புதுடில்லி-‘ஜன கண மன’ என துவங்கும் நம் தேசிய கீதத்திற்கு நிகரான அந்தஸ்தை ‘வந்தே மாதரம்’ என பாடப்படும் தேசிய பாடலுக்கும் வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி, டில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
பொதுநல மனு தாக்கல்
பா.ஜ., தலைவரும், மூத்த வழக்கறிஞருமான அஸ்வினி குமார் உபாத்யாயா, டில்லி உயர் நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்துஉள்ளார். அதில் கூறப்பட்டுஉள்ளதாவது:இந்திய விடுதலை போராட்டத்தில், பக்கிம் சந்திர சாட்டர்ஜியின் ‘வந்தே மாதரம்’ பாடல் முக்கிய பங்கு வகித்துள்ளது. கடந்த, 1950ல், அரசியல் அமைப்பு சபை தலைவர் ஜனாதிபதி ராஜேந்திர பிரசாத் பேசும்போது, ‘ரவீந்திர நாத் தாகூர் இயற்றிய தேசிய கீதமான ஜன கண மன வுக்கு நிகரான கவுரவத்தை, தேசிய பாடலான வந்தே மாதரத்திற்கும் வழங்க வேண்டும்’ என்றார். வந்தே மாதரம் பாடல் ஒட்டுமொத்த தேசத்தின் குணாதிசயத்தை குறிக்கிறது. ஜன கண மன கீதம், மாநிலங்களின் தனித் தன்மைகளை விவரிக்கிறது.
எனவே, தேசிய கீதத்திற்கு நிகரான கவுரவத்தை தேசிய பாடலுக்கும் வழங்க வேண்டும். இரண்டுக்கும் தேசிய அளவில் ஒரே மாதிரியான மரியாதை தரப்பட வேண்டும். அதற்கான கொள்கையை மத்திய அரசு உருவாக்க உத்தரவிட வேண்டும். வந்தே மாதரம் பாடலை எந்தவொரு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளிலும் பாடக் கூடாது எனவும் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.
‘நோட்டீஸ்’
ஏனெனில் அவ்வாறு பாடினால், அதற்கான மரியாதையை அங்கு கூடியுள்ள அனைவரும் வழங்கும் நிலை ஏற்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இந்த மனுவை விசாரித்த டில்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பொறுப்பில் உள்ள விபின் சங்கி தலைமையிலான அமர்வு, இது தொடர்பாக பதில் அளிக்கும்படி மத்திய அரசு மற்றும் டில்லி அரசுக்கு ‘நோட்டீஸ்’ அனுப்ப உத்தரவிட்டது.
Advertisement