ஊட்டச்சத்துகளும், நோய் எதிர்ப்பு ஆற்றலும் மிகுந்த பாரம்பர்ய உணவுகளை விட, மேற்கத்திய ஃபாஸ்ட் ஃபுட் வகைகள் மீதான ஈர்ப்பு இன்றைய தலைமுறைக்கு சற்று அதிகமாகவே உள்ளது. குறிப்பாக, கோழி இறைச்சியில் தயாரிக்கப்படும் ஷவர்மாவை காலை, மாலை உணவாக இளைய தலைமுறையினர் பலர் சாப்பிடுகிறார்கள். கோழிக்கறியை தனியாக எடுத்து, அதை மெக்கனைஸ்டு மெஷினில் வேகவைத்து ஷவர்மா உணவு தயாரிக்கப்படுகிறது.
கேரளத்தில், சமீபத்தில் சிக்கன் ஷவர்மா சாப்பிட்ட கண்ணூர் கரிவெள்ளூரைச் சேர்ந்த 16 வயது மாணவி தேவநந்தா உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. காசர்கோடு செறுவத்தூர் பேருந்து நிலையத்தில் செயல்பட்டு வந்த ‘ஐடியல் கூல்பாரி’ல் ஷவர்மா சாப்பிட்ட தேவநந்தாவுக்கு சில நாள்களாக உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்தார். மேலும் அங்கு சாப்பிட்ட சுமார் 36 மாணவ, மாணவிகளுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் சிகிச்சை எடுத்து வீடு திரும்பியிருக்கிறார்கள். உணவு பாதுகாப்புத்துறையின் அனுமதி இல்லாமல் செயல்பட்ட அந்த ‘கூல்பார்’ சீல் வைக்கப்பட்டது.
கெட்டுப்போன கோழி இறைச்சியில் ஷவர்மா தயாரிக்கப்பட்டதால் தேவநந்தாவுக்கு ஃபுட் பாய்சன் ஆனதாக விசாரணையில் தெரியவந்தது. ‘கூல்பார்’ உரிமையாளரான மங்களூரைச் சேர்ந்த முகம்மது அனஸ், மற்றும் ஷவர்மா தயாரித்த நேபாளத்தைச் செர்ந்த தொழிலாளியை போலீஸார் கைது செய்தனர்.
தரமில்லாத சிக்கன் ஷவர்மா சாப்பிட்டதால் உயிர் பலிபோவது கேரளத்தில் இது முதன்முறை இல்லை. 2012 ஜூலையில் திருவனந்தபுரத்தில், கடையில் ஷவர்மா வாங்கி சாப்பிட்ட இளைஞர் ஒருவர் மரணமடைந்த சம்பவம் நடைபெற்றது.