சர்ச்சைக்குரிய விஷயங்களைப் பேசி வீடியோ வெளியிட்டு வந்த சின்னத்திரை நடிகை ஸ்ரீநிதி கவுன்சிலிங் மற்றும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பான ‘யாரடி நீ மோகினி’ உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்தவர் நடிகை ஸ்ரீநிதி. அந்தத் தொடரில் ஹீரோயினாக நடித்த நடிகை நட்சத்திராவுக்கு நெருக்கமான தோழி இவர்.
சில தினங்களூக்கு முன்பு நடிகை நட்சத்திராவின் திருமணம் தொடர்பாக ஸ்ரீநிதி சில விஷயங்களைப் பேசி வீடியோ வெளியிட்டிருந்தார். மேலும் நடிகர் அஜித்தின் ‘வலிமை’ படம் குறித்தும், சிம்பு தொடர்பாகவும் சில சர்ச்சையான கருத்துக்களைப் பேசியும் வீடியோ வெளியிட்டார்.
இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக, ‘ஸ்ரீநிதி மன அழுத்தத்தால் இவ்வாறு நடந்துகொள்கிறார்’ என நட்சத்திரா மற்றும் விஷ்வா ( நட்சத்திரா திருமணம் செய்துகொள்ளப் போகிறவர்) உள்ளிட்ட சிலர் தெரிவித்திருந்தனர்.
இந்தச் சூழலில் சென்னை புறநகரான புழல் பகுதியில் அமைந்துள்ள ஒரு சிகிச்சை மையத்தில் ஸ்ரீநிதியைக் கவுன்சிலிங் மற்றும் சிகிச்சைக்காகச் சேர்த்துள்ளதாக அவருக்கு நெருக்கமான நட்பு வட்டத்தினர் தெரிவிக்கின்றனர்.
’பழைய ஸ்ரீநிதியாய்த் திரும்பி வருவார்’ என நிச்சயம் நாங்கள் நம்புகிறோம்’ என்கின்றனர் ஸ்ரீநிதியின் நண்பர்கள்.