Wednesday, June 29, 2022
Homeதமிழக சிறப்புச் செய்திகள்ஜிப்மர் விவகாரம்: ``இந்தித் திணிப்பும் இல்லை, வெறியும் இல்லை..!" – ஆளுநர் தமிழிசை விளக்கம்

ஜிப்மர் விவகாரம்: “இந்தித் திணிப்பும் இல்லை, வெறியும் இல்லை..!" – ஆளுநர் தமிழிசை விளக்கம்

புதுச்சேரி கோரிமேட்டில் மத்திய அரசின் ஜிப்மர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை இயங்கிவருகிறது. இங்கு அலுவல்ரீதியிலான அறிக்கைகள், சுற்றறிக்கைகள் அனைத்தும் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் வழங்கப்படுகின்றன. இந்த நிலையில், நேற்று முன்தினம் (7-ம் தேதி) ஜிப்மர் மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் ராகேஷ் அகர்வால் பெயரில் ஒரு சுற்றறிக்கை வெளியானது. ஜிப்மர் அலுவலகப் பணிக்குப் பயன்படுத்தப்படும் மொழி குறித்த அந்த அறிக்கையில், அலுவலக மொழி 1976-ம் ஆண்டு சட்ட விதியைக் குறிப்பிட்டு, “மத்திய அரசுத்துறை மற்றும் நிறுவனங்களில் இந்தி மற்றும் ஆங்கிலம் அலுவலக மொழியாகப் பயன்படுத்தப்பட்டுவருகின்றன.

தமிழிசை சௌந்தரராஜன்

நாடாளுமன்றக்குழு அளித்துள்ள வாக்குறுதியின்படி ஜிப்மர் மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரியில் பயன்படுத்தப்படும் அனைத்து அலுவலகப் பதிவேடுகள், பணியாளர் புத்தகம், பணியாளர் பதிவுகள் என அனைத்தும் இந்தி மற்றும் ஆங்கில மொழியில் மட்டுமே இருக்க வேண்டும். கூடுமானவரை அவையும் இந்தி மொழியில் மட்டுமே பயன்படுத்த வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. சமூக வலைதளங்களில் வெளியான இந்தச் சுற்றறிக்கை கடும் விமர்சனத்துக்குள்ளானது. இது தொடர்பாக தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில், “ஒன்றிய அரசுக்கு ஏன் இந்த மொழி வெறி…

ஒன்றிய அரசு திணிக்க முயலும் இந்தி, வேலையில்லாத் திண்டாட்டத்தைத் தீர்க்குமா… சமத்துவமின்மையை மாற்றுமா… ஏதேனும் ஒரு சமூகப் பிரச்னையையாவது திருத்துமா… விரிசல்களை ஆழப்படுத்துவது நல்லதல்ல” எனப் பதிவிட்டிருந்தார். அவரைத் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரவிக்குமார், சு.வெங்கடேசன், வைகோ, தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் உள்ளிட்டவர்கள் ஜிப்மர் நிர்வாகத்துக்கு எதிராக கண்டன அறிக்கைகளை வெளியிட்டனர். புதுச்சேரியில் எதிர்க்கட்சியாக இருக்கும் தி.மு.க., ஜிப்மர் நிர்வாகத்தைக் கண்டித்தும், சுற்றறிக்கையை வாபஸ் பெற வேண்டும் என்று அறிவுறுத்தியும் இன்று ஜிப்மர் மருத்துவமனையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது.

திமுக ஆர்ப்பட்டம்

இந்த நிலையில், சென்னையிலிருந்து இன்று புதுச்சேரி திரும்பிய துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் நேரடியாக ஜிப்மர் மருத்துவமனைக்குச் சென்றார். நிர்வாகப் பிரிவு அலுவலகத்திலிருக்கும் இயக்குநர் அலுவலகத்தில் இயக்குநர் ராகேஷ் அகர்வால் மற்றும் அதிகாரிகளைச் சந்தித்துப் பேசினார். சுமார் 20 நிமிட ஆலோசனைக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், “தமிழகத்திலும் புதுச்சேரியிலும் ஜிப்மரில் இந்தித் திணிக்கப்படுவதாக ஒரு கருத்து நிலவுகிறது. நிர்வாகரீதியாக வழங்கப்பட்ட சுற்றறிக்கை தவறாக திரிக்கப்பட்டு, இந்தித் திணிக்கப்படுவதாக செய்தி உலா வந்திருக்கிறது.

கொரோனா காலத்தில் தமிழகம், புதுச்சேரி மக்களுக்கு ஜிப்மர் ஆற்றிய சேவை அளப்பரியது. ஜிப்மர் மருத்துவமனையில் மொழித் திணிப்பு இல்லை. உட்கட்டமைப்புக்காக, நிர்வாகரீதியாக கொடுக்கப்பட்ட சுற்றறிக்கைதான் தவறாக திரிக்கப்பட்டிருக்கிறது. மொத்தம் நான்கு சுற்றறிக்கைகள் வெளியிடப்பட்டிருக்கின்றன. அவற்றில் முதல் இரண்டு சுற்றறிக்கைகள் மட்டும் வெளியில் வந்திருக்கின்றன. மற்ற சுற்றறிக்கைகளில் பொதுமக்கள் தொடர்பான கருத்துகள், துறைரீதியானவை தமிழில் இருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. மேலும், உள்ளூர் மொழியான தமிழைக் கட்டாயம் பயன்படுத்த வேண்டும் எனக் குறிப்பிட்டிருக்கின்றனர்.

ஜிப்மர் மத்திய அரசின் நிறுவனம். இங்கு இந்தி மட்டுமே தெரிந்தவர்களும் பணியாற்றுகின்றனர். அவர்களுக்காக இந்தியைப் பயன்படுத்தும்படி கூறப்பட்டிருக்கிறது. ஏற்கெனவே உள்ள சட்டவிதிகளை நினைவுபடுத்தி உறுதிப்படுத்தும் வகையில்தான் சுற்றறிக்கை வெளியிட்டிருக்கின்றனர். ஜிப்மரில் தமிழிலேயே பெயர்ப் பலகைகள் இருக்கின்றன. இயக்குநர் அலுவலகத்தில்கூட அவரின் பெயர் தமிழில்தான் முதலில் எழுதப்பட்டிருக்கிறது.

அடுத்தபடியாக ஆங்கிலம், மூன்றாவதாகத்தான் இந்தி மொழி பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இந்தி மட்டும் தெரிந்த பணியாளர் சேவைப் புத்தகத்தில் இந்தியைப் பயன்படுத்தும்படி கூறியிருக்கின்றனர். அதேநேரத்தில் நோயாளிகளுக்கான மருத்துவ சேவை மற்றும் குறிப்புகள் தமிழில் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. எனவே ஜிப்மரில் இந்தித் திணிப்போ, இந்தி வெறியோ இல்லை. ஜிப்மரின் மருத்துவ சேவைகள் தொடர நாம் அனுமதிக்க வேண்டும். அதற்கு எந்த இடையூறும் இல்லாமல் பாதுகாக்க வேண்டும். எனவே போராட்டம் என்பது தேவையற்றது” என்றார்.

Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments