தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கோவையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “தூய்மை இந்தியா திட்டத்தில், நாட்டிலேயே தூய்மையாக உள்ள 75 நகரங்களில் கோவை இருப்பது மகிழ்ச்சி. 180 கோடி டோஸ் தடுப்பூசியை பொது மக்களிடம் கொண்டு சென்ற மத்திய, மாநில அரசுகளுக்கு பாராட்டுகள்.
கொரோனா முழுமையாக போய்விட்டது என்று நினைக்க வேண்டாம். இன்னும் கொஞ்சம் நாள்கள் முகக்கவசம் அணிய வேண்டும். பூஸ்டர் டோஸ் போடாதவர்கள், அதை போட்டுக் கொள்ள வேண்டும். குழந்தைகளுக்கும் தடுப்பூசி போட்டு நாம் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.
உணவு பழக்க வழக்கத்தில் நாம் கவனம் செலுத்த வேண்டும். கொரோனா காலத்தில் மத்திய அரசு கொடுத்த அரிசி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், பசியை போக்கவும் உதவியதாக உலகம் முழுவதும் சொல்கின்றனர். உலக சுகாதார நிறுவனம் உள்ளிட்டோர்,
இந்தியாவில் நோய் தொற்றால் இறப்பு விகிதம் அதிகம் என கூறியுள்ளனர். இந்தியா அதை மறுத்துள்ளது. நம் நாட்டில் பிறப்பு, இறப்பு விகிதத்தை பதிவு செய்து கொண்டிருக்கிறோம். எல்லா இடங்களிலும் இறப்பு கணக்கு வைத்துள்ளனர்.
தமிழக அரசு ஓராண்டை நிறைவு செய்துள்ளனர். அதற்கு மனமார்ந்த வாழ்த்துகள். இன்னும் பல நல்ல திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்ல தமிழக அரசு பாடுபடவேண்டும். தமிழகத்தில் தாய்மொழி அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டும்.
திராவிட மாடல் என சொல்வதற்கு பதிலாக, தமிழில் திராவிட மாதிரி என்று சொன்னால் நன்றாக இருக்கும். புதிய கல்விக் கொள்கை மூலம் தாய் மொழியை கற்றுக் கொண்டு, பிற மொழிகளையும் கற்றுக் கொள்ள முயற்சி மேற்கொள்ள வேண்டும்.” என்றார்.