Thursday, June 30, 2022
Homeசினிமா செய்திகள்தலித்துகள் மீது கைவைத்தால் தேசமே கொதித்தெழுமா... `நாயாட்டு' சினிமாவின் பிற்போக்கும், போலித்தனமும்!

தலித்துகள் மீது கைவைத்தால் தேசமே கொதித்தெழுமா… `நாயாட்டு' சினிமாவின் பிற்போக்கும், போலித்தனமும்!

நெட்ஃபிளிக்ஸில் வெளியாகியிருக்கும் ‘நாயாட்டு’ படத்தின் ஒன்லைன் மிகவும் சிம்பிளானது. தடித்தனம் செய்யும் ஒருவரால் காவல்துறையில் நடக்கும் வேட்டை குறித்துப் பேசுகிறது ‘நாயாட்டு’. ஒரு படம் அதன் மேக்கிங், நடிப்பு எல்லாவற்றையும் கடந்து அதன் நோக்கம் என்ன என்பது மிகவும் அவசியம்.

இங்கிருக்கும் காவல்துறையை அமைப்பாகத் திரளும் தலித்துகளும், அதிகார வர்க்கமும் எப்படியெல்லாம் பலி ஆடு ஆக்குகிறது என்கிற மாயாஜாலக் கதையை யதார்த்த சம்பவங்கள் என முன் வைத்து அபத்த அரசியல் பேசுகிறது ‘நாயாட்டு’. இந்திய சினிமாக்களில் போலீஸ் படங்களை மூன்று விதங்களாகப் பிரித்துவிடலாம். ‘தூக்கிப் போட்டு மிதித்தால் பல்லு கில்லெல்லாம் வெளியே வந்துவிடும்’ என கர்ஜிக்கும் சர்வவல்லமை பொருந்திய அதிகாரிகளின் கதை ஒரு வகை; அப்பாவி காவலர்களைக் கொன்று தப்பிக்கும் கொலைகாரர்களை பழிவாங்கும் போலீஸ் ஹீரோ இரண்டாவது வகை; மூன்றாவது குறிஞ்சி மலரைவிட அபூர்வமாக முளைக்கும் ‘விசாரணை’ போன்ற ரியலிஸ்டிக் சினிமாக்கள். ‘அலெக்ஸ் பாண்டியன்’ படத்தில் இருந்து ‘சாமி’, ‘சிங்கம்’, ‘தெறி’ வரை தமிழ் ஹீரோக்கள் அணியத்துடிக்கும் காக்கி முதல் வகை என்றால் ‘நாயாட்டு’ இதில் இரண்டாவது வகை. அடாவடித்தன அயோக்கியர்களால் ஒரு பாவமும் அறியாத காவல்துறை அதிகாரிகள் சிக்கிக்கொள்ளும் கதை.

Nayattu

தன்னைத் தொந்தரவு செய்யும் உறவுக்கார இளைஞர்களை காவல் நிலையத்துக்குக் கொண்டுவந்து நிறுத்துகிறார் பெண் காவலரான நிமிஷா. காவல் நிலையத்தின் வெளியே நிற்கும் பிரச்னைக்குரிய இளைஞன் காவல்நிலைய சுவற்றில் எச்சில் துப்புகிறார். இதனால் அங்கேயிருக்கும் ஒரு காவல்துறை அதிகாரி ஜோஜு ஜார்ஜுடன் கைகலப்பாகிறது. அதே இளைஞர் மீண்டும் இன்ஸ்பெக்டரைப் பார்க்க நின்றுகொண்டிருக்கும் சமயம், தற்செயலாக இன்னொரு காவல்துறை அதிகாரியான குஞ்சகோ போபனுடன் மோதல் ஏற்படுகிறது. “என்னை நீ அடித்தால் உன் வேலை போய்விடும்” என மிரட்டுகிறார் அந்த இளைஞர். இந்த இரண்டு சம்பவங்களில் பாதிக்கப்பட்ட இரு போலீஸும் இணைந்து அந்த நபரை லாக்கப்பில் வைக்கிறார்கள். அடுத்த சில நிமிடங்களில் மேல் மட்டத்திலிருந்து ‘அவரை ரிலீஸ் செய்யுங்கள்’ என உத்தரவு வருகிறது. அவர் ரிலீஸ் செய்யப்படுகிறார். இடைத் தேர்தல் முடிந்ததும் இந்த இரண்டு காவல்துறை அதிகாரிகளையும் சஸ்பெண்டு செய்ய வேண்டும் என முதல்வரைப் பார்த்து கர்ஜித்துவிட்டு வருகிறார் சிறையில் வைக்கப்பட்ட இளைஞனின் தலைவர். ரஜினிக்கான பில்ட் அப்புடன் அப்படி வலம் வரும் அந்த இளைஞர் காலம் காலமாக நாம் பத்திரிகைகளில் படிக்கும், சினிமாக்களில் பார்க்கும் மினிஸ்டர் மகனோ, செல்வந்தர்களின் மகனோ, அதிகார வர்க்கத்தின் வாரிசோ அல்ல. அந்த இளைஞர் ஒரு தலித். அதனாலேயே இந்தப் படம் எவ்வளவு ரியலிஸ்ட்டிக்காக இருக்கிறது பாருங்கள் என சிலர் பாராட்ட ஆரம்பித்திருக்கிறார்கள்.

லாக் அப் மரணங்கள் முதல் ஜல்லிக்கட்டு சம்பவங்களின் இறுதி நாளில் காலனிகளுக்கு தீ வைத்தது வரை எத்தனையோ சம்பவங்களை நாம் படித்திருப்போம், பார்த்திருப்போம். ஆனாலும், தலித்துக்களை அடாவடிக்காரர்களாகக் காட்டும் காட்சி, யதார்த்தத்தை பிரதிபலிக்கிறது என்றால் அதை எப்படிப் புரிந்துகொள்வது எனத் தெரியவில்லை. இன்றளவிலும், சந்தேகத்தின் பெயரில் பிடிக்கப்படும் நபர்களின் முகவரிகளை எளிதில் சொல்லிவிடலாம். இந்தியாவின் எந்த மூலை முடிக்கிலும், ஏவப்படும் காவல்துறை பிடித்துக்கொண்டு வரும் நபர்கள் இத்தகைய ஒடுக்கப்பட்டவர்கள்தான். ஆனாலும், தலித்துகள் அடாவடித்தனம் செய்பவர்கள் என ஒரு படைப்பை நம்மால் பொதுப்புத்தியின் கைத்தட்டல்களுடன் எடுக்க முடிகிறது. தலித்துகள் அடாவடித்தனமே செய்யவில்லையா என நீங்கள் கேட்கலாம். விதிவிலக்குகள் விதிகள் ஆகாது. ஒரு சில சம்பவங்களை வைத்து எல்லாவற்றையும் பொதுமைப்படுத்த முடியாது.

காதல் எல்லாமே நாடகக் காதல்தான் என பேசும் அபத்தத்துக்கு ஒப்பானது இது. அதை எல்லாம் அப்படியே பயன்படுத்தி நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது ‘நாயாட்டு’.

ஒரு நாணயத்தின் இன்னொரு பக்கத்தைப் பற்றி யாரும் பேசக்கூடாதா என்கிற இயல்பான கேள்வி எழலாம். நிச்சயம் நாணயத்தின் இன்னொரு பக்கம் பேசப்பட வேண்டும். இங்கு எதுவுமே புனிதமல்ல. ஆனால், ஒரு படைப்பின் நோக்கம் என ஒன்று இருக்கிறது. தலித்துகள் செய்யும் விதிமீறல்கள் குறித்து இதற்கு முன்பும் சினிமாக்கள் பேசியுள்ளன. சமீபத்தில் வெளியான ‘பாதாள் லோக்’கூட கடுமையாக விமர்சனம் செய்திருந்தது. ஆனால், Other side of the coin என்பது வேறு, Normalizing the victim என்பது வேறு.

இவன் இப்படியானவன்தான் என்கிற முன் தீர்மானத்துடன்தான் ‘நாயாட்டு’ படம் நகர்கிறது. அது தலித்துகள் மீது ஒருவித ஒவ்வாமையை படம் முழுக்க உண்டு பண்ணுகிறது. தலித்துகளின் உயிர்களுக்கு இந்திய வரலாற்றிலேயே கொடுக்காத முக்கியத்துவத்தைக் கொடுப்பதாக காட்சிப்படுத்துகிறது ‘நாயாட்டு’. அதற்குத் தேர்தலை பகடைக்காயாக பயன்படுத்துகிறது. உண்மையில் படைப்பாளியின் நோக்கம், இங்கு அமைப்பாகத் திரளும் தலித்துகள் ஆகப்பெரும் பிரச்னையாக உருவெடுக்கிறார்கள் என்பதுதான். அதைக் கடந்து இணைச் சேர்க்கையாக வரும் தேர்தல் அரசியல், காவல்துறை நிர்பந்தம் எல்லாமே அதை நியாயப்படுத்தும் திரைக்கதை யுக்திகள்தான்.

