பா.ம.க., இளைஞர் அணி தலைவர் அன்புமணி பேட்டி: பா.ம.க., வரும் காலத்தில், எந்த பேரங்களுக்கும் படியாமல், 2.0வை நோக்கி முன்னேறும். அதற்கான பல திட்டங்கள் எங்களிடம் உள்ளன. அதை தெரிவித்தால், பிற கட்சிகள் காப்பி அடித்து விடுவர்.
அப்படி என்றால், கட்சி துவங்கி இந்த, 33 ஆண்டுகளாக, திராவிட கட்சிகளிடம் பேரம் பேசித்தான் பதவி சுகத்தை அனுபவித்தீர்கள் என்பதை ஒப்புக் கொள்றீங்களா?
தி.மு.க., ராஜ்யசபா எம்.பி., திருச்சி சிவா பேச்சு: முதல்வர் ஸ்டாலின், இன்று இந்தியாவே பாராட்டும் அளவிற்கு சாதனை ஆட்சி நடத்தி வருகிறார். அவரது தலைமை பண்பு, நிர்வாக திறமை மூலம், லோக்சபா தேர்தலில் பிரதமரை சுட்டிக்காட்டும் வகையில் என்று இல்லாமல், அவரே பிரதமராக வர வேண்டும் என சொல்லும் அளவிற்கு வளர்ச்சி பெற்று உள்ளார். அவரது புகழ், இந்தியா மட்டுமின்றி உலகம் முழுதும் பரவியுள்ளது.
ஸ்… அப்பா… புல்லரிக்குது போங்க… சிறந்த பேச்சாளர், எழுத்தாளர், அரசியல் ராஜதந்திரி என அகில இந்திய அளவில் அறியப்பட்ட கருணாநிதியை கூட இந்த அளவுக்கு நீங்க புகழ்ந்தது இல்லை. தனயன், அவரையே மிஞ்சிட்டார்னு சொல்ல வர்றீங்களா?
ஹிந்து முன்னணி மாநில பொதுச் செயலர் முருகானந்தம் பேட்டி: சிதம்பரம் நடராஜரை இழிவு படுத்தி, ‘யு டியூப்’பில் அவதுாறு பரப்பியவர் மீது, ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்தும், அவர் மீது நடவடிக்கை இல்லை.
ஹிந்துக்கள் என்றுமே, நம் அரசியல்வாதிகளுக்கு இ.வா.,க்கள் தானே… இதே வேறு மதத்தை இழிவுபடுத்தி பதிவு வெளியிட்டுஇருந்தா, தமிழகத்தையே ரணகளப்படுத்தி இருப்பாங்களே!
தி.மு.க., பொதுச் செயலாளர் ஆ.ராசா பேச்சு: பெண்களுக்கு உரிமை தொகை தரவில்லை என அ.தி.மு.க., தலைவர்கள் பழனிசாமி பன்னீர்செல்வம் ஆகியோர் குற்றம் சாட்டுகி்ன்றனர். ஐந்து ஆண்டுகளுக்குள் நாங்கள் தரவில்லை என்றால் கேளுங்கள்; நானே இரட்டை இலைக்கு ஓட்டு போடுகிறேன்.
நீங்கள் சொல்வதைப் பார்த்தால் ஆட்சி முடியும் தருவாயில் அதாவது மூன்றே முக்கால் வருடம் கழித்து தான் உரிமை தொகை தருவீர்கள் போல் தெரிகிறதே
ஹிந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு பேட்டி: கோவில்களில் சாதாரண கற்கள் கொண்டு கட்டுமான பணி நடக்கும் போது, 100 ஆண்டுகள் தான் நன்றாக இருக்கும். மாமல்லபுரம் பகுதியில் வெட்டி எடுக்கப்பட்ட கற்களால், கோவில்களை கட்டினால், 1,000 ஆண்டுகள் வரை நிலைத்து நிற்கும். எனவே, கோவில் கட்டுமான பணிக்கு அப்பகுதியில் இருக்கும் கற்களை பயன்படுத்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
சரியாத்தான் சொல்லி இருக்கீங்க… கிட்டத்தட்ட 1,300 வருஷங்களுக்கு முன்னாடி செதுக்கப்பட்ட மாமல்லபுரம் சிற்பங்கள் இன்றைக்கும் நிலைத்து நிற்பதே இதற்கு சாட்சி!