Saturday, June 18, 2022
Homeசினிமா செய்திகள்`டெடி'யின் உடல்மொழியும், தோற்றமும் வாவ்... ஆனால் ஆர்யா, சாயிஷா? ப்ளஸ், மைனஸ் ரிப்போர்ட்!

`டெடி'யின் உடல்மொழியும், தோற்றமும் வாவ்… ஆனால் ஆர்யா, சாயிஷா? ப்ளஸ், மைனஸ் ரிப்போர்ட்!

உறுப்பு திருட்டு மற்றும் கடத்தல் கும்பலால் கோமா ஸ்டேஜுக்குத் தள்ளப்படும் சாயிஷாவின் ஆன்மா ஒரு டெடி பொம்மைக்குள் தஞ்சம் அடைகிறது. தன் உடலை மீட்க ஆர்யாவிடம் உதவிக்கேட்டு வரும் பொம்மை, இறுதியில் தன் உடலை அடைந்ததா, ஆர்யாவின் சூப்பர் மெமரி பவர், இதற்கு எப்படி உதவுகிறது என்பதுதான் இந்த ‘டெடி’யின் கதை.

‘நாணயம்’, ‘மிருதன்’, ‘டிக்:டிக்:டிக்’ என தன் படத்தின் ஒன்லைன்களை ஹாலிவுட் இன்ஸ்பிரேஷனாகவே அமைக்கும் இயக்குநர் ஷக்தி சௌந்தர்ராஜன் இந்த முறையும் அதையே செய்திருக்கிறார். ‘டெடி’ பொம்மைக்கு உயிர் வருகிறது என்ற கான்செப்ட் மட்டும் ஹாலிவுட்டின் அடல்ட் காமெடி படத்தொடரான ‘டெட்’-ஐ நினைவுக்குக் கொண்டு வருகிறது. மற்றபடி இது அதிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு மெடிக்கல் சயின்ஸ் த்ரில்லராக விரிகிறது.

Teddy

ஆனால், எப்படிப் பார்த்தாலும் கூடுவிட்டு கூடு பாயும் பேய்க்கதை டெம்ப்ளேட்டுக்கு பவுடர் அடித்து பொட்டு வைத்து சயின்ஸ் மேக்கப் போட முயன்றிருக்கிறார் இயக்குநர். ‘அவுட் ஆஃப் பாடி எக்ஸ்பீரியன்ஸ்’ என்ற நிரூபிக்கப்படாத, அதே சமயம் அறிவியலே அமானுஷ்யம் என ஒதுக்கிவைத்த ஒரு விஷயத்தை கையில் எடுத்திருக்கிறார் சக்தி சௌந்தர்ராஜன். கிட்டத்தட்ட ஷங்கரின் ‘2.0’ படத்தில் ‘ஆரா’ என்பதையும், ‘பாசிட்டிவ் ஃபோர்ஸ்’, ‘நெகட்டிவ் ஃபோர்ஸ்’ போன்ற விஷயங்களையும் நிஜ அறிவியல் என ரீல் சுற்றியதைபோல இங்கேயும் முயன்றிருக்கிறார்கள். விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான ‘டாக்ஸிவாலா’ படமும் கண்முன்னே வந்துபோகிறது. அங்கே கார் என்றால், இங்கே டெடிபேர் பொம்மை. இதற்கு ஃபேன்டஸி படம்னே சிம்ப்பிளா முடிச்சிருக்கலாமே!

அதிலும் ஹீரோவுக்கு ‘Eidetic Memory’. அதாவது ஒரு விஷயத்தைப் பார்த்துவிட்டால் அதை எப்போதும் மறக்கவே மாட்டார். சின்ன சின்ன விஷயங்களைக்கூட கவனித்து டேட்டாவாக சேமித்துக்கொள்ளும் திறன்தான் இது. இப்படியான IQ உள்ளவர்கள் வரலாற்றில் இருக்கிறார்கள் என்றாலும், இந்தப் படத்தில் வரும் ஆர்யா பாத்திரம் செய்பவை பெரும்பாலும் சாத்தியமற்ற சாகசங்களாகவே தெரிகிறது.

