இதனை அடுத்து, இரு நாடுகள் இடையே போர்பதற்றம் நீடித்த நிலையில், பேச்சுவார்த்தை மூலம் சுமூக நிலை கொண்டுவரப்பட்டது.
இதற்கிடையே, இந்திய எல்லையில் யாரும் ஊடுருவவில்லை என்று பிரதமர் மோடி பேசியதும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. யாரும் ஊடுருவவில்லை என்றால் 20 வீரர்களை கொன்றது யார்? என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின.
இந்த நிலையில், மே மாதத்தில் சீன ராணுவம் இந்திய எல்லையில் ஊடுருவியது குறித்த ஆவணங்கள், பாதுகாப்பு அமைச்சக இணையதளத்தில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தன.
அதில் குறிப்பாக, கல்வான் பள்ளத்தாக்கில் சீன ஊடுருவல் மே 5-ம் தேதியில் இருந்து அதிகமாக இருந்தது. குக்ராங் நலா, பாங்கோங் ஏரியின் வடக்கு கரை ஆகிய இடங்களில் சீன ராணுவம் அத்துமீறியது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும், ராணுவம் மற்றும் தூதரக மட்டத்திலான பேச்சுவார்த்தைகள் நடந்து சுமூக தீர்வு எட்டப்படும் வரை எல்லையில் பதற்றம் நீடிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலைமையைத் தணிக்க இரு தரப்பு ஆயுதப் படைகளுக்கிடையில் தரைமட்ட பேச்சுவார்த்தை நடந்தது. ஜூன் 6-ம் தேதி ஒரு கார்ப்ஸ் தளபதிகளின் கொடி கூட்டம் நடைபெற்றது. இருப்பினும், ஜூன் 15 அன்று இரு தரப்பினருக்கும் இடையே ஒரு வன்முறை நேருக்கு நேர் சம்பவம் நடந்தது, இதன் விளைவாக இரு தரப்பும் உயிரிழந்தனர் எனக் கூறப்பட்டிருந்தது.
சீன ஊடுருவலை மத்திய அரசு ஒப்புக்கொண்டது என்று கூறப்பட்ட முதல் ஆவணமாக இது பார்க்கப்பட்ட நிலையில், திடீரென பாதுகாப்பு அமைச்சகத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட இந்த ஆவணங்கள் நீக்கப்பட்டுள்ளன. இந்த விவகாரமும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.