`டிசி கொடுத்து மாணவர்களை பள்ளியிலிருந்து நீக்க முடியாது; நீக்கக் கூடாது!' – சுகிர்தராணி

மாணவர்கள், தங்கள் ஆசிரியர்களுக்கு மனரீதியாகவோ உடல்ரீதியாகவோ தொந்தரவு தந்தால், மாற்றுச் சான்றிதழில் உள்ள ‘மாணவரின் நன்னடத்தை’ என்கிற பிரிவில், என்ன காரணத்துக்காக அம்மாணவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதைக் குறிப்பிட்டு அவர்கள் பள்ளியிலிருந்து நிரந்தரமாக நீக்கப்படுவர் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். அனைத்துக் குழந்தைகளுக்கும் கல்வியை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு அரசின் வசம் இருக்கையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சரின் இக்கருத்து ஏற்புடையதல்ல எனப் பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

பள்ளி மாணவர்கள் (சித்திரிப்பு படம்)

பள்ளி மாணவர்கள் ஒழுங்கீனமான செயல்களில் ஈடுபடும் வீடியோக்கள், சமீபத்தில் சமூக வலைதளங்களில் பரவலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலைக்கு யார் காரணம்? இதற்கான தீர்வு என்ன? என்பது குறித்த உரையாடல்கள் நடத்த வேண்டிய தேவை உருவாகி இருக்கிறது. மாணவர்களின் ஒழுங்கீனத்துக்கு பெற்றோர், ஆசிரியர் மற்றும் ஒட்டுமொத்த சமூகமும் பொறுப்பேற்க வேண்டும் என்கிற கருத்து வலுப்பெற்று வருகிறது. இந்நிலையில், மாணவர்கள் மீது இப்படியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்கிற அமைச்சரின் அறிவிப்பை எப்படிப் பார்க்கலாம் என்பது குறித்து அரசுப்பள்ளி ஆசிரியை சுகிர்தராணியிடம் கேட்டோம்…

“பள்ளிக் கல்வித்துறையில் உள்ள நடைமுறைகள் குறித்து தெரியாமல் அமைச்சர் இப்படியான கருத்தைக் கூறியிருக்கிறார் என்றே நினைக்கிறேன். இப்படியெல்லாம் உடனடியாக, ஒழுங்கு நடவடிக்கை என்பதைக் குறிப்பிட்டு ஒரு மாணவரைப் பள்ளியிலிருந்து நீக்கிவிட முடியாது. அப்படியாக நீக்கவும் கூடாது. தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு TC என்கிற மாற்றுச்சான்றிதழ் கிடையாது. ரெக்கார்ட் ஷீட் மட்டுமேதான் உள்ளது. உயர்நிலைப் பள்ளியிலிருந்துதான் மாற்றுச்சான்றிதழ் தயாரிக்கப்படுகிறது. அனைத்துப் பள்ளிகளிலும் மாற்றுச்சான்றிதழில் 15 வது வரிசையில் உள்ள ‘மாணவரின் ஒழுக்கமும் பண்பும்’ (The Pupil’s conduct and character) என்கிற கேள்விக்கு ‘நன்று ‘ என்றுதான் எழுதுவார்கள். அந்த மாணவன் ஒழுங்கீனமான செயல்களில் ஈடுபட்டிருந்தாலுமே கூட அப்படியாகத்தான் எழுதப்படும்.

சுகிர்தராணி

தேர்வு முடிவுகளை அடிப்படையாக வைத்து 11வது வரிசையில் உள்ள ‘ மேல் வகுப்பிற்கு உயர்வு பெற தகுதியுடையவரா?’ என்கிற கேள்வியைத் தவிர்த்து மீதி விவரங்கள் அனைத்தும் ஆசிரியர்களால் முன்கூட்டியே எழுதப்பட்டு தயாராக இருக்கும். தேர்வு முடிவு வந்ததும் ‘தேர்ச்சி’ என்று குறிப்பிடப்பட்டு, தலைமையாசிரியரால் கையொப்பமிடப்பட்டு மாணவர்களுக்கு வழங்கப்படும். இதன் நகல் ஒன்று கையால் எழுதப்பட்டு அலுவலகத்தில் இருக்கும்.மாற்றுச் சான்றிதழ் தொலைந்து போனால் வேறொரு மாற்றுச்சான்றிதழ் பெற இந்த அலுவலக நகல் உதவும் என்பதே நடைமுறை.

