பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனமான ‘ஜி ஸ்கொயர்’, கெவின் என்பவர் ஜூனியர் விகடன் பெயரைச்சொல்லி பணம் கேட்டு மிரட்டுவதாக, விகடனுக்கு எதிராகப் புகார் அளித்திருந்தது. இந்த புகாரின் அடிப்படையில், வழக்கு பதியப்பட்டு கெவின் என்பவர் மைலாப்பூர் போலீஸாரால் மே 22-ம் தேதி அதிகாலை 2 மணியளவில் கைது செய்யப்பட்டார். ஆனால், ‘ஜி ஸ்கொயர்’ புகாரை முற்றிலுமாக ஜூனியர் விகடன் மறுத்திருக்கிறது. ஜூனியர் விகடனுக்கு எதிராக வழக்கு பதியப்பட்டதற்கு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், சட்டமன்ற எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் தற்போது, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், அந்தக் கட்சியின் இளைஞரணி தலைவர் யுவராஜா ஆகியோர் தனித்தனியே அறிக்கை வெளியிட்டு கண்டனம் தெரிவித்திருக்கின்றனர்.
“தமிழக அரசு, காவல் நிலையத்தில் பதிவு செய்யப்படும் வழக்கின் உண்மைத் தன்மைக்கேற்ப நடவடிக்கை அமைய வேண்டும் என்பதில் சமரசத்துக்கு இடம் கொடுக்கக்கூடாது. காரணம் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டு அதன் மூலம் விசாரணை, நடவடிக்கை என்றால் அதில் நியாயம் இருக்க வேண்டும்.
அதைவிடுத்து வழக்கு போடவைத்து, பொய்யான குற்றச்சாட்டுக்கு ஆளாக்குவது ஏற்புடையதல்ல. அது மட்டுமல்ல புகாரை வைத்து, உண்மைக்குப் புறம்பாகக் கைது செய்வதும், மிரட்டல் விடுக்கும் வகையில் நடவடிக்கைகளில் ஈடுபடுவதும் சட்டம் ஒழுங்குக்குப் பாதிப்பை ஏற்படுத்தும்.
எனவே தற்போது எழுந்துள்ள முக்கியப் பிரச்னையாக இருக்கும் சட்டம் ஒழுங்கில் காவல் துறையினர் புகார், வழக்கு, விசாரணை, நடவடிக்கை போன்றவற்றில் உண்மைத்தன்மைக்கு ஏற்ப பொய்யான புகார்களைப் புறந்தள்ளி, குற்றம் செய்தவருக்குத் தண்டனையும், நிரபராதிகளைக் காப்பாற்றியும், பத்திரிகை சுதந்திரம், பொது மக்களின் நியாயம் ஆகியவற்றைப் பாதுகாக்கவும் தமிழக அரசு முன்வர வேண்டும் என்று த.மா.கா சார்பில் வலியுறுத்துகிறேன்” என த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் தனி அறிக்கையில் வலியுறுத்தியிருக்கிறார்.
பத்திரிகைகள், ஊடகங்கள் மீது போடப்படும் பொய் வழக்குகள் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது தெரிந்தும், கருத்துச் சுதந்திரத்தை நசுக்கும் செயல் கண்டனத்துக்குரியது. மேலும், ஆளும் தி.மு.க அரசு பத்திரிகைகளின் சுதந்திரத்தை பறிக்க நினைத்தால் அதை மக்கள் ஒருபோதும் அனுமதிக்கமாட்டார்கள்” என அந்தக் கட்சியின் இளைஞரணி தலைவர் யுவராஜா தனியாக அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.