Sonchiriya

காவல்துறை வெர்சஸ் காவல்துறைக்கு தொல்லை கொடுப்பவர்கள் வரிசையில் முக்கியமானதொரு சினிமா ‘சோன்சிரியா’. கிட்டத்தட்ட ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தின் Other side of the coin. இரண்டு படங்களிலும் கெட்டவர்கள் திருடர்கள்தான். இரண்டு படத்திலும் அவர்கள்தான் தவறு செய்பவர்கள். ஆனால், இரண்டு படைப்புகளின் நோக்கமும் வெவ்வேறு. சம்பல் பள்ளத்தாக்கில் இருக்கும் பாகிக்கள், அவர்களின் வாழ்க்கை முறை, அவர்கள் ஏன் அந்தத் தவறுகளை செய்கிறார்கள் என்பதைப் பேசும் ‘சோன்சிரியா’. அதே சமயத்தில் ‘தீரன்’, இவர்கள் கொல்லப்பட வேண்டியவர்கள் என்கிற எண்ணத்தை பார்வையாளனிடம் திணிக்கும். படத்தின் ஒன்லைனில் ஒரு படைப்பு மாறுபட்டு நிற்பது இங்குதான்.

ஒரு தலித்தை தடித்தனம் செய்பவனாகவோ, முரட்டு ஆசாமியாகவோ, அடியாளாகவோ காட்டுவதில் இந்திய சினிமாக்களுக்கு எந்தத் தயக்கமும் எப்போதும் இருந்ததில்லை. அடியாள் என்றாலே “வடசென்னைல தேடு” என்பதுதான் கோலிவுட்டின் கோடு வேர்டு. ஆனால், தற்போதைய சூழல் அதைக் கொஞ்சம் கொஞ்சமாய் இங்கு மாற்றிவருகிறது. ஆனால், ‘நாயாட்டு’ போன்ற சினிமாக்கள் இதை முற்றிலுமாய் புரட்டிப்போடுகின்றன. தலித்துகளைக் கெட்டவர்களாகக் காட்டுவதைவிட விஷமம் அவர்களைத் தொட்டால், இந்தத் தேசமே கொதித்தெழுந்தது விடும் என்பது. எத்தனை தலித்துகள் புகார் கொடுத்தால், காவல்துறை உடனடியாக வழக்குப்பதிவு செய்கிறது என்பதிலேயே தலித்துகளுக்கு இங்கிருக்கும் அதிகாரம் என்ன என்பது தெரிந்துவிடும். இத்தனை சட்டங்கள் அவர்களுக்கு ஆதரவாக இருந்தும், இன்னும் அவர்கள் அதிகார வர்கத்தாலும், ஆதிக்க சமூகங்களாலும் அலைக்கழிக்கப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறார்கள். அதையும்தாண்டி சாதிப்பவர்களையும், அதே தலித் முத்திரையின் பெயரால் ஏளனம் செய்வது இன்றளவிலும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

நாயாட்டு

சரி, தலித்துகளை இப்படி சித்தரித்திருப்பது மட்டும்தான் இந்தப் படத்தின் பிரச்னையா என்றால், அதுமட்டுமல்ல. காவல்துறையை இவ்வளவு அப்பாவிகளாக, ஓடி ஒளியும் வெள்ளந்திகளாக இதற்கு முன்னர் யாராவது சிந்தித்து இருப்பார்களா என நினைக்கவே அலுப்பாக இருக்கிறது. ஏனெனில் அயல்நாட்டு சினிமாக்களில்கூட காவல்துறையை இப்படியெல்லாம் காட்ட மாட்டார்கள். தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் தரவுகளின்படி 2014 முதல் 2019 வரை மனித உரிமை மீறல் வகையில் ஒரு காவல்துறை அதிகாரிகூட தண்டனை அனுபவித்ததில்லை. பைக்கில் செல்லும் கர்ப்பிணி பெண்ணை உதைத்தாலும் சரி, ஆட்டோக்களுக்குத் தீ வைத்தாலும் சரி, விவாத மேடைகளுக்கு ஒரு நாள் தீனி கிடைக்குமே தவிர காவல்துறை அதிகாரிகளுக்கு அப்படி என்ன தண்டனை கிடைத்தது என நினைவுபடுத்திப் பார்த்தால் அதன் உண்மை தெரிந்துவிடும். சாத்தான்குளம் சம்பவம் உலக அளவில் கொந்தளிப்பை ஏற்படுத்தியதற்கு பாதிக்கப்பட்டவர்களின் சமூக நிலையும் ஒரு காரணம். ஆனால், அவ்வளவு அழுத்தம் இருந்தும், காவல்துறை சக்கரம் எவ்வளவு மெதுவாக இழுத்தடிக்கப்பட்டு சுழன்றது என்பதை நாம் எல்லோரும் அறிவோம். இதில் காவல்துறை பயந்து ஓடுகிறது, உருண்டு ஓடுகிறது என காமெடி செய்து கொண்டிருக்கிறார்கள்.

