கேரள மாநிலம் காசர்கோடு செறுவத்தூரைச் சேர்ந்தவர் சஹானா(20). இவர் நகைகடை விளம்பரங்களில் மாடலாக இருந்துவந்தார். இவருக்கும் கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்த சஜ்ஜாத் என்பவருக்கும் ஒரு வருடத்துக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இதற்கிடையே சினிமாவில் நடிக்க வாய்ப்பு வந்துள்ளது. இதையடுத்து சினிமாவில் நடித்தும் வந்துள்ளார். சஹானாவும், சஜ்ஜாத்தும் கடந்த சில மாதங்களாக கோழிக்கோடு பறம்பில் பஜார் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்று முந்தினம் நள்ளிரவு திடீரென சஹானா இறந்துள்ளார். வீட்டு அறையில் உள்ள ஜன்னல் கம்பியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டதாக அவரது கணவர் சஜ்ஜாத் கூறியுள்ளார். ஆனால், சஜ்ஜத் ஏற்கனவே மகளை கொடுமைப்படுத்தி வந்ததாக சஹானாவின் தாய் உமைபா கூறியிருக்கிறார்.
சஹானா வசித்துவந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் கூறுகையில், “இரவு நேரத்தில் சஹானா பேசவில்லை என அவரின் கணவர் சஜ்ஜாத் சத்தம்போட்டார். நாங்கள் அங்குசென்று பார்த்தபோது சஜ்ஜாத் தனது மடியில் சஹானாவின் உடலை கிடத்தியிருந்தார். அவர் ஜன்னலில் தூக்குப்போட்டு தற்கொலை செய்ததாக தெரிவித்தார். இதுபற்றி வீட்டின் உரிமையாளர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார். போலீஸார் வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சஜ்ஜாத்தையும் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்” என்றனர்.