திண்டுக்கல் மாநகராட்சியில் காய்கறிக் கழிவுகளைக் கொண்டு பயோ கேஸ் தயாரித்து அதை மின்சாரமாக மாற்றும் திட்டம் 2013-2014-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதற்காகத் திண்டுக்கல் மாநகரில் வீடுகள், காய்கறிச் சந்தைகள், திருமண மண்டபங்களில், ஹோட்டல்கள், வீடுகளில் சேகரிக்கப்படும் பசுமைக் கழிவுகளான காய்கறிக் கழிவுகளைக் கொண்டு 400 கிலோவாட் மின்சாரம் தயாரிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
திண்டுக்கல் மாவட்ட சிறைச்சாலை பின்புறம் இதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு 5 மெட்ரிக் டன் காய்கறிக் கழிவுகளைக் கொண்டு மின்சாரம் தயாரிக்கும் திட்டப் பணிகள் நடைபெற்றன. 2017-ம் ஆண்டு திட்டப் பணிகள் நிறைவு பெற்று அப்போதைய முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார். இங்கு உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை மலைக்கோட்டை அடிவாரத்தில் உள்ள நீரேற்று நிலையம், மாநகராட்சி வார்டுகளில் தெரு விளக்குகளுக்கு பயன்படுத்த ஏற்பாடுகள் நடைபெற்றன. இதனால் மாநகராட்சிக்கு மின் கட்டணம் 5,000 ரூபாய் வரை மிச்சமானது.
மேலும், பயோ-கேஸ் உற்பத்திக்குப் பிறகு, கிடைக்கும் கழிவுகளை விவசாய நிலங்களுக்கு உரமாகப் பயன் படுத்தப்பட்டது. திண்டுக்கல் மக்களால் பெரும் வரவேற்பை பெற்ற இத்திட்டத்துக்கு திறப்பு விழா நடந்து ஓராண்டு மட்டுமே செயல்பாட்டில் இருந்தது. பிறகு, இத்திட்டம் செயல்படாமல் முடங்கியது. இதனால் 90 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட பயோ-கேஸ் தயாரிக்கும் நிலையத்தில் உள்ள அரவை இயந்திரங்கள், ஜெனரேட்டர்கள் அனைத்தும் துருப்பிடித்து வீணாகிக்கொண்டிருக்கின்றன.
கடந்த 4 ஆண்டுகளாக அதிகாரிகளால் நடத்தப்பட்டு வந்த நிர்வாகம் தற்போது நகரப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிக்கப்பட்டு திண்டுக்கல் மாநகராட்சிக்கு பெரும்பான்மையான தி.மு.க கவுன்சிலர்களைக் கொண்டு முதல் பெண் மேயரும் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், மீண்டும் பயோ-கேஸ் மூலம் மின்சாரம் எடுக்கும் திட்டம் நடைமுறைக்கு வருமா எனத் திண்டுக்கல் மக்கள் காத்திருக்கின்றனர்.