சர்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியில் கோடை விடுமுறையை முன்னிட்டு சுற்றுலாப் பயணிகள் குவிந்து வருகின்றனர். கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயில், கடலின் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலை, கடற்கரையில் அமைந்துள்ள திருப்பதி வேங்கடேச பெருமாள் கோயில், விவேகானந்தா கேந்திரா வளாகத்தில் அமைந்துள்ள ராமாயண கண்காட்சி, சூரியன் உதிப்பது, சூரியன் மறைவது என சுற்றுலாப் பயணிகள் காண வேண்டிய பலவும் கன்னியாகுமரியில் உள்ளன. அதிலும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில் வெளியூர் பக்தர்கள் அதிக அளவில் சென்று வருகின்றனர். இந்த நிலையில் கோயிலுக்குச் செல்லும் பக்தர்களிடம் ‘கோடி அர்ச்சனை’ என்ற பெயரில் 20 ரூபாய் வசூலித்து வருவதாகவும். அதுவும் ஒரு விதத்தில் சிறப்பு கட்டண தரிசனத்துக்கான அடாவடி வசூல் எனவும் கூறும் வீடியோ ஒன்று சமீபத்தில் வெளியானது. அந்த வீடியோவில் கன்னியாகுமரி மாவட்ட ஐயப்பா சேவா சமாஜம் அமைப்பாளரான நாஞ்சில் ராஜா என்பவர் ‘எதற்காக பக்தர்களிடம் பணம் வசூலிக்கிறீர்கள்’ எனக் கேள்வி எழுப்பியிருந்தார்.
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில் உண்மையில் என்ன்ன நடக்கிறது என அறிய விசாராணையில் இறங்கினோம். ஐயப்பா சேவா சமாஜம் மாவட்ட அமைப்பாளர் நாஞ்சில் ராஜாவிடம் பேசினோம்,
“கடந்த பெளர்ணமி தினத்தில் நாங்கள் கன்னியாகுமரி கோயிலுக்குச் சென்றிருந்தோம். அப்போது கோடி அர்ச்சனை என்ற பெயரில் பக்தர்களிடம் 20 ரூபாய் கட்டணம் வசூலித்து கொண்டிருந்தார்கள். ஏற்கெனவே இதுபோன்று வசூலித்ததால் நாங்கள் இணை ஆணையரிடம் புகார் சொன்னோம். அதற்கு அவர் ‘அங்கு கண்காணிப்பு கேமரா வைத்து அலுவலகத்தில் இருந்தே கண்காணிக்கிறேன்’ எனக் கூறினார். ஆனாலும் ‘இப்போதும் பணம் வசூலித்துக்கொண்டுதான் இருக்கிறீர்களே’ எனக் கேட்டேன்.