அரசுப் பள்ளிகளில் பன்னெடுங்காலமாக உள்ள இந்த நடைமுறை கல்வி அமைச்சர் கூறியதால் மட்டுமே மாறி விடாது. ஒழுங்கீன செயல்களில் ஈடுபடும் மாணவருக்கு ‘மிக மோசம்’ என்றெழுதி, மாற்றுச்சான்றிதழைக் கொடுத்து வெளியே அனுப்பி விட முடியாது. இதுவரை தமிழ்நாட்டில் எந்த மாணவருடைய மாற்றுச் சான்றிதழிலாவது ‘நன்னடத்தை மோசம்’ என்று எழுதப்பட்டிருக்கிறதா என்றால், இருக்காது. மாற்றுச் சான்றிதழ் வழங்குவது தலைமையாசிரியர் பொறுப்பு. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் சொல்வதற்கு முன்னரே மாணவரின் ‘நடத்தை மோசம்’ எனப் பதிவு செய்யும் சுதந்திரம் தலைமையாசிரியருக்கு உண்டு. அப்படியிருந்தாலும் இதுவரை எந்தத் தலைமை ஆசிரியரும் அப்படி எழுதியதில்லை. இனி எழுதப்போவதுமில்லை.

ஆசிரியர்களை அடிக்கப் பாய்ந்த மாணவர்கள், ஆபாசமாகத் திட்டிய மாணவர்கள் என அத்தனை மாணவர்களுக்கும் டிசியில் நடத்தைக்கு நேராக ‘ நன்று ‘ என்று ஆசிரியர்களால் எழுதப்பட்டு வழங்கப்படவே காத்திருக்கின்றன. டெல்லியில் இந்தி ஆசிரியையைக் குத்திக் கொலை செய்த மாணவனின் மாற்றுச் சான்றிதழில் கூட ‘மோசமான நடத்தை’ என்று குறிப்பிடப்பட்டிருக்காது.

ஆசிரியர்கள், மாணவர்களைப் பழிவாங்குவார்கள், அவர்களின் எதிர்காலமே பாழாகிப் போய்விடும் என்றெல்லாம் கூறுகிறார்கள். பன்னிரெண்டாம் வகுப்பு ப்ளஸ் டூ செய்முறைத் தேர்வுகளுக்குப் பெரும்பாலான மாணவர்கள் முழுவதுமாகத் தயாராகாமல்தான் வருகிறார்கள். அப்பள்ளி முதுகலை ஆசிரியர்கள், புறத் தேர்வாளராக வரும் ஆசிரியர்களிடம் இரைந்து முழு மதிப்பெண் பெற்றுத் தருகிறார்கள். தாவரவியல் ரெகார்ட் நோட் கேட்ட ஆசிரியரை அடிக்கப் பாய்ந்த மாணவனின் வீடியோவைப் பார்த்திருப்போம். அம்மாணவனின் செய்முறைத் தேர்வு மதிப்பெண், முழு மதிப்பெண்ணாகத்தான் அந்த ஆசிரியர் பெற்றுத் தந்திருப்பார்.

