இன்று சென்னையில் நடைபெற்ற வணிகர் சங்க விழாவில், தமிழக எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “தி.மு.க ஆட்சிக் காலத்தில் சட்டம் ஒழுங்கு சீர் கெட்டுவிட்டது. அ.தி.மு.க ஆட்சியில் வணிகர்கள் எந்த அச்சுறுத்தலும் இல்லாமல் தொழில் செய்து வந்தனர். ஆனால் தற்போது தி.மு.க ஆட்சியில் வணிகர்கள் ஒவ்வொரு நாளும் அஞ்சி நடுங்கி வாழும் நிலை ஏற்பட்டுள்ளது. வணிகர்கள் கடையை திறந்தால் மாமூல் கேட்பது, அப்படி மாமூல் தராவிட்டால், அவர்கள் மீது வன்முறையை ஏவி விடுகின்றனர். கடையை மூடிவிட்டு வீட்டுக்குச் செல்லும் வணிகர்களை வழிப்பறி செய்கின்றனர். மூடியுள்ள கடைகளை துளையிட்டு கொள்ளை அடிக்கின்றனர்.
வண்டிக்கு எப்படி அச்சாணி முக்கியமோ அதைப்போல, மக்களுக்கு அச்சாணியாக விளங்கி வருபவர்கள் வணிகர்கள். ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியை பொருத்துதான் அந்த நாட்டின் வளர்ச்சி இருக்கிறது. வணிகர்களுக்கு எதிராக நடக்கும் வன்முறை செய்திகளை ஒவ்வொரு நாளும் ஊடகங்களில் பார்க்கும்போது வேதனையாக இருக்கிறது. வணிகர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்’’ என்றார்.