தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை அண்மையில், தமிழ்த்தாய் குறித்து `எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெரும் தமிழணங்கே’ எனக் குறிப்பிட்டு தமிழ்த்தாய் படம் ஒன்றை ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். அதற்கு அமைச்சர் தங்கம் தென்னரசு, `தமிழணங்கைப் போற்றுகிறோம் என்ற போர்வையில் தமிழ் எழுத்துகளுடன் ‘ஸ’வையும் இணைத்துப் படம் போடும் போதே உங்களின் கூப்பிய கைகளுள் மறைத்து வைத்திருக்கும் கூர்வாள் தன் உண்மை முகத்தைக் காட்டி விட்டது’ என்று ட்விட்டரில் விமர்சித்திருந்தார். அதைத்தொடர்ந்து அமைச்சரின் இத்தகைய பதிவுக்கு அண்ணாமலை, `முதல்வர் ஸ்டாலின் பெயரில் `ஸ’ என்ற எழுத்தை நீக்கி அதற்கு மாற்று எழுத்தைக் கண்டுபிடிக்க தமிழக அரசு உடனே குழு அமைக்க வேண்டும்’ என கூறியிருந்தார்.
இந்த நிலையில் தற்போது, “தமிழகத்தில் இருக்கக்கூடிய 90% அமைச்சர்களுக்கு ஆங்கிலம் கூட தெரியாது” என தி.மு.க அமைச்சர்களை அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
சென்னையில், `திராவிட மாயை’ எனும் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய அண்ணாமலை, “திராவிடம் என்பது குழப்பம் நிறைந்த ஒன்று. திமுகவும் பெரிய வெங்காயமும் ஒன்று.. உரிக்க உரிக்க அதில் ஒன்றும் இருக்காது.
திமுக அமைச்சர்கள் சம்பந்தமில்லாமல் பேசுகிறார்கள், கோடைகாலத்தில் மழை வந்தாலும் அதற்கு காரணம் திராவிட மாடல் என்று கூறுவார்கள்” என்றார்.
தொடர்ந்து பேசியவர், “தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய 90% அமைச்சர்கள் இங்க நாம ஃப்ளைட் ஏத்தி விட்டா ஏறுவாங்களே தவிர சொந்தமா ஏறக்கூட முடியாத நிலைமையில்தான் இருக்காங்க. ஏன்னா ஆங்கிலத்தில் படித்து பேசி ஏறனும். டெல்லியில போய் இறங்கணுதுக்கு அப்புறம் கார் வந்ததும் ஏறி செல்கிறார்கள். அங்கேயும் போயிட்டு ஒரு டிரைவர் கிட்ட இந்தியில் பேசி தம்பி நார்த் ப்ளாக் எங்களை கூட்டிட்டு போ பா-னு சொல்லுவாங்க. அதனால, அவங்களோட அலுவலகத்துல இருக்கக்கூடிய அதிகாரிகளை எடுத்துவிட்டு நீங்களாக தனியாக டெல்லி சென்று தமிழகத்துக்கு ஒரு ரூபாய் வாங்கிட்டு வாங்கன்னா, 90% அமைச்சர்களால் முடியாது” எனக் கூறினார்.