்கத்தை சமாளிப்பது தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடி நேற்று ஆய்வு செய்தார்.
நாடு முழுதும் கோடை வெயில் தகித்து வருகிறது. பெரும்பாலான மாநிலங்களில், 40 டிகிரி செல்ஷியசுக்கு அதிகமாக வெயில் பதிவாகி வருகிறது. இந்நிலையில், ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு நேற்று திரும்பிய பிரதமர் மோடி, கோடை வெயிலை சமாளிப்பது தொடர்பான ஆலோசனையில் ஈடுபட்டார். இதில், முக்கிய அமைச்சர்கள், உயரதிகாரிகள் பங்கேற்றனர். இந்திய வானிலை ஆய்வு மைய அதிகாரிகள், தேசிய பேரிடர் மீட்புப் பிரிவு உயரதிகாரிகள், தயார் நிலை குறித்து விவரித்தனர். கூட்டத்தில் மோடி பேசியதாவது :
|
கோடை வெயிலால் ஏற்படக் கூடிய பாதிப்புகளை சமாளிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். வெயில் அதிகமாக இருப்பதால் தீ விபத்துகள் ஏற்படுவது, காட்டுத் தீ உருவாவதை தடுக்க உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
மருத்துவமனைகளில் தீவிபத்து ஏற்படுத்துவதை தடுக்க அடிக்கடி ஆய்வு செய்ய வேண்டும். கோடை வெயில் மற்றும் தீ விபத்துகளால் உயிரிழப்புகள் ஏற்படுவதை தடுக்க வேண்டும்.
அடுத்து வரவுள்ள தென்மேற்கு பருவமழையின்போது வெள்ளம் ஏற்படுவதை தடுக்கவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உடனே துவக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.
இரண்டாண்டு திட்டம்
அடுத்த இரண்டு ஆண்டுகளில், பிரதமரால் அடிக்கல் நாட்டுவதற்கு மற்றும் திறப்பதற்கு தயாராகும் திட்டங்கள் குறித்த விபரங்களை அளிக்க, மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகத்துக்கு, பிரதமர் அலுவலகம் உத்தரவிட்டுள்ளது.
லோக்சபாவுக்கு தேர்தல் நடக்க இரண்டு ஆண்டுகளே உள்ள நிலையில், இந்தத் தகவல் கேட்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Advertisement