சசிகலா: `நான் பேசுறது எல்லோருக்கும் கேக்கணும்’ – எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் ஒரத்தநாடு திருமண விழா

சசிகலா தன்னுடைய 30 ஆண்டு கால அரசியல் வாழ்வில் முதல் முறையாக ஒரத்தநாட்டில் நாளை நடைபெற உள்ள ஒரு திருமணத்தை தலைமையேற்று, தன் கையால் தாலி எடுத்து கொடுத்து நடத்தி வைக்க இருப்பதுடன் அந்த மேடையிலேயே வெளிப்படையாக அரசியல் பேசி தனது பயணத்தை தொடங்க இருப்பதாக சசிகலா தரப்பில் பேசப்படுகிறது. இந்த திருமணத்தில் டி.டி.வி.தினகரனும் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியிருப்பது எதிர்பார்ப்பை கூட்டியிருக்கிறது.

சசிகலாவிடம் அழைப்பிதழ் கொடுக்கும் ஆதவன்

ஒரத்தநாடு அருகே உள்ள பின்னையூர் கிராமத்தை சேர்ந்தவர் ஆதவன். சசிகலா நிகழ்ச்சிகளை தகவல் தொழில் நுட்ப பிரிவின் மூலம் வெளியே கொண்டு வரும் பணிகளை செய்து வருகிறார். இவருடைய குடும்பம், சசிகலா கணவர் நடராசன் தொடங்கி சசிகலா உள்ளிட்ட அவரின் குடும்பத்தினரிடம் 50 ஆண்டுகளுக்கு மேலாக நெருக்கமான நட்புடன் இருந்து வருகிறது. ஆதவன் திருமணம், நாளை ஒரத்தநாட்டில் உள்ள மண்டபம் ஒன்றில் விமர்சையாக நடைபெற உள்ளது. இந்த திருமணத்தை சசிகலா தலைமையேற்று நடத்தி வைக்க உள்ளார். இதற்காக ஆதவன் குடும்பத்தினர் புரட்சித்தாயே, பொன்னியின் செல்வியே என சசிகலாவை வரவேற்று பிளக்ஸ் வைத்து விமர்சையான ஏற்பாட்டை செய்துள்ளனர்.

அரசியல் விழிப்புணர்வு கொண்ட பகுதியாக அரசியல் ஆர்வலர்கள் ஒரத்தாநாட்டை குறிப்பிட்டு பேசுவார்கள். அத்தகைய சிறப்பு மிக்க ஒரத்தநாட்டிலிருந்து சசிகலா தனது அரசியல் பயணத்தை தொடங்க இருக்கிறாராம். திருமணங்களை நடத்தி வைத்து, அந்த விழாக்கள் மூலம் அரசியல் பேசிவது திராவிட கட்சிகளின் வழக்கமான ஃபார்முலா தான். அதனை பின்பற்றி சசிகலா முதல் முறையாக தன் கையால் தாலி எடுத்து கொடுத்து திருமணத்தை நடத்துவதுடன் அங்கிருந்தே முழு வீச்சில் அரசியல் பயணத்தை தொடங்க திட்டமிட்டிருப்பதாக பேசப்பட்டு வருகிறது.

தினகரனிடம் அழைப்பிதழ் கொடுக்கும் ஆதவன்

இது குறித்து சசிகலா வட்டாரத்தில் பேசினோம், “சசிகலா, தமிழகத்தின் பல மாவட்டங்களில் உள்ள முக்கிய கோயில்களுக்கு ஆன்மீக பயணம் மேற்கொண்டு வந்தார். அப்போது அந்த பகுதிகளில் உள்ள தன் ஆதரவாளர்களை சந்தித்து பேசினார். தென் மாவட்டத்திற்கு சென்ற போது ஓ.பி.எஸ் தம்பி ஓ.ராஜா வெளிப்படையாகவே சசிகலாவை சந்தித்தது அ.தி.மு.கவில் சலசலப்பை ஏற்படுத்தியது.

சசிகலாவை பொறுத்தவரை அ.தி.மு.கவில் தன்னை இணைத்து கொள்வார்கள், மீண்டும் பொதுச்செயலாளர் பதவி கிடைக்கும் அதன் மூலம் ஆளுமையான அரசியலை முன்னெடுக்கலாம், இழந்த தன் செல்வாக்கை மீட்கலாம் என நினைத்திருந்தார். சசிகலாவுக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர்கள், முக்கிய பொறுப்பில் உள்ள நிர்வாகிகள் அதிமுக தலைமையிடம் பேசினர். அவ்வப்போது சசிகலா தொடர்பான பேச்சுக்கள் அதிமுகவில் எழுந்து அதே வேகத்தில் அடங்கி விடும். எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தரப்பு சசிகலாவின் வருகையை துளி கூட ஏற்று கொள்ளாததால் சசிகலாவின் எண்ணம் ஈடேறவில்லை.

சசிகலாவை வரவேற்று பிளக்ஸ்

இந்த நிலையில் தான் விரைவில் அரசியல் பயணத்தை தொடங்குவேன் என சசிகலா கூறியிருந்தார். மறைந்த முதல்வர் ஜெயலலிதா தாலி எடுத்து கொடுத்து பல திருமணங்களை நடத்தி வைத்து இருக்கிறார். சசிகலா குடும்பத்து திருமணங்களை கூட ஜெயலலிதா தான் தாலி எடுத்து கொடுத்து நடத்தி வைத்துள்ளார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகும் பல திருமணங்கள் சசிகலா தலைமையில் நடைபெறுவதற்கான வாப்பிருந்தும் அதனை சசிகலா தவிர்த்தார்.

இந்த நிலையில் தான் தன் கையால் தாலி எடுத்து கொடுத்து திருமணத்தை நடத்தி வைக்க சம்மதம் தெரிவித்துள்ளார். மணமகன் ஆதவன் குடும்பம் சசிகலா மீது வைத்திருக்கும் மரியாதையும் அதற்கு முக்கிய காரணம். கிட்டதட்ட சசிகலா தன்னுடைய 30 ஆண்டு கால அரசியல் வாழ்வில் முதல் முறையாக தன் தலைமையில் திருமணத்தை நடத்தி வைக்க இருப்பது அதிமுக, அமமுக, சசிகலா ஆதரவாளர்கள் என பல தரப்பிடம் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருமண ஏற்பாடு

மணமகன் ஆதவன் குடும்பாத்தாரிடம் பேசிய சசிகலா, “மேடையில் மைக்கெல்லாம் ரெடி பண்ணிடுங்க நான் பேசுறது எல்லாருக்கும் கேக்கணும்” என சொல்ல அதற்கான ஏற்பாட்டை செய்துள்ளனராம். முதலில் தாலி மட்டும் எடுத்து கொடுத்து திருமணத்தை நடத்தி வைக்கிறேன் என்றுதான் சொல்லியுள்ளார் சசிகலா. பின்னர் தான் திருமண மேடை பொதுக்கூட்ட மேடை போன்று இருக்க வேண்டும் என கருதி சில ஏற்பாடுகளை செய்ய சொல்லியுள்ளார். இதன் மூலம் திருமணத்தை நடத்தி முடித்து வைத்து விட்டு சசிகலா அரசியல் பேசுவார் என்றே தெரிகிறது.

சசிகலா, தினகரன் இருவருக்குமிடையே கடந்த சில மாதங்களாக அரசியல் ரீதியாக கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. இருவரும் தனி தனியாக பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இந்த சூழலில் நாளை நடைபெறும் திருமணத்தில் இருவரும் கலந்து கொள்கின்றனர். சசிகலா மேடையில் இருக்கும் போதே தினகரன் வருவாரா என உறுதிபடத் தெரியவில்லை. மணமகன் ஆதவன் தினகரனிடம் அழைப்பிதழ் கொடுத்த உடனேயே அவசியம் கலந்து கொள்கிறேன். அதற்கான ஏற்பாட்டை செய்யுங்கணு சொல்லி வாழ்த்தியிருக்கிறார்” என்றனர்.

சசிகலா, தினகரன்

அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கத்தின் சொந்த தொகுதி ஒரத்தநாடு. அவர் சமீப காலமாக சசிகலாவுக்கு ஆதரவாக பேசி வருவதாக சொல்லப்படுகிறது. சசிகலா தஞ்சாவூர் வந்திருந்த போது அவருடைய சம்மந்தி தவமணி சசிகலாவை ரகசியமாக சந்தித்து பேசியதாக சொல்லப்படுகிறது. வைத்திலிங்கத்தின் சகோதரி இரண்டு வாரங்களுக்கு முன் உயிரிழந்த நிலையில் போன் மூலம் வைத்திலிங்கத்திடம் பேசி சசிகலா ஆறுதல் கூறியதாகவும் தலவல் வெளியானது.

இந்த நிலையில் ஒரத்தநாட்டில் நடைபெறும் திருமணத்தில் சசிகலா கலந்து கொள்வதை எடப்பாடி பழனிசாமி தரப்பு உன்னிப்பாக கவனிக்க தொடங்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது.

அ.ம.மு.க தரப்பை சேர்ந்த சிலர், `அரசியலில் அவரவர் வழி தனி வழி என சசிகலா, தினகரன் இருவரும் பயணித்து கொண்டிருக்கின்றனர். சசிகலா திருமணத்தை நடத்தி வைக்கும் அதே வேளையில் ஒரத்தநாடு காவாரப்பட்டு கிராமத்தில் நடைபெறும் திருமணத்தை தினகரன் தலைமையேற்று நடத்தி வைக்கிறார். அதனால் சசிகலாவை தினகரன் சந்திப்பதற்கு வாய்ப்பிருக்காது. ஆனால் நிச்சயம் மணமக்களை நேரில் சென்று வாழ்த்துவார்” என்கின்றனர். ஒரத்தநாட்டில் ஒரே நாளில் சசிகலா, தினகரன் இருவர் தலைமையிலும் தனி தனியாக இரண்டு திருமணங்கள் நடைபெற இருப்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Source link

Leave a Comment

Your email address will not be published.