தாவோஸ் நகரில் நடந்த உலக பொருளாதார உச்சி மாநாட்டில், முதல்வர் பசவராஜ் பொம்மை முன்னிலையில், கர்நாடகாவில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில், ‘ரென்யூ பவர்’ நிறுவனம், 30 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கும் வகையில், 50 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
ஸ்விட்சர்லாந்து நாட்டின் தாவோஸ் நகரில், நேற்று முன்தினம், நேற்று என இரண்டு நாட்கள் உலக பொருளாதார உச்சி மாநாடு நடந்தது. முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையிலான கர்நாடக குழு பங்கேற்றது.முதல் நாளான நேற்று முன்தினம், கர்நாடகாவில் நான்கு ஷாப்பிங் மால்கள் கட்டுவதற்காக, ‘லுலு’ நிறுவனத்துடன், 2,000 கோடி ரூபாய் முதலீட்டுக்கு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
இரண்டாவது நாளான நேற்று, கர்நாடகாவில் முதலீடு செய்வதற்காக உலகின் பல்வேறு முன்னணி நிறுவன முக்கியஸ்தர்கள், முதல்வரை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.பாரதி என்டர்பிரைசஸ் தலைவர் சுனில் பாரதி மிட்டல்; அதானி குழும தலைவர் கவுதம் அதானி; ஜான்சன் கன்ட்ரோல்ஸ் நிறுவன தலைமை செயல் அதிகாரி ஜார்ஜ் ஒலிவர்.ஹனிவெல் நிறுவனத்தின் துணை தலைவி அமி சியாங்க்; ஐ.பி.எம்., நிறுவன தலைவர் அரவிந்த் கிருஷ்ணா; ரென்யூ பவர் நிறுவன தலைவர் சுமந்த் சின்ஹா ஆகியோர், முதல்வரை தனித்தனியாக சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
இதில் முக்கிய மைல் கல்லாக, ரென்யூ பவர் நிறுவனம் கர்நாடகாவில் அடுத்த ஏழு ஆண்டுகளில், 50 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்வதற்கு முன்வந்தது. முதல்வர் முன்னிலையில், இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.புதுப்பிக்கத்தக்க ஆற்றல், பேட்டரி சேமிப்பு மற்றும் பசுமை ஹைட்ரஜன் ஆலைகளை நிறுவ உத்தேசித்துள்ளது. திட்டங்கள் இரண்டு கட்டங்களாக செயல்படுத்தப்பட உள்ளன.
முதல் கட்டமாக, ஏற்கனவே நடைமுறையில் உள்ள திட்டங்களில், 11 ஆயிரத்து, 900 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டு, அடுத்த இரண்டு ஆண்டுகளில் செயல்படுத்தப்படும். இரண்டாவது கட்டத்தில், அதற்கடுத்த ஐந்து ஆண்டுகளில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் பசுமை ஹைட்ரஜன் ஆலைகளை நிறுவ, 37 ஆயிரத்து 500 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட உள்ளது.இரண்டு கட்டங்களிலும், 30 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதல்வர் குழுவில், கர்நாடக கனரக தொழில் துறை அமைச்சர் முருகேஷ் நிரானி, உயர்கல்வி துறை அமைச்சர் அஸ்வத் நாராயணா. தொழில் துறை கூடுதல் தலைமை செயலர் ரமணா ரெட்டி, முதல்வரின் முதன்மை செயலர் மஞ்சுநாத் பிரசாத், தொழில் துறை கமிஷனர் குஞ்சன் கிருஷ்ணா ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். இக்குழுவினர் இன்று துபாய் வழியாக புறப்பட்டு, நாளை பெங்களூரு வருகிறது.
– நமது நிருபர் –
Advertisement