பள்ளி மாணவர்கள்

இடைநின்ற மாணவர்கள் மற்றும் கல்வியாண்டில் ஒருநாள் மட்டுமே வருகை புரிந்த மாணவர்களின் பெயர்களை வருகைப் பதிவேட்டிலிருந்து நீக்கவே கூடாது. ஒருநாள் வந்திருந்தாலும் அவர்களை முழு ஆண்டுத்தேர்வு மற்றும் அரசு பொதுத் தேர்வுக்கு கட்டாயம் அனுமதிக்க வேண்டும் என்று அரசு சொல்கிறது. தேர்ச்சியடைந்த மாணவர்கள் மேலும் படிப்பைத் தொடர்கிறார்களா என்பதைக் கண்காணிக்க வேண்டிய பொறுப்பு ஆசிரியர்களிடம் இருக்கிறது. அம்மாணவர்கள் மேற்படிப்பைத் தொடரவில்லை என்றால் என்ன காரணம், இடம்பெயர்ந்து விட்டார்களென்றால் அங்குள்ள பள்ளியில் ஏன் சேரவில்லை என்பதுவரை அந்தந்த வகுப்பாசிரியர்கள் காரணங்களைக் கண்டறிந்து அந்த மாணவர்களை வகுப்புகளுக்கு மீண்டும் கொண்டுவந்து சேர்க்க வேண்டும் என்பது அரசின் கண்டிப்பான உத்தரவு. இதனை ஆசிரியர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள்.

மாணவர்களின் கல்வி மேல் இப்படியாக பெரும் அக்கறை செலுத்தி திட்டங்களை வகுத்து வரும் அரசு, ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபடும் மாணவர்கள் பள்ளியிலிருந்து நீக்கப்படுவார்கள் என்று சொல்வதை அச்சுறுத்தலாக அல்லாமல் மாணவர்களுக்கான ஓர் அறிவுறுத்தலாகப் பார்க்கிறேன். இது சுற்றறிக்கையோ அரசாணையோ அன்று. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் சட்டப்பேரவையில் கூறியிருக்கிறாரே தவிர அதிகாரபூர்வமாக அதனை நடைமுறைக்குக் கொண்டு வரவில்லை. கொண்டு வரவும் முடியாது.

பாதை மாறும் பள்ளி மாணவர்கள்

அப்படியென்றால் மாணவர்களின் ஒழுங்கீனச் செயல்களை பள்ளி ஆதரிக்கிறதா என்று கேட்டீர்கள் என்றால், அதுவும் இல்லை. மாணவர்களின் இந்தப் போக்கு குறித்த உரையாடல்கள் முன்னெடுக்கப்பட வேண்டியிருக்கிறது. அதனைக் களைய வேண்டிய பொறுப்பும் இருக்கிறது. அதே நேரம், அனைத்து மாணவர்களுக்குமான கல்வியை உறுதி செய்வது முக்கியத்தேவை. ஏனென்றால், கல்விதான் ஒவ்வொருவருடைய எதிர்காலத்தையும் தீர்மானிகிறது என்பதால் இதில் மிகவும் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டியிருக்கிறது.

‘டிசியைக் கிழிச்சுடுவேன்’ என ஆசிரியர் மிரட்டுவது, ‘மாடு மேய்க்க அனுப்பிவிடுவேன்’ எனப் பெற்றோர் மிரட்டுவதெல்லாம் காலம் காலமாக நடந்து வருகிறது. அதற்காக அப்படியெல்லாம் செய்து விட்டார்களா என்ன? அமைச்சரின் இந்தக் கருத்தை வைத்து மாணவர்களின் எதிர்காலமே கேள்விக்குள்ளாக்கப்படும் என்று பதறுகிறார்கள். அந்த அச்சமே தேவையில்லை. அதிலும் தலித்திய அமைப்பைச் சேர்ந்தவர்கள், தலித் மாணவர்களின் கல்வி விடுக்கப்படும் அச்சுறுத்தல் என்றெல்லாம் பேசுகிறார்கள். அதாவது தலித் மாணவர்கள் ஒழுங்கீனமான செயல்களில் ஈடுபடுவார்கள் என இவர்களே சொல்வது போல் இருக்கிறது. எனவே வீண் பதற்றத்தைத் தவிர்த்து மாணவர்களின் எதிர்காலம் வளமடைவது குறித்து மட்டும் சிந்திப்போம்” என்கிறார் சுகிர்தராணி.

Source link

Leave a Comment

Your email address will not be published.