Saturday, June 18, 2022
Homeதமிழக சிறப்புச் செய்திகள்``கோவைக்கு `மாஸ்டர் பிளான்'... 1 டிரில்லியன் டாலர் பொருளதாரம்" - முதல்வர் ஸ்டாலின்

“கோவைக்கு `மாஸ்டர் பிளான்'… 1 டிரில்லியன் டாலர் பொருளதாரம்" – முதல்வர் ஸ்டாலின்

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கோவை வந்திருந்தார். வ.உ.சி மைதானத்தில் தி.மு.க ஆட்சியின் ஓராண்டுக்கால சாதனைகள் மற்றும் தொல்லியல் துறை பொருள்கள் புகைப்படக் கண்காட்சியை ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பிறகு கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்ட தொழில்துறை பிரமுகர்களுடன் அவர் கலந்துரையாடினார்.

ஸ்டாலின்

அப்போது பேசிய அவர், “தமிழகத்தில் இரண்டாவது பெரிய நகரம் கோவைதான். ஜவுளி, பொறியியல், ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள் தயாரிப்பு, மோட்டார் பம்புகள், வெட் கிரைண்டர், தங்க நகை மற்றும் ஆபரண கற்கள் உற்பத்தி என அனைத்துத் தொழில்களிலும் சிறந்த நகரம் கோவைதான்.

கோவை மக்கள் தொடாத துறையும் இல்லை, அவர்கள் தொட்டு துலங்காத துறையும் இல்லை. சென்னைக்கு அடுத்தபடியாக, இந்த தமிழ்நாட்டில் இரண்டாவது பெரிய மென்பொருள் தயாரிப்பு நகரமாக கோவை உருப்பெற்றிருக்கிறது. இந்த நகரத்தில் உள்ள டைடல் பூங்கா மற்றும் பிற திட்டமிடப்பட்ட தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள் மூலம், உலக அளவில் அவுட்சோர்சிங் நகரங்களில் ஒரு முக்கிய இடத்தை இந்த நகரம் தற்போது பிடித்திருக்கிறது.

கோவை

கோவை வளர்ச்சிக்கு, இந்த மேற்கு மண்டலத்தின் தொழில் முன்னேற்றத்திற்கு, கோவை விமான நிலையத்தின் விரிவாக்கம் அவசியம் தேவை. இதனை உணர்ந்து, கோவை விமான நிலையத்தை உலகத் தரத்துக்கு உயர்த்துவதற்கான பணிகளை தலைவர் கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது தொடங்கிவைத்தார்.

இந்தப் பணிகளுக்கான திட்டம் வகுக்கப்பட்டு, நில எடுப்புப் பணிகள் 2010-ம் ஆண்டு தொடங்கப்பட்டன. கடந்த ஆட்சிக்காலத்தில் சரியான முன்னேற்றம் இல்லாமல் தொய்வடைந்திருந்த அந்தப் பணிகளை இப்போது முடுக்கிவிட்டு, இதற்காக 1,132 கோடி ரூபாயை நாம் ஒதுக்கீடு செய்திருக்கிறோம்.

ஸ்டாலின்

இந்தப் பணிகள் மிக விரைவில் முடிக்கப்படவிருக்கின்றன. இதன் மூலமாக, சென்னைக்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டின் தலைசிறந்த பன்னாட்டு விமான நிலையமாக கோவை விமான நிலையம் உயர்த்தப்படும் என்று உறுதியாக தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழகத்தை 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக உயர்த்தும் இந்த அரசினுடைய லட்சியத்தை அடைய, கோவையின் பங்களிப்பு மிக முக்கியமானதாக அமைய வேண்டும். அறிவு சார் ஆராய்ச்சி பூங்கா ஒன்று பாரதியார் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்படும். வளமிக்க இந்த மாவட்டத்தை மேலும் வலுப்படுத்தக்கூடிய வகையில்,

கோவை

புத்தாக்கம், தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பம், வான்வெளி மற்றும் பாதுகாப்பு, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு உள்ளிட்ட வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களுக்கான புதிய மையமாக (New Hub for Emerging Technologies) கோயம்புத்தூர் உருவாக்கப்படும்.

கோவைக்கான புதிய பெருந்திட்டமாக இருக்கக்கூடிய (New Master Plan) ஒருங்கிணைக்கப்படும். கோவை நகரின் கட்டமைப்புத் தேவைகளுக்கான எதிர்பார்ப்புகளை நிறைவு செய்யக்கூடிய வகையில், இந்தப் பகுதிக்கான புதிய பெருந்திட்டம் (Master Plan) உருவாக்கப்படும். ஏதோ பேசிவிட்டு, இத்துடன் இந்தப் பிரச்னை முடிந்துவிடும் என்று நாங்கள் இருக்க மாட்டோம்.

ஸ்டாலின்

உங்களை அடிக்கடி இதுபோன்ற கலந்தாலோசனைக் கூட்டங்கள் நடத்தி சந்திக்கக்கூடிய வாய்ப்பை நாங்கள் தொடர்ந்து பெறுவோம். அந்தப் பணியை நம்முடைய தொழில் துறை அமைச்சர் அவர்களும், சிறு, குறு தொழில் துறை அமைச்சர் அடிக்கடி வருவார்கள். நானும் வருவேன்.

அதில் எந்த மாற்றமும் கிடையாது. உங்களுக்கு என்ன பிரச்னை ஏற்பட்டாலும் என்னோடு நீங்கள் தொடர்பு கொள்ளலாம், அதிகாரிகளிடத்திலும் நீங்கள் தொடர்பு கொள்ளலாம். எப்போது வேண்டுமானாலும் எங்களைச் சந்திக்க நீங்கள் வரலாம். அதில் எந்த நிலையிலும் நாங்கள் நிச்சயமாக மாறுபட மாட்டோம். எனவே, நீங்கள் எடுத்துச் சொன்ன அனைத்து கருத்துகளையும் படிப்படியாக… அதே நேரத்தில் உறுதியாக நிறைவேற்ற நாங்கள் காத்திருக்கிறோம் என்று சொல்லி, அடிக்கடி சந்திப்போம் என்று சொல்லியிருக்கிறோம். எனவே, மீண்டும் சந்திப்போம்.” என்றார்.

Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments