மரியுபோல் நகரம் மட்டுமல்ல, உக்ரைனின் பெரும்பாலான நகரங்கள் சிதைந்தே காணப்படுவதாகச் செய்திகள் சொல்லப்படுகின்றன. உக்ரைனில், 200-க்கும் மேற்பட்ட மருத்துவமனைகள் தகர்க்கப்பட்டிருக்கின்றன. பள்ளிக் கட்டடங்கள், ஆலைகள், வணிக நிறுவனங்கள் என பல்வேறு இடங்களும் இடிந்து கிடக்கின்றன. ஒருவேளை தற்போது போர் நிறுத்தப்பட்டாலும், உக்ரைன் இயல்பு நிலைக்குத் திரும்பப் பல ஆண்டுகள் ஆகும் என்பதால், அந்த நாட்டு மக்கள் செய்வதறியாமல் திண்டாடிவருகின்றனர்.
உக்ரைனுக்கு ஆதரவாகப் பல்வேறு நாடுகளும் ஆயுதங்கள், நிதி உதவிகள் வழங்கிவந்தாலும், களத்தில் இறங்கி உதவி செய்ய எந்த நாடும் தயாராக இல்லை. போருக்கு முன்பாக `நாங்கள் இருக்கிறோம்… பார்த்துக் கொள்ளலாம்’ என உக்ரைனுக்குத் தைரியம் சொன்ன அமெரிக்காவும், களத்தில் தனது படை வீரர்களை இறக்கி உதவ முன்வரவில்லை. இது குறித்துப் பேசும் சர்வதேச அரசியல் நோக்கர்கள், “இந்தப் போருக்கான முக்கியக் காரணங்களுள் ஒன்று, உக்ரைன் நேட்டோ படைகளில் சேர நினைத்ததுதான். ஆனால், உக்ரைனுக்குக் களத்தில் உதவி செய்ய நேட்டோ நாடுகள் கூட்டமைப்புகூட முன்வரவில்லை.
அமெரிக்கா, இங்கிலாந்து உள்பட பல்வேறு நாடுகளும் ஆயுதங்கள் வழங்கியும், நிதி அளித்தும் உக்ரைனுக்கு உதவிவருகின்றன. அதேபோல பல நாடுகள், உக்ரைனுக்கு ஆதரவாக ரஷ்யாமீது பொருளாதாரத் தடையும் விதித்திருக்கின்றன. இருந்தும் எந்த நாடும், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியின் கோரிக்கையை ஏற்று, தங்களது படைகளை உக்ரைனுக்கு ஆதரவாகக் களமிறக்கத் தயங்குகின்றன. மற்ற நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாக தங்கள் படைகளைக் களமிறக்கினால், அது மூன்றாம் உலகப் போருக்கு வழிவகுக்கும் என்பதுதான் தயக்கத்துக்கான காரணம். நாளுக்கு நாள் தீவிரமடைந்துவரும் இந்தப் போரை நிறுத்துவதற்கான பேச்சுவார்த்தைகளிலாவது உலக நாடுகள் தீவிரம் காட்ட வேண்டும். அப்படிச் செய்தால் மட்டுமே இந்தப் போர் முடிவுக்கு வரும்!” என்கிறார்கள்.