உ.பி., மாநிலம் வாரணாசியில் உள்ள புகழ்பெற்ற விஸ்வநாதர் கோவிலை ஒட்டி, ஞானவாபி மசூதி உள்ளது. இதன் ஒருபக்க வெளிப்புற சுவரில், ஹிந்து கடவுளின் உருவங்கள் உள்ளன. இவற்றை வழிபட இதுவரை, ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. இந்நிலையில், ஹிந்து கடவுள் உருவங்களை தினமும் வழிபட அனுமதிக்கக் கோரி, ஹிந்து பெண்கள் சிலர் மற்றும் ஹிந்து அமைப்புகள் சார்பில், வாரணாசியில் உள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இதை ஏற்ற நீதிமன்றம், மசூதி வளாகத்தில் ஆய்வு செய்து, ‘வீடியோ’வாக பதிவு செய்து தாக்கல் செய்ய உத்தரவிட்டது. இதற்காக, ஐந்து பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவினர் நடத்திய ஆய்வில், மசூதியில் உள்ள சிறிய குளத்தில், சிவலிங்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக, மனுதாரர்கள் தரப்பில் நீதிமன்றத்தில் நேற்று தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்ட பகுதியை, ‘சீல்’ வைக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டது. அந்தப் பகுதிக்குள் யாரும் நுழையாத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யும்படி, மாவட்ட கலெக்டர், போலீஸ் கமிஷனர் மற்றும் சி.ஆர்.பி.எப்., எனப்படும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் வாரணாசி பிரிவுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், மசூதி வளாகத்தை ஆய்வு செய்வதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. மசூதியில் கண்டறியப்பட்டதாக கூறுவது சிவலிங்கம் அல்ல, செயற்கை நீரூற்று என, முஸ்லிம் தரப்பில் வாதாடப்பட்டது. இதனை தொடர்ந்து நீதிபதிகள் தங்கள் உத்தரவில், சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படும் இடத்தை பாதுகாக்க வேண்டும் எனவும், முஸ்லீம்கள் மசூதியில் தொழுகையை தொடரலாம் எனவும் தெரிவித்தனர். மேலும் ஒரு நேரத்தில் 20 பேர் மட்டுமே தொழுகை செய்ய வேண்டும் என்ற வாரணாசி நீதிமன்றத்தின் உத்தரவையும் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் ரத்து செய்து உத்தரவிட்டனர்.