டெடி

செம ஸ்மார்ட் ஜீனியஸ் ஹீரோவாக ஆர்யா செம ஃபிட். தன் வழக்கமான ப்ளேபாய் உடல்மொழியை மூட்டைக் கட்டிவைத்துவிட்டு, எல்லாம் தெரிந்த அறிவாளியாக அடக்கி வாசித்திருக்கிறார். யதார்த்தமான அவரின் பாத்திரப் படைப்பு படத்தின் ப்ளஸ்! சாயிஷாவுக்குக் கிட்டத்தட்ட கெஸ்ட் ரோல்தான் என்றாலும் தன் துருதுரு பாத்திரத்தைச் சிறப்பாகவே செய்திருக்கிறார். சதீஷ், கருணாகரன் என இருவர் இருந்தும் காமெடியைதான் தேட வேண்டியிருக்கிறது.

வில்லனாக பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட மகிழ் திருமேனிக்கும் மொத்தமே மூன்று சீன்கள்தான் என்பதால் அவராலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. ஒருவேளை அவரின் பாத்திரத்தை பாதி படத்துக்குப் பிறகாவது கதைக்குள் கொண்டு வந்திருந்தால் அந்த மேஜிக் நடந்திருக்குமோ என்னவோ!

திரைக்கதையாக படத்தின் முதல்பாதி எந்தவித தொய்வுமில்லாமல் நகர்கிறது. இரண்டாம் பாதியில் அசர்பெய்ஜானில் எம்பஸி, மருத்துவமனை, கடத்தல் என விரியும் காட்சிகளில் மட்டும் அத்தனை ஓட்டைகள். அங்கே மட்டும் லேசாகக் கண்ணைக் கட்டுகிறது. யார் இந்த வில்லன், எங்கே கதை நடக்கிறது, யார் யாரிடம் பேசுகிறார்கள், எதற்காக பேசுகிறார்கள், ஆர்யா எதற்கு வலியபோய் மருத்துவமனையில் சேர்கிறார் என எதற்குமே தெளிவான விளக்கம் இல்லை. பேசும் டெடியைப் பார்த்து யாருமே பெரிதாக ஆச்சர்யமோ பயமோ படாமல் அதை ஒரு சாதாரண விஷயமாகப் பார்ப்பது உறுத்தல்!

டெடி

‘டெடி’ பொம்மையை மோஷன் கேப்சர் தொழில்நுட்பம் மூலம் உயிருடன் கொண்டு வந்திருக்கிறார்கள். இந்திய கம்பெனி ஒன்று உழைத்திருக்கிறது. இதற்காக சிறந்த உழைப்பை வழங்கியிருக்கிறது படக்குழு. ‘டெடி’யின் குரலைத்தாண்டி அதன் உடல்மொழி அனிமேஷனும், தோற்றமும் பக்கா! நிச்சயம் தமிழ் சினிமாவில் பாராட்டப்பட வேண்டிய முயற்சி இது!

இமானின் இசையில் ‘என் இனிய தனிமையே’ ஈர்க்கிறது. யுவாவின் ஒளிப்பதிவு, டெடிபேர் பொம்மைக் காட்சிகளுக்கு நம்பகத்தன்மையைக் கூட்டியிருக்கிறது. குறிப்பாக ‘டெடி’யின் அசர்பெய்ஜான் ரைம்ஸ் பாடலுக்கு விரியும் விஷுவல்ஸ், கவிதை!

திரைக்கதையில் கொஞ்சம் மேஜிக்கோடு லாஜிக்கையும் சேர்த்து வில்லனுக்கும் குணசித்திரப் பாத்திரங்களுக்கும் முழுமையான ஒரு தோற்றத்தைக் கொண்டுவந்திருந்தால் ஸ்கிரிப்ட்டின் பலம் கூடியிருக்கும்.

இருந்தாலும் இந்த ‘டெடி’யோடு ஒருமுறை கைகுலுக்கலாம்!

Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments