நாம் உள்ளிழுக்கும் சுவாசக் காற்று, நுரையீரலின் அடிப்பகுதி வரை சென்று, தங்கி, விரிந்து, வியாபித்து, அங்கு இருக்கும் எல்லா காற்றுக் குமிழ்களிலும் பரவி, பின்பு வெளியேற வேண்டும். இது குறைய ஆரம்பித்தால், உள் உறுப்புகள் வலிமை இழக்கத் தொடங்குகின்றன. இதுவே முதுமையின் காரணமாக அமைகிறது.
யோகாவின் சிறப்புகளையும் வரலாற்றையும் விளக்குகிறார் மு. அரி. இவர் உலக சித்தக் கலைகள் ஆய்வு மையத்தின் நிறுவனர். ஏற்கனவே சக்தி விகடனில் பல பயிற்சி வகுப்புகளும் கட்டுரைகளும் வழங்கியவர்.
“ஓகம் என்றால், ஒன்று மற்றொன்றுடன் கலத்தல் என்றே தமிழ் கூறும். ஐந்து புலன்கள், சூட்சும உடல், மனம் முதலிய கரணங்கள் ஒன்றிணைந்து செய்யப்படுவதே ஓகம் என்கின்றன சித்தர் நூல்கள். உடலானது வெளிமுகமாக உயிர்ப்பையும் ஆற்றலையும் வீணடிக்காமல், உள்முகமாகத் திருப்பி ஒடுக்குவது ஓகம். அலை பாயும் மனதை அலையாமல் ஒருமுகமாக நேர்வழிப்படுத்துவதும் ஓகத்தின் முக்கியப் பணி என்று நூல்கள் கூறுகின்றன. முக்கியமாக மனம் பல வடிவங்களை எடுக்காமல் தடுப்பதே ஓகாவின் லட்சியம் என்கின்றன ஓக நூல்கள்.
மனிதன் நிமிர்ந்து நின்று, என்று யோசிக்கத் தொடங்கினானோ அன்றே ஓக முறைகள் தோன்றிவிட்டன எனக் கூறப்படுகிறது. அவன் அமர்ந்தும், நின்றும், குனிந்தும் செய்த காரணத்தால் ஓக இருக்கை என்றானது. இதுவே வடமொழியில் யோக ஆசனம் என்றும் ஆனது என்பர். ஆதிசித்தனாம் ஈசன், சக்திக்கு உரைத்த யோகசூத்திரங்களை, பதஞ்சலி மாமுனிவர் கேட்டு எழுதிய 196 யோகா சூத்திரங்களே யோக சாஸ்திரம் என்றானதாக புராணங்கள் கூறும். எனினும் சித்தர்களின் வழியே உருவான ஓகக் கலையே யோகா என்றானதாகவும் ஒரு கருத்து உண்டு!
எது எப்படியோ, நன்மை செய்யும் இந்த உயர்ந்த கலையால், இன்று இந்தியர்களை உலக அரங்கில் வியப்புடன் பார்க்கத் தொடங்கி உள்ளது உலகம். யுனெஸ்கோவின் பாரம்பரிய கலை பட்டியலில் 13-வது கலையாக உள்ளது யோகா. 2014-ம் ஆண்டு முதல், ஜூன் 21-ம் தேதியை சர்வதேச யோகா தினமாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது.
யோகாவின் ஆதிகுரு என ஈசனும், நந்தியும், பதஞ்சலியும் என்று ஞான நூல்கள் குறிப்பிடுகின்றன. எனினும் இந்த கலையைப் பற்றி எளிதாகவும் விவரமாகவும் எழுதியவர் திருமூலர். இவரே யோகக்கலையின் தந்தை எனப்படுகிறார்.
எளிமையாக யோகநெறிகளைத் திருமந்திரத்தில் விளக்கி, அனைவருக்கும் ஏற்ற வகையில் யோகநெறிகளை எடுத்துச் சொன்ன பெருமை திருமூலரையேச் சாரும்.
சித்தர்களும் ஆதி தமிழர்களும் ஓகக்கலையை வாழ்வியல் நெறியாக மட்டுமே பயின்று பயன்படுத்தி வந்தனர். இது வடமொழிக்குச் சென்ற பின்னர் அற்புதக் கலையாக மாறியது. உடலுக்கும் மனதுக்கும் ஒருசேர வலிமையும் உற்சாகமும் அளிக்கக்கூடிய கலை யோகா. நம் உடல் நலனை இயங்காற்றலோடு வைத்திருப்பதற்கும் உள்ளுறுப்புகளின் வலிமைக்கும் அடிப்படையானது இந்த யோகா.
உடலை ஓம்புவதே ஓகம். உடலை குறிப்பிட்ட நேரம் குறிப்பிட்ட வடிவில் வைத்திருந்து மூச்சை சீராக்கி எண்ணங்களை ஒன்றிணைத்து செய்யப்படும் ஜாலமே யோகா. உடலைப் போற்றி வாழ்ந்தால் மனம் சீராக இருக்கும். மனம் சீரானால் ஒழுக்கமும் வாழ்க்கையின் குறிக்கோளும் சீராகும், இதுதான் யோகாவின் அடிப்படை.
‘எட்டெட்டுப் பத்தொடு நூறு ஆசனங்கள் உண்டு!’ என்கிறார் திருமூலர். எட்டெட்டு என்றால், பதினாறு. அத்தோடு பத்தைக் கூட்ட 26. இத்துடன் நூறைக் கூட்டினால் வருவது 126. இந்த 126 ஆசனங்களின் முயற்சியால் வருவது அட்டாங்க யோகம், இது ஒரு 8. மொத்தமாக 134 யோக ஆசனங்கள் உண்டு என்கின்றன யோக நூல்கள். இந்த யோகாவைப் பயின்றால் பெறக்கூடிய பலன்கள் ஆயிரம் ஆயிரம் என்கிறார் திருமூலர். ஆரோக்கியமும், செயல் திறனும் மட்டுமல்ல, அபூர்வ ஸித்திகளும், ஆயுள் விருத்தியும் மட்டும் அல்ல. ஈசத்துவம் எனும் மனிதன் இறைநிலையை அடையும் பேற்றைக்கூட பெறமுடியும் என்கின்றன யோக நூல்கள்.
இறைநிலையை அடைவது எல்லாம் வேண்டாம், இன்றைய மனிதர்கள் ஆரோக்கியத்தைக் காக்கவும், தீய பழக்கங்களை விட்டொழிக்கவும் நிச்சயம் யோகா பயன்படும் என்பதே உண்மை. இதை நிரூபிக்க திருமூலர் கூறும் ஒரே ஒரு சூட்சுமத்தைப் பற்றி மட்டும் பார்ப்போம்.