தமிழகம் முழுவதும் 1ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு முடிய மாணவர்களுக்கு முழு ஆண்டுத் தேர்வு மே 13-ம் தேதியுடன் முடிவுபெற்று மே 14-ம் தேதி முதல் கோடை விடுமுறை விடப்பட்டிருக்கிறது.
இந்நிலையில், “தேர்வு சார்ந்த விடைத்தாள் திருத்தும் பணிகள், மதிப்பெண் பட்டியல் தயார் செய்யும் பணிகள் மற்றும் ஒருங்கிணைந்த மதிப்பெண்களுடன் கூடிய தேர்ச்சிப் பட்டியல், பதிவேடுகள் தயார் செய்யும் பணிகளுக்காக அனைத்து ஆசிரியர்களும் பணிக்கு வரவேண்டும். மாணவர்களின் தேர்ச்சித் தொடர்பான பணிகளை ஆசிரியர்கள் 20-ம் தேதிக்கு முன்னதாக முடித்துவிட்டால், ஆசிரியர்கள் பள்ளிக்கு வரத்தேவையில்லை” என கல்வித்துறை இயக்குநர் தெரிவித்திருக்கிறார்.
இந்த நிலையில்தான், சிவகங்கை மாவட்டத்தில் மட்டும் அனைத்து பணிகளையும் முடித்திருந்தாலும், ஆசிரியர்கள் கட்டாயம் 20ம் தேதி வரையிலும் பள்ளிக்கு வர வேண்டும் என்ற அதிகாரிகளின் வாய்மொழி உத்தரவால், ஆசிரியர்கள் அதிருப்தியில் உள்ளனர்.
இதுகுறித்து ஆசிரியர்கள் சிலரிடம் கேட்டபோது, “மற்ற கல்வி மாவட்டங்களில் எல்லாம், மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை 20ம் தேதிக்கு முன்னதாக எமிஸில் ஏற்றிவிட்டால் விடுமுறையில் செல்லலாம் எனத் தெரிவித்திருக்கின்றனர். ஆனால், சிவகங்கை மாவட்டத்தில் அப்படி எங்களுக்கு முறையான அறிவிப்பு வரலை. மாறாக, சி.இ.ஓ உத்தரவின் பேரில் வட்டாரக் கல்வி அலுவலர்கள், தலைமையாசிரியர்களை வைத்து கூட்டம் நடத்தி, 20ம் தேதி வரையிலும் கண்டிப்பாக, ஆசிரியர்கள் பள்ளிக்கு வரவேண்டும் என்று அறிவுறுத்தியிருக்கின்றனர். அதன்படி, தலைமையாசிரியர்கள் பணிகளை முடித்திருந்தாலும் கூட பள்ளிக்கு வரவேண்டும் என்று நிர்பந்திக்கின்றனர். இதனால், எங்களுக்குத் தேவையில்லாத மன உளைச்சல் ஏற்பட்டிருக்கிறது” என்றனர்.
இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, “அனைத்து பணிகளைம் முடித்ததாகத் தலைமையாசிரியர் உறுதியளித்தால், ஆசிரியர்கள் விடுமுறையில் செல்லலாம். கட்டாயம் 20ம் தேதி வரையிலும் வரவேண்டும் என்று நிர்பந்திக்கவில்லை” என்றனர்.