சமீப காலங்களாகத் தமிழகத்தில் கஞ்சா புழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அதனைத் தடுக்க காவல்துறையும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருந்தபோதிலும், கஞ்சா புழக்கம் குறைந்தபாடில்லை. இந்த நிலையில் தான் தமிழகத்தில் `ஆபரேசன் கஞ்சா வேட்டை 2.0′ என்ற திட்டத்தின் மூலமாகத் தமிழகத்தில் கஞ்சா புழக்கத்தைக் கட்டுப்படுத்த தமிழகக் காவல்துறை முடிவு செய்தது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபடுபவர்களை காவல்துறையினர் கைது செய்து வருகின்றனர்.
இந்தநிலையில்தான், சென்னை மதுரவாயல் பகுதியில் கஞ்சா கடத்திவரப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இந்த தகவலையடுத்து, மதுரவாயல் – தாம்பரம் பைபாஸ் சாலையில் போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த ஒரு ஆட்டோவில் சோதனை செய்தபோது எட்டு கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து, அந்த ஆட்டோவில் இருந்த இளம்பெண் பிரியங்கா, கார்த்திக், பாபு ஆகிய மூவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். நீதிமன்ற உத்தரவையடுத்து அவர்கள் மூவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.