மயிலாடுதுறையில் 500 ஆண்டுகள் பழைமை வாய்ந்த தருமபுரம் ஆதீனத்திருமடத்தில் ஞானாம்பிகை சமேத ஸ்ரீஞானபுரீசுவர சுவாமி கோயில் உள்ளது. இங்கு பட்டணப்பிரவேசத்திற்கான பெருவிழா இன்று (12.5.2022) கொடியேற்றத்துடன் தொடங்கியது. பெருவிழாவையொட்டி மே 18-ம் தேதி இரவு 8 மணிக்குமேல் திருக்கல்யாண வைபவமும், ஸ்ரீகுருஞானசம்பந்தர் குருபூஜையும், மே 20-ம் தேதி காலை 8 மணிக்குமேல் திருத்தேர் உற்சவமும், மே 21-ம் தேதி காலை காவிரியில் தீர்த்தவாரியும் நடைபெறுகிறது.
தொடர்ந்து, தருமபுரம் ஆதீன குருமுதல்வர் ஸ்ரீகுருஞானசம்பந்தரின் குருமூர்த்திகள் கமலை ஸ்ரீஞானப்பிரகாசர் குருபூஜை நடைபெறவுள்ளது. விழாவையொட்டி காலை 10 மணிக்கு ஸ்ரீசொக்கநாத பெருமான் வழிபாடு நடைபெறுகிறது. பின்னர் நன்பகல் 1 மணிக்கு மாகேஸ்வர பூஜை நடைபெறுகிறது. பின்னர் மாலை 6.30 மணிக்கு குருமூர்தத்தில் எழுந்தருளி தருமபுரம் ஆதீனம் வழிபாடாற்றுகிறார்.