Saturday, July 2, 2022
Homeஅரசியல் செய்திகள்ஜனாதிபதி வேட்பாளர் தேர்வில் எதிர்க்கட்சிகளிடம் ஒற்றுமை இல்லை!| Dinamalar

ஜனாதிபதி வேட்பாளர் தேர்வில் எதிர்க்கட்சிகளிடம் ஒற்றுமை இல்லை!| Dinamalar

ஜனாதிபதி வேட்பாளரை தேர்வு செய்யும் விவகாரத்தில் எதிர்க்கட்சிகளிடையே ஒற்றுமை இல்லை. அதேபோல, வேட்பாளரின் பெயர்களை முன்னரே விளம்பரப்படுத்தியது தவறு என்ற மனநிலைக்கும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் வந்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல், அடுத்த மாதம் 18ல் நடக்கிறது. இதில் பா.ஜ., சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளரை எதிர்த்து, எதிர்க்கட்சிகளின் சார்பில் பொது வேட்பாளரை நிறுத்துவதற்கான நடவடிக்கைகள் துவங்கி உள்ளன. தேசியவாத காங்., தலைவர் சரத் பவாரை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்த முதலில் பரிந்துரைக்கப்பட்டது. அதை அவர் நிராகரித்தார். அதன் பின், ஜம்மு – காஷ்மீர் முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டு கட்சி தலைவருமான பரூக் அப்துல்லாவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டது. அவரும் போட்டியிட ஒப்புக் கொள்ளவில்லை.

இந்நிலையில், எதிர்கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் டில்லியில் கடந்த 15ம் தேதி நடந்தது. இதில், தேசியவாத காங்., தலைவர் சரத் பவார், மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் காங்., தலைவருமான மம்தா பானர்ஜி உட்பட 17 எதிர்கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர். 5 கட்சிகள் பங்கேற்கவில்லை. இந்த கூட்டத்தில், மேற்கு வங்க முன்னாள் கவர்னர் கோபாலகிருஷ்ண காந்தியின் பெயரை மம்தா முன்மொழிந்தார். மீண்டும் 21ல் கூடி விவாதிக்க அந்த கூட்டத்தின் இறுதியில் முடிவெடுக்கப்பட்டது. இன்று கூட்டம் நடக்கவுள்ள நிலையில், ‘ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட விருப்பமில்லை’ என, கோபாலகிருஷ்ண காந்தி நேற்று கூறினார்.

latest tamil news

‘ஜனாதிபதி வேட்பாளர் தேர்வை முன்னரே விளம்பரப் படுத்தாதீர்கள்’ என, தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் ஏற்கனவே கூறியிருந்தார். ‘அவர் கருத்து மிக சரியானது’ என, சரத் பவார் தற்போது கருதுவதாக, தேசியவாத காங்., மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்தார். சந்திரசேகர ராவை எதிர்க்கட்சிகள் குழுவில் இணைக்க சரத்பவார் முயற்சி மேற்கொண்டு வருகிறார். இதில், காங்கிரஸ் மற்றும் திரிணமுல் காங்., ஆர்வம் காட்டவில்லை.

இந்நிலையில், டில்லியில் இன்று நடக்கவுள்ள எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டத்தில் மம்தா பானர்ஜி பங்கேற்கவில்லை. ‘அவருக்கு பதிலாக அவரது மருமகனும், எம்.பி.,யுமான அபிஷேக் பானர்ஜி பங்கேற்பார்’ என, அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு சரத் பவாரை அதிருப்திக்குள்ளாக்கி உள்ளது. எதிர்க் கட்சிகளுக்குள் ஒற்றுமை இல்லை என அவர் கருதுவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தக் கூட்டத்தில் மம்தா நேரடியாக பங்கேற்காததால், பொது வேட்பாளரை தேர்வு செய்யும் எதிர்க்கட்சிகளின் முயற்சிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக அரசியல் ஆர்வலர்கள் கருதுகின்றனர்.

– புதுடில்லி நிருபர் –

Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments