Thursday, June 30, 2022
Homeஅரசியல் செய்திகள்``கோயில் நிர்வாகங்களில் ஆர்.எஸ்.எஸ் ஊடுருவுகிறது... நாங்களும் நுழைவோம்!" - கே.பாலகிருஷ்ணன் உறுதி

“கோயில் நிர்வாகங்களில் ஆர்.எஸ்.எஸ் ஊடுருவுகிறது… நாங்களும் நுழைவோம்!" – கே.பாலகிருஷ்ணன் உறுதி

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் அமைந்துள்ள கோவிந்தசாமி நகரில் ஏழை மக்களின் வீடுகளை தமிழ்நாடு அரசின் அதிகாரிகள் சமீபத்தில் இடித்துத்தள்ளினர். புறம்போக்கு நிலத்தில் வீடுகள் கட்டப்பட்டிருப்பதாகக் கூறி, திடீரென வீடுகள் இடிக்கப்பட்ட காரணத்தால் பல குடும்பங்கள் வீதிக்கு வந்தன. அரசின் நடவடிக்கையைக் கண்டித்து ஒருவர் தீக்குளித்து இறந்தார்.

ராஜா அண்ணாமலைபுரம் வீடுகள் இடிப்பு

பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளரான கே.பாலகிருஷ்ணன், தமிழ்நாடு அரசு அதிகாரிகளின் நடவடிக்கையை கடுமையாக கண்டித்தார். தமிழ்நாடு அரசுக்கும் முதல்வர் ஸ்டாலினுக்கும் பல கேள்விகளை முன்வைத்தார். இந்த நிலையில், கே.பாலகிருஷ்ணனிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.

“நீர்நிலை, புறம்போக்கு என்று சொல்லி ஏழைகளின் வீடுகள் இடிக்கப்படுவது தி.மு.க ஆட்சியிலும் தொடர்கிறதே?”

“இதற்கு நீதிமன்றங்கள்தான் முக்கியக் காரணம். நீர்நிலைப் புறம்போக்கில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று நீதிமன்றங்கள் உத்தரவிடுவதாலும், தீர்ப்பு வழங்குவதாலும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கிறார்கள். நிலங்களை வகைமாற்றம் செய்யும் உரிமை மாநில அரசுக்கு இருக்கிறது. அதன்படி வகைமாற்றம் செய்ய மாநில அரசு முடிவெடுக்கும்போது, அதற்கு எதிராக நீதிமன்றங்கள் உத்தரவிடுகின்றன.

உயர் நீதிமன்ற மதுரை கிளை

தமிழ்நாட்டில் பல அரசு அலுவலகங்கள் நீர்நிலைகளில்தான் கட்டப்பட்டுள்ளன. உயர் நீதிமன்ற மதுரைக் கிளைகூட நீர்நிலையில்தான் இருக்கிறது. சென்னை கிரீன்வேஸ் சாலையில் உயர் நீதிமன்ற நீதிபதிகளின் குடியிருப்புகள் அமைந்துள்ள இடத்தில் பாதி, நீர்நிலையில்தான் அமைந்திருக்கிறது. சென்னையில் குடியரசுத் தலைவர் வந்து தங்குகிற மாளிகையே நீர்நிலையில்தான் இருக்கிறது. முகப்பேரில் ஏரித்திட்டம் என்ற பெயரில் குடியிருப்புகளைக் கட்டி ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் அதிகாரிகள் குடியிருக்கிறார்கள். அவற்றையெல்லாம் என்ன செய்வது?”

“கோயில் திருவிழாக்களில் நேரடியாகப் பங்கெடுப்பதற்கான முடிவை உங்கள் கட்சி எடுத்திருக்கிறது. கம்யூனிஸ்ட் கட்சிக்கு கோயில் திருவிழாக்களில் என்ன வேலை?”

கே.பாலகிருஷ்ணன்

“நாங்கள் கோயில்களுக்குப் போய் அபிஷேகமோ, ஆராதனையோ செய்யப்போவதில்லை. கடந்த சில ஆண்டுகளாக, சிறுதெய்வ வழிபாடுகளிலும் அந்தக் கோயில் நிர்வாகங்களிலும் ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட இந்துத்துவா அமைப்பினர் ஊடுருவி வருகிறார்கள். அதன் மூலமாக, தங்களின் மதவெறிப் பிரசாரத்துக்கான தலங்களாக கோயில்களைப் பயன்படுத்த அவர்கள் முயற்சி செய்கிறார்கள்.

தமிழ்நாட்டில் மதக்கலவரத்தை ஏற்படுத்துவதற்கு ஏதாவது கிடைக்காதா என்று நினைத்துக்கொண்டிருக்கும் பா.ஜ.க-வினரும், இந்துத்துவா அமைப்பினரும் கோயில்களை அதற்கு பயன்படுத்திவிடக் கூடாது.

பாஜக

எனவே, அவர்களின் அந்த முயற்சியைத் தடுக்க வேண்டும் என்பதற்காக, எங்கள் ஆதரவாளர்களை கோயில் திருவிழாக்களிலும், கோயில் நிர்வாகங்களிலும் பங்கெடுக்க வைப்பது பற்றி முடிவுசெய்திருக்கிறோம். இந்த முடிவை வைத்து, ஏதோ நாங்கள் கொள்கையை மாற்றிவிட்டதாக சிலர் கருத்து சொன்னார்கள். அது தவறு.”

அண்ணாமலை

“தி.மு.க-வின் கோட்டை, கம்யூனிஸ்டுகளின் கோட்டை என்றெல்லாம் சொல்லப்படும் திருவாரூரில் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை பங்கேற்ற போராட்டத்துக்கு பெரும் கூட்டம் திரண்டிருக்கிறதே?”

கே.பாலகிருஷ்ணன்

“மத்தியில் பா.ஜ.க ஆட்சியதிகாரத்தில் இருக்கிறது. அதைப் பயன்படுத்தி பலருக்கு பல்வேறு பதவிகளையும் சலுகைகளையும் கொடுத்து ஏராளமானோரை கட்சியில் சேர்க்கிறார்கள். அப்படித்தான் கூட்டத்தைச் சேர்க்கிறார்கள். அதை வைத்து, பா.ஜ.க வளர்ந்துவிட்டது என்று சொல்ல முடியாது. மத்தியில் அதிகாரம் இருக்கும்வரை இதைச் செய்வார்கள். அதிகாரம் போய்விட்டால், எல்லாம் போய்விடும்.”

Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments