சென்னை 28 படத்துக்கு முன்னர் வெங்கட் பிரபு எடுக்க நினைத்திருந்த கதை இதுவாம். உண்மையில், தொடரின் மேக்கிங்கும் அப்படித்தான் இருக்கிறது. இடையில் இதே கதையின் சாயலில் லாரன்ஸ் வேறு ‘காஞ்சனா – 2’ எடுத்துவிட்டார் என்பது தனிப்பேய்க்கதை. வெப் சீரிஸ் என்பதாலேயே ஏகத்துக்கும் நீள்கின்றன சில காட்சிகள். ஏங்க அவரென்ன அசிஸ்டென்ட் கமிஷனர் ராகவனா, அவருக்கு எதுக்குங்க பேக் ஸ்டோரி எல்லாம்?
லைவ் ஷோ கான்செப்ட், அதில் நம்பகத்தன்மைக்கு ‘நீயா நானா’ கோபிநாத்தைச் சேர்ப்பது என சில விஷயங்களில் ஈர்க்கிறார் வெங்கட் பிரபு. பேய்ப் படங்களுக்கே உரிய சில லாஜிக் மீறல்களைப் புறந்தள்ளலாம் என்றாலும், திரைக்கதையின் தொய்வு அதையெல்லாம் ஞாபகப்படுத்துகிறது. காஞ்சூரிங் சிலுவைப் பேய்களையும், லாரன்ஸின் தர்க்கா பேய்களையும் பார்த்துப் பழகிய ரசிகர்கள் முன் தாயத்துப் பேயை காட்சிப்படுத்தியிருக்கிறார் வெங்கட். ஆனால், அது டெரரர் ஃபீல் இல்லாமல், ‘சரி சரி ரசத்த ஊத்து’ மோடில் இருப்பதுதான் வருத்தம். பேய்ப் படங்களில் கதைக்குப் பக்கபலமாக இருப்பது நடிப்பும், பின்னணி இசையும்தான். கதை ஏரியாவை வெங்கட் சரியாக எழுதியிருந்தாலும், பிரேம்ஜியின் பின்னணி இசையும், நடிகர்களின் செயற்கையான நடிப்பும் நம் பொறுமையைச் சோதிக்கிறது.