டி.சி விவகாரம்: “மாணவர்களை மேலும் மன அழுத்தத்துக்கு உள்ளாக்கும்!" – ஆசிரியர்கள் ஆதங்கம்

பள்ளி மாணவர்களின் மோதலில் ஒரு மாணவன் கொல்லப்பட்டான்… ஆசிரியரிடம் ஆபாசமாகப் பேசி, தாக்க முற்பட்டான் ஒரு மாணவன்… வகுப்பறையில் வைத்தே சக மாணவிக்குத் தாலி கட்டினான் ஒரு மாணவன்… வகுப்பறை மேடைகளை உடைப்பது, பள்ளிச்சீருடையில் பேருந்தில் மது அருந்துவது.. பேருந்து நிலையத்தில் மாணவிகள் ஒருவருக்கொருவர் மோதிக்கொள்வது… என இவையனைத்தும் சமீபத்தில் தமிழகத்தில் பள்ளி மாணவர்களால் அரங்கேறிய அராஜக செயல்கள்.

பள்ளி மாணவர்கள்

இதுபற்றி 8.5.2022 தேதியிட்ட ஜூ.வி-யிலும் கவர் ஸ்டோரி வெளிவந்திருக்கிறது. தொடர்ச்சியான இந்தச் சம்பவங்கள் மக்கள் மன்றத்தில் மட்டுமின்றி, சட்டமன்றத்திலும் எதிரொலித்தன. அதையொட்டிதான், இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடும் மாணவர்களின் மாற்றுச் சான்றிதழில், செய்த தவறுகள் குறிப்பிடப்பட்டு வெளியேற்றப்படுவார்கள் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்தார். ஆனால் இதற்கு அரசு ஆசிரியர்கள், மாணவர்கள் தரப்பிலிருந்து கடும் எதிர்ப்புக் கிளம்பியிருக்கிறது.

அன்பில் மகேஸ் பொய்யாமொழி

பள்ளிக்கல்வித்துறையில் இந்த முடிவு குறித்து மாணவர்கள் தரப்பில் பேசியபோது, “அமைச்சரின் அறிவிப்பு மேலோட்டமாகப் பார்த்தால், இனி மாணவர்கள் எவ்விதமான தவறான செயல்களிலும் ஈடுபட முடியாதபடியான எச்சரிக்கையைக் கொடுக்கும் அறிவிப்பு என்றாலும், மிகவும் ஆபத்தானது. மாணவர்கள் இனி வேண்டுமென்றே அப்படியானச் செயல்களில் ஈடுபடப்போவதில்லை. ஏனெனில், அளவுக்கதிகமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகிவிட்டன. எங்களது பெற்றோர்களும் மனமுடைந்துப் போயிருக்கிறார்கள். எனினும், சில சமயங்களில், தற்செயலாகவோ, சிலர் தூண்டுதலின்பேரிலோ சண்டைகள் நடைபெற்றால், அதனை யாராவது வீடியோ எடுத்துப் பரப்பினால் அவ்வளவுதான்! பிரச்னைகளை மையப்படுத்தி மாற்றுச் சான்றிதழை அரசு கொடுக்கும்பட்சத்தில், எங்களது வாழ்க்கையே நாசமாகிவிடும். எதற்காக அரசும், பெற்றோரும் அச்சம்கொண்டு எங்களைத் தடுக்க நினைக்கிறார்களோ, அதேவழியில் மாணவர்கள் பயணம் செய்திட அரசே வழிவகுத்தது போலாகிவிடும்” என்றனர்.

பள்ளி மாணவர்கள்

தமிழ்நாடு ஆசிரியர் சங்கத் தலைவர் பி.கே.இளமாறன் நம்மிடம், “பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸின் இந்த அறிவிப்பு தேவையற்றது. அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மட்டுமாகச் சொல்லப்பட்டதல்ல, தனியார் பள்ளி மாணவர்களுக்கு சேர்த்துதான் அமைச்சர் சொல்லியிருக்கிறார். ஆனால், எந்தத் தனியார் பள்ளியாவது இதனை ஏற்றுக்கொள்ளுமா? பள்ளிகளே ஏற்றுக்கொண்டாலும் பெற்றோர் சம்மதிப்பார்களா? கொரோனா காலத்தில் ஏற்பட்ட மன அழுத்தத்தின் பாதிப்புதான் மாணவர்கள் இவ்வாறு நடந்துகொள்வதற்குக் காரணம். மிகப்பெரிய தவறு என்கிறபோது, மாணவர்களை எச்சரிக்கலாமே தவிர, மாற்றுச் சான்றிதழில் தவறுகளைக் குறிப்பிட்டால் அது அந்த மாணவர்களின் வாழ்க்கையே பாதித்துவிடும். அப்படி மாற்றுச் சான்றிதழில் குறிப்பிடப்பட்டிருக்கும் மாணவர்களை வேறு எந்த அரசுப் பள்ளியோ, தனியார் பள்ளியோ சேர்த்துக்கொள்ளாது என்பதால் ஒருபக்கம் அவர்களது கல்வி பறிபோய்விடும். எதிர்காலத்தில் வேலையும் கிடைக்காது. அதனால், மேலும் மன அழுத்தத்துக்கு ஆளாகும் மாணவர்கள் வருங்காலத்தில், ரௌடியாகவோ, சமூக விரோதியாக மாறக்கூடிய சூழல் ஏற்படும். சில சாதி வெறிப் பிடித்தவர்கள் அப்படியான மாணவர்களைத் தங்கள் தேவைக்குப் பயன்படுத்திக்கொள்ளும் சூழல் உருவாகிவிடும்.

பி.கே.இளமாறன், தமிழ்நாடு ஆசிரியர் சங்கம்

தவறு செய்யும் மாணவர்களை விட, அதனை வீடியோ எடுத்துப் பரப்பி விடுபவர்களே சமூக விரோதிகள். வீடியோ பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால், அதுபோன்றச் செயல்கள் இனி நடக்காது. எனவே, மாணவர்கள் திருந்துவதற்கு வாய்ப்புக் கொடுக்க வேண்டும். அரசு இந்தச் சுற்றறிக்கையை ரத்து செய்ய வேண்டும்!” என்றார்.

Source link

Leave a Comment

Your email address will not be published.