சபரிமலை ஐயப்ப சுவாமி கோயில் உலக பிரசித்திபெற்றது. ஐயப்ப பக்தர்களுக்கு பம்பா நதியும், பதினெட்டாம் படியும், மகரவிளக்கும் மிகவும் புனிதமானவை. மலையில் கல்லையும் முள்ளையும் மிதித்து வந்த பக்தர்களின் பாதங்களுக்கு பக்தி உணர்வை கொடுப்பது பதினெட்டாம் படி. ஐயனைக் கண்ணார கண்டு தரிசிப்பதற்கு நம்மைப் படிப்படியாக உயர்த்துவது பதினெட்டாம் படி. இருமுடி தலையில் இருந்தால்தான் சிறப்புமிக்க பதினெட்டாம் படியில் ஏறிச்செல்ல பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். பதினெட்டாம் படிக்கு படிபூஜைக்கு 75,000 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. படிபூஜை நடக்கும் நேரங்களில் மழை வந்தால் பூஜைக்கு இடையூறு ஏற்பட்டு வந்தது. அடைமழைகாரணமாக படிபூஜை நடத்த முடியாத நிலையும் இருந்து வந்தது.
இதனால் பதினெட்டாம் படியின் மேல் பகுதியில் கண்ணாடியால் ஆன மேற்கூரை அமைக்கப்பட்டது. ஆனால், அந்த மேற்கூரையால் கொடிமரத்தில் நேரடியாக சூரிய ஒளி படவில்லை என்று தேவபிரசன்னத்தில் கண்டறியப்பட்டது. இதையடுத்து கண்ணாடி மேற்கூரை அகற்றப்பட்டது. தற்போது படிபூஜை நடக்கும் நேரங்களில் தார்ப்பாய் ஷீட் போடப்பட்டு பூஜை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நிரந்தரக் கூரை போடும் விதமாக ஹைட்ராலிக் கூரை ஒன்று அமைக்கத் தற்போது முடிவு செய்யப்பட்டுள்ளது.