தராசை சமப்படுத்த உயிருக்குப் பயந்து ஓடும் காவல்துறை அதிகாரியான ஜோஜு ஜார்ஜையும், நிமிஷாவையும் தலித்தாக்கி இருக்கிறார்கள். ஆனால், இவர்கள் இருவரும் தலித்தாக இருப்பதால், இதில் என்ன மாறுதல் நடந்துவிடப்போகிறது. படத்தில் பிரவீன் மைக்கேலாக வரும் குஞ்சகோ போபனுக்கு இருக்கும் இறக்கம்கூட தலித்தான மணியனுக்கு இல்லை என்பதைத் தவிர அக்கதாபாத்திரத்தின் சாதிய சூழல் கதையில் ஒரு மாற்றத்தையும் கொண்டு வரவில்லை. ‘விஸ்வரூபம்’ இரண்டாம் பாகத்தில் இசையமைப்பாளர் ஜிப்ரானின் பெயர் மொஹம்மது ஜிப்ரானாக மாறியதற்கு ஒப்பானதொரு மாற்றம்தான் ஜோஜு ஜார்ஜின் கதாபாத்திரத்தை தலித்தாக முன்னிறுத்துவது.

சரி, படத்தில் இருக்கும் அரசியலை விஷமங்களை புறந்தள்ளுவோம். படமாக எப்படி இருக்கிறது ‘நாயாட்டு’?

நாயாட்டு

உதவி துணை ஆய்வாளர் மணியனாக வரும் ஜோஜு ஜார்ஜின் கதாபாத்திர வார்ப்பு உண்மையில் பக்காவாக எழுதப்பட்டிருக்கிறது. அவர் நல்லவர் இல்லை. அதிகார வர்க்கத்தின் கட்டளைக்கு காரியங்களைச் செய்து முடிக்கும் ஒரு ஏவல் மிருகம். அதிகார வர்க்கத்தின் தொண்டைக்குழியில் பிரச்னை என்னும் போது, அந்த ஏவல் மிருகத்தை கொல்ல முடிவு செய்கிறார்கள். ஆனால், அந்தக் கதாபாத்திரத்தைத் தவிர படத்திலிருந்து எடுத்துக்கொள்ள எதுவுமே இல்லை. மூத்த அதிகாரியை, அந்த பெண் அதிகாரி What the F*** என்கிறார். கொரிய சினிமாக்களின் பாதிப்பு இருக்கலாம்தான். அதற்காக இப்படியெல்லாமா என்று தோன்றுகிறது. இன்னொரு பக்கம் ‘தர்பார்’ பாணியில் முதல்வரே ஐடியா கொடுத்து மூன்று டூப்பு ஆசாமிகளை கைது செய்கிறார்களாம். அதைச் சுற்றி புகைப்படமும் எடுக்கிறார்கள். யதார்த்த சினிமாவிலேயே இப்படி எல்லாம் திரைக்கதை எழுதினால் என்ன செய்வது?!

ஒரு விஷயத்தை நம்பச் செய்ய சுவாரஸ்யமாக ஒரு கதை சொல்ல வேண்டும். அதற்கு உண்மை, பொய் பேதமெல்லாம் இல்லை. எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம். அந்த வகையில் ‘நாயாட்டு’ வென்றிருக்கலாம். ஆனால், படைப்புலகில் ஒரு தீராக்கறை இந்த ‘நாயாட்டு’. உண்மையில் இப்படியாக நிறைய படைப்புகள் வர வேண்டும். இனிப்பாக இருக்கும் நஞ்சு தலை வரை ஏறினாலாவது அது நஞ்சு என புரிந்து கொள்ளும் அளவு இத்தகைய படங்கள் தொடர்ந்து வர வேண்டும். ஒரு படைப்பை அதன் சுவாரஸ்யத்தைக் கடந்து அது திணிக்கும் விஷமத்தைப் புரிந்துகொண்டு ஒதுக்கும் நிலை வரும் வரை ‘நாயாட்டு’ மாதிரியான சினிமாக்கள் தொடர்ந்து வர வேண்டும்!

Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments