தங்கம் வென்ற அபினவ் * ‘டெப்லிம்பிக்’ போட்டியில் அசத்தல்

கேசியாஸ்: ‘டெப்லிம்பிக்’ போட்டி துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம் வென்றார் அபினவ்.

பிரேசிலில் செவித்திறன் குறைபாடு உள்ளவர்களுக்கான 24 வது ‘டெப்லிம்பிக்’ போட்டி நடக்கிறது. ஆண்களுக்கான துப்பாக்கிசுடுதல் 10 மீ., ‘ஏர் பிஸ்டல்’ பிரிவு போட்டிகள் நடந்தன. 

இந்தியா சார்பில் சுபம் வஷிஸ்ட், அபினவ் தேஷ்வல் பங்கேற்றனர். தகுதிச்சுற்றில் சிறப்பாக செயல்பட்ட அபினவ் (575 புள்ளி) 2வது இடம், வஷிஸ்ட் (563) 6வது இடம் பிடித்து பைனலுக்கு முன்னேறினர்.

அடுத்து நடந்த பைனலில் 24 சீரிஸ் முடிவில் அபினவ், உக்ரைனின் ஒலக்சி தலா 234.2 புள்ளிகள் பெற்றனர். இதையடுத்து வெற்றியாளரை முடிவு செய்ய போட்டி ‘ஷூட் ஆப்’ முறைக்கு சென்றது. இதில் தனக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்பில் அபினவ் 10.3 புள்ளிகள் பெற்று முதலிடத்தை தட்டிச் சென்று, தங்கப்பதக்கம் கைப்பற்றினார். 9.7 புள்ளி மட்டும் பெற்ற ஒலக்சிக்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்தது. 

சீன தைபேவின் மிங் ஜுய் (212.8) மூன்றாவது இடம் பிடித்து வெண்கலம் வென்றார். 152.9 புள்ளிகள் பெற்ற வஷிஸ்ட், 6வது இடம் பிடித்து பதக்க வாய்ப்பை இழந்தார். இதுவரை நடந்த போட்டிகள் முடிவில் இந்தியா 3 தங்கம், 2 வெண்கலம் வென்றுள்ளது. 

Advertisementவருக

Leave a Comment

Your email address will not be published.