ஜனாதிபதி பதவிக்கான தேர்தலில், தான் நிறுத்தும் வேட்பாளரின் வெற்றியை உறுதி செய்ய பா.ஜ.,வுக்கு மற்ற கட்சிகளின் ஆதரவு தேவை. முரண்டுபிடிக்கும் மூன்று முக்கிய கட்சிகளின் ஆதரவு கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவிக் காலம் முடிவுக்கு வருவதால், புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஜூலையில் நடக்க உள்ளது.இந்தத் தேர்தலில், லோக்சபா மற்றும் ராஜ்யசபாவை சேர்ந்த, 776 எம்.பி.,க்களும், நாடு முழுதும் உள்ள, 4,120 எம்.எல்.ஏ.,க்களும் ஓட்டளிக்க உள்ளனர். ஒரு எம்.பி., ஓட்டின் மதிப்பு, 708 ஆக உள்ளது. மாநிலத்துக்கு ஏற்ப, எம்.எல்.ஏ.,வின் ஓட்டு மதிப்பு மாறும்.
ஓட்டு மதிப்பு
தற்போதைய நிலையில், மொத்த ஓட்டு மதிப்பு, 10 லட்சத்து, 98 ஆயிரத்து, 903 ஆகும். இதில் ஐந்து லட்சத்து, 49 ஆயிரத்து, 452 ஓட்டுகள் பெறுபவரே வெற்றி பெறுவார்.உத்தரகண்ட் மற்றும் உத்தர பிரதேசத்தில், எம்.எல்.ஏ.,க்கள் எண்ணிக்கை குறைந்ததால், பா.ஜ.,வின் ஓட்டு மதிப்பு குறைந்துள்ளது. அக்கட்சிக்கு, 5.42 லட்சம் ஓட்டு மதிப்பு உள்ளது. அதே நேரத்தில் பா.ஜ.,வுக்கு எதிரான கட்சிகளின் ஓட்டு மதிப்பு, 4.49 லட்சமாக உள்ளது. இவ்விரு கூட்டணியிலும் இல்லாத, ஒய்.எஸ்.ஆர்.காங்., மற்றும் பிஜு ஜனதா தளத்துக்கு, 75 ஆயிரத்து 528 ஓட்டு மதிப்புகள் உள்ளன.
இந்நிலையில், ஜனாதிபதி தேர்தலில், பா.ஜ., நிறுத்தும் வேட்பாளரின் வெற்றி, மூன்று முக்கிய கட்சிகளின் கையில் உள்ளது. ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் மற்றும் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளம் ஆகியவை இதில் முக்கியமானவை. அடுத்து, பீஹாரில் பா.ஜ.,வுடன் இணைந்து கூட்டணி அரசு அமைத்துள்ள முதல்வர் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளத்தின் ஆதரவு தொடருமா என்ற கேள்விக்குறியும் ஏற்பட்டுள்ளது.
மத்திய அரசு உறுதி
ஆந்திராவில் இருந்து தெலுங்கானா பிரிக்கப்பட்டபோது, ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து அளிப்பதாக, முந்தைய காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு உறுதி அளித்திருந்தது. ஆனால், இதுவரை அது நிறைவேற்றப்படவில்லை. அதனால், 22 லோக்சபா எம்.பி.,க்கள் மற்றும் ஆறு ராஜ்யசபா எம்.பி.,க்கள் உள்ள ஒய். எஸ்.ஆர். காங்., கட்சியை சமாதானப்படுத்துவது, பா.ஜ.,வுக்கு முக்கியமாகும்.அதுபோல, சட்ட மேலவை அமைக்க அனுமதி கோரி, ஒடிசா அரசு, 2018ல் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பியது. இது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.
மொத்தம், 20 எம்.பி.,க்கள் உள்ள பிஜு ஜனதா தளத்தின் ஆதரவு, பா.ஜ., ஜனாதிபதி வேட்பாளருக்கு கிடைக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.தற்போது, பீஹாரில் ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ., கூட்டணி அரசு அமைந்துள்ளது. பீஹாரில் இருந்து, 17 லோக்சபா எம்.பி.,க்களை பெற்ற பா.ஜ., சார்பில் ஐந்து பேர் மத்திய அமைச்சர்களாக உள்ளனர். அதே நேரத்தில், 16 எம்.பி.,க்கள் உள்ள ஐக்கிய ஜனதா தளத்தை சேர்ந்த ராம் சந்திர பிரசாத் சிங் மட்டுமே தற்போது மத்திய அமைச்சராக உள்ளார்.தன் கட்சிக்கு, இரண்டு கேபினட் மற்றும் இரண்டு இணை அமைச்சர்கள் பதவியை நிதிஷ் குமார் கேட்டிருந்தார்.
ஆனால், அது ஏற்கப்படவில்லை. இதனால், அவர் கோபத்தில் உள்ளார்.தற்போது ராம் சந்திர பிரசாத் சிங்கின், ராஜ்யசபா எம்.பி., பதவி முடிவுக்கு வருகிறது. இதற்காக நடக்கும் தேர்தலில், அனில் குமார் ஹெக்டேவை நிதிஷ்குமார் வேட்பாளராக அறிவித்துள்ளார்.
கூட்டணி தொடருமா
அதனால், ராம்சந்திர பிரசாத், மத்திய அமைச்சராக தொடருவாரா அல்லது பா.ஜ.,வுக்கு தாவுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.இதோடு வேறு பல விஷயங்களிலும், நிதிஷ்குமார் பா.ஜ.,வுடன் மன வருத்தத்தில் உள்ளார். அதனால், பீஹாரில் கூட்டணி தொடருமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.இந்த பிரச்னைகளை சமாளித்து, இந்த மூன்று முக்கிய கட்சிகளின் ஆதரவைப் பெற பா.ஜ., என்ன முயற்சி எடுக்கப் போகிறது என்பதே, தற்போது டில்லி அரசியலில் விவாதப் பொருளாக உள்ளது.
?- நமது சிறப்பு நிருபர் –