புதுடில்லி : பதிவுபெற்று தற்போது செயல்பாட்டில் இல்லாத 111 அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளை தங்கள் பதிவேட்டில் இருந்து நீக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.
தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டு, அங்கீகாரம் பெறாத 2,800 அரசியல் கட்சிகள் நாடு முழுதும் உள்ளன. இந்த கட்சிகள் ஆண்டுதோறும் தங்கள் வரவு – செலவு கணக்குகளை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும். ஆனால், பல்வேறு மாநிலங்களை சேர்ந்த அங்கீகரிக்கப்படாத கட்சிகள் தங்கள் வரவு – செலவு கணக்கை பல ஆண்டுகளாக தாக்கல் செய்யவில்லை. இப்படிப்பட்ட கட்சிகள், நன்கொடைகள் பெற்று பல்வேறு நிதி முறைகேடுகளில் ஈடுபட்டு வருகின்றன.
இந்த கட்சிகளை களை எடுக்க தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் முடிவு செய்துள்ளார். பதிவு பெற்றும் செயல்பாட்டில் இல்லாத கட்சிகளை சரிபார்த்து அவற்றை மாநில தேர்தல் ஆணைய பதிவேட்டில் இருந்து நீக்க உத்தரவிட்டார்.இதையடுத்து, செயல்பாட்டில் இல்லாத பல்வேறு கட்சிகளுக்கு கடிதம் அனுப்பி சரிபார்க்கும் பணிகள் துவங்கின. அதில் பல கடிதங்கள் தேர்தல் ஆணையத்துக்கே திரும்ப வந்தன.
இது போல செயல்பாட்டில் இல்லாத 87 கட்சிகளை தேர்தல் ஆணையம் நீக்கி உள்ளது. மேலும், 111 கட்சிகளை நீக்க முடிவெடுத்து உள்ளது. இந்த கட்சிகள், 30 நாட்களுக்குள் தகுந்த ஆவணங்களுடன் தேர்தல் ஆணையத்தை தொடர்பு கொண்டால், பதிவேடு நீக்கம் ரத்து செய்யப்பட வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுஉள்ளது.
Advertisement