Thursday, June 30, 2022
Homeசினிமா செய்திகள்டிஸ்னியின் Cruella - இரண்டு எம்மாக்களுக்கும் நாமினேஷன் நிச்சயம், ஆஸ்கர் லட்சியம்!

டிஸ்னியின் Cruella – இரண்டு எம்மாக்களுக்கும் நாமினேஷன் நிச்சயம், ஆஸ்கர் லட்சியம்!

டால்மேஷியன்ஸ் நாய்களைக் கடத்திய ஒரு பெண்மணியாக அறிமுகமான க்ரூயல்லாவின் ப்ரீக்குவலாக டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகியிருக்கிறது Cruella.

Cruella

சிறுவயதில் இருந்தே விசித்திரமாக சிந்திக்கும் அராத்து ராங்கி பேபி எஸ்டெல்லா. எஸ்டெல்லாவின் இந்தச் செயல்களாலேயே, அவரைக் க்ரூயல்லாவாக பார்க்கத் தொடங்குகிறார்கள் சுற்றத்தார். சில துர் சம்பவங்கள் அவரைத் தனிமைப்படுத்திவிடுகிறது. புதிய சூழல், புதிய வேலை, பழிவாங்கல், க்ளைமேக்ஸ், ட்விஸ்ட் என ஒரு எதிர்மறை கதாபாத்திரத்துக்கான முன் கதையை முடிந்த வரையில் சுவாரஸ்யமாய் சொல்லியிருக்கிறார்கள். மிகச்சிறந்த டிசைனராக உருவாக எத்தனிக்கும் எஸ்டெல்லாவுக்கு எதிராக பின்னப்படும் வலைகளை எப்படி அவர் எதிர்கொள்கிறார் என்பதுதான் கதை. சிம்பிளாக சொல்வதானால் Estella to Cruella De Vil.

க்ரூயல்லாவாக எம்மா ஸ்டோன். La la land-ல் ஆஸ்கார் அடித்திருந்தாலும், எம்மாவின் எதிர்மறை நடிப்புக்கு நல்லதொரு உதாரணம் என்றால் யார்கோஸ் லாந்திமோஸின் ‘The Favorite’ தான். ஒலிவியா கோல்மேன், ரேச்சல் வெய்ஸ், எம்மா ஸ்டோன் என மூவரும் போட்டி போட்டு நடித்திருப்பார்கள். இதில் பசு தோல் போர்த்திய புலி கதாபாத்திரத்தில் பசுவாகவும் நடிக்க வேண்டும், புலியாகவும் நடிக்க வேண்டும் என்கிற இருவேறு பாத்திரம் எம்மா ஸ்டோனுக்கு. அதை வழக்கம் போல் சிறப்பாகவே செய்திருக்கிறார்.

“இந்த நாய்களை கொன்னுட்டு அதைய துணிய தைச்சு போட்டுக்கலாம்”ல என எம்மா சொல்லும் போது, நிஜ க்ரூயல்லாவாக மாறிப் போகிறார். க்ரூயல்லாவின் எதிரியாக லண்டனின் ஆகப்பெரும் பணக்கார டிசைனர் பரோனெஸாக எம்மா தாம்ஸன். இரண்டு முறை ஆஸ்கர் வென்றிருக்கும் எம்மா தாம்ஸனுக்கு, இந்த ஆண்டும் ஆஸ்கர் நாமினேஷன் நிச்சயம், விருது லட்சியம்! இரண்டு எம்மாக்களுக்கு இடையேயான ஆடு புலி ஆட்டம்தான் கதை. அதிலும் எம்மா தாம்ஸனின் ஆடை விழாக்களில் மண்ணை வாரித்தூற்றி அப்லாஸை அள்ளும் எம்மா ஸ்டோனின் டிசைனர் காட்சிகள் அப்லாஸ் ரகம். க்ரூயல்லாவின் அடியாள் & தோஸ்தானக்களாக ஜேஸ்பரும், ஹொராஸும். ஜேஸ்பருக்கு எமோஷனல் காட்சிகள் என்றால், ஹொராஸுக்கு காமெடி. இருவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

Cruella

படத்தின் ஆகப்பெரும் பலம் இசையும் ஆடை வடிவமைப்பும். டிசைனர் குறித்த படமென்பதால், வெவ்வேறு விதமான ஆடைகள், ஆச்சர்யத்தில் பிரமிக்க வைக்கும் டிசைன்ஸ் என படமே ஒரு அந்தக்கால டிசைனர் உலகத்துக்குள் சென்று வந்ததுபோல் இருந்தது. அதேபோல் இசை, க்ரூயல்லாவின் வெற்றிப்படிக்கட்டுகளை நோக்கி நகர நகர இசை கர்ஜிக்கத் தொடங்குகிறது.

ஒரு கற்பனை கதாபாத்திரத்துக்கு முன் கதை எழுதுவதென்பது சவாலானது. அந்தக் கதாபாத்திரத்தின் தொனி குறையாமல் படம் நெடுகிலும் வர வேண்டும். டிசியின் ‘ஹார்லி குயின்’, ‘ஜோக்கர்’ போல் எதிர்மறை கதாபாத்திரங்களுக்கான முன் கதை, ரசிகர்களையும் திருப்திப்படுத்த வேண்டும். ‘ஜோக்கர்’, ‘ஹார்லி குயின்’ அளவுக்கு க்ரூயல்லாவுக்கு ரசிகர்கள் இல்லையென்றாலும், மிகச்சிறப்பாக ட்விஸ்ட்டுடன் கூடிய கதையை எழுதியிருக்கிறார்கள்.

90-களில் வெளியான படத்தில் க்ரூயல்லாவாக வரும் க்ளென் க்ளோஸை தயாரிப்புக்குழுவில் சேர்த்தது ஒரு ஸ்மார்ட் மூவ். ‘ஐ டோன்யா’ என்கிற கதாநாயகியை முன்னிலைப்படுத்தும் சினிமாவை இயக்கி கவனம் ஈர்த்த க்ரெய்க் கில்லெஸ்ப்பிதான் படத்தின் இயக்குநர்.

எல்லாம் இருந்தும் ஆங்காங்கே தொய்வடையும் திரைக்கதை படத்தின் மைனஸ். ‘ஜோக்கர்’, ‘ஹார்லி’ அளவுக்கு ரத்தம் தெறிக்கும் எதிர்மறை கதாபாத்திரம் இல்லை க்ரூயல்லாவுடையது. அந்தக் குழப்பம் இறுதிவரை நீள்கிறது. க்ரூயல்லா என டெரராக எம்மா ஸ்டோன் சொன்னாலும், ‘உனக்குள்ள இன்னும் நல்லது இருக்கு’ என மைண்ட் வாய்ஸ் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. படத்தின் பலமும் பலவீனமும் அதுதான்.

Glenn Close, Emma Stone

The Hundred and One Dalmatians நாவல் படிக்காதவர்களுக்கும் க்ரூயல்லா தெரியும். 1960-களில் டிஸ்னியில் வெளியான அனிமேஷன் திரைப்படம், 1990-களில் லைவ் ஆக்ஷன் திரைப்படமாக வெளிவந்தது. அதன் தமிழ் டப்பிங்கை 90ஸ் கிட்ஸ் டிவியில் அடிக்கடி பார்த்திருப்பார்கள்.

டால்மேஷியன் நாய்களையும், அந்த நாயின் உரிமையாளரையும் மையப்படுத்தி வரும் இந்தப் படத்தில் க்ரூயல்லா நாய்களைக் களவாடுவார். டால்மேஷன் நாய்களின் தோலை வைத்து ஆடை தைக்க வேண்டும் என்பதுதான் க்ரூயல்லாவின் பெருங்கனவு. படம் நாய்களின் காமெடியுடன் மெகா ஹிட் அடித்தது. தற்போது வெளியாகியிருக்கும் க்ரூயல்லாவும் க்ரைம் காமெடி படம் என்றாலும், காமெடி பெரிய அளவில் படத்தில் இல்லை.

அடுத்த பாகத்துக்கான லீடுடன் படம் முடிந்திருப்பதால், நிச்சயம் அடுத்த பாகத்தில் அதற்கேற்ற காட்சிகள் இருக்கும் என நம்பலாம். எம்மா ஸ்டோன், எம்மா தாம்ஸனின் மிரட்டலான நடிப்புக்காகவும், 1970-களின் காஸ்டியூம், பாப் கலாசாரம் போன்றவற்றுக்காகவும் நிச்சயம் பார்க்க வேண்டிய படம் Cruella.

Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments