“என்னைப் பொறுத்தளவில், ஆளும் கட்சியின் கூட்டணியில் இருக்கும் கட்சிகளான, கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளின் செயல்பாடுகள்தான் சிறப்பாக இருக்கின்றன. ஆனால், மீடியாவின்மூலம் எதிர்க்கட்சியாக நமக்கு தோற்றமளிப்பது பாஜகதான். ஆனால், பாஜகவினர் கடந்த ஓராண்டுகளாக, கோவில் இடிப்பு, பூஜை இல்லை, பூசாரிகள் இல்லை உள்ளிட்ட மக்கள் நலன் சாராத விஷயங்களைத்தான் கையிலெடுத்தார்கள். இன்னும் சொல்லப்போனால், மக்களைப் பிளவுபடுத்துகிற அரசியலைத்தான் செய்தார்கள்.
அதேபோல, பிரதான எதிர்க்கட்சியாக அதிமுக தங்களின் கடமையைச் செய்யவில்லை என்றே நான் பார்க்கிறேன். அமைச்சர்கள் மீது ரெய்டுக்கு வந்த நேரங்களைத்தவிர தெருவில் இறங்கி அவர்கள் எந்தப் போராட்டத்தையும் நடத்தவில்லை. மக்கள் பிரச்னைகளுக்காக பெரியளவில் குரல்கொடுக்கவில்லை. பல இடங்களில் பாஜகவுக்கு வழிவிடுகிற வேலையைத்தான் அதிமுகவினர் செய்திருக்கின்றனர். ஆனால், 66 எம்.எல்.ஏக்களை உடைய கட்சி, நான்கு எம்.எல்.ஏக்கள் கொண்ட கட்சி வழிவிடும் வேலை எல்லாம் நடைமுறையில் ஒத்துவராது.
அதேபோல, அதிமுகவுக்கு 50 லட்சம் தொண்டர்களாவது தமிழகத்தில் இன்னமும் இருப்பார்கள். அதனால், பாஜகவின் தொண்டர் பலத்தை அதனுடன் ஒப்பிடவே முடியாது. ஆனால், செயற்கைத்தனமாக பாஜக தங்களை எதிர்க்கட்சியாக முன்னிறுத்திக்கொள்ளப் பார்க்கிறது. அதிமுக அதற்கான இடத்தை கொடுப்பது மிகவும் வருத்தத்துக்குரிய விஷயம். நிச்சயமாக அவர்கள் மாறவேண்டும், எதிர்க்கட்சியாக சிறப்பாகச் செயல்படவேண்டும் என்பதே அனைவரின் விருப்பமும். நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம், தேமுதிக, அமமுக உள்ளிட்ட கட்சிகளை தேர்தலுக்கான கட்சிகளாகத்தான் பார்க்க வேண்டியிருக்கிறது. கீழ்மட்ட அளவில் பெரிய போராட்டங்கள் எதையும் அவர்கள் முன்னெடுத்ததாகத் தெரியவில்லை.
தவிர, மு.க.ஸ்டாலின் தலைமையிலான இந்த அரசாங்கத்தின் தனித்துவமாக நான் பார்ப்பது, ஆளும் கட்சியின் தவறுகளை அவர்களே முன்வந்து திருத்திக்கொள்கிறார்கள். பல இடங்களில் எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்ட வேண்டிய அவசியமே இல்லாத சூழல் ஏற்படுகிறது. ஆனால், இந்த அரசுக்கு கவர்னர்தான் எதிர்க்கட்சியாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறார். தன்னிச்சையாகப் பல விஷயங்களைப் பேசிக்கொண்டிருக்கிறார். அவர் பேசுவது பேசுபொருளாக, விவாதமாக மாறுகிறது.”