தமிழ்நாட்டின் அரசியல் களம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பரபரப்பாக இருக்கிறது. தி.மு.க ஆட்சியில் எப்போதும் இந்தப் பரபரப்புக்குப் பஞ்சம் இருக்காது என்றாலும் இப்போது ஆளுநருடனான சர்ச்சை, மத விவகாரங்கள், மொழி எனப் பல்வேறு வகையில் ஏதாவது ஒரு சர்ச்சை எழுந்துகொண்டே இருக்கிறது. இதற்கு ஆளும் தரப்பு மட்டும் காரணமல்ல. இந்தச் சர்ச்சையின் பின்னணியில் மிக முக்கியப் பங்காற்றுபவை எதிர்க்கட்சிகள்தான். எதிர்க்கட்சிகள் எழுப்பும் கேள்விகளுக்கும் சொல்லும் விமர்சனங்களுக்கும் ஆளும் தரப்பிலிருந்து பதில் வரும்போது அது விவாதமாக அரசியல் களத்தைப் பரபரபாக்கிவிடுகிறது.
தற்போது ஆட்சியிலிருக்கும் தி.மு.க-வுக்கு அ.தி.மு.க – பா.ஜ.க என இரண்டு தரப்பிலிருந்தும் விமர்சனங்கள் எழுகின்றன. இதைச் சமாளிக்கத் தி.மு.க தரப்பில் பல்வேறு பதிலடிகள் கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள். தி.மு.க ஆட்சியில் திராவிடம் என்ற சொல் எப்போதும் அதிகமாகப் புழக்கத்தில் இருக்கும்.
ஆனால், இந்த முறை அந்த வார்த்தையோடு சேர்ந்து `திராவிட மாடல்’ என்பதும் அதிகமாகப் புழக்கத்தில் இருக்கிறது. இதற்கு மாற்றாக எதிர்தரப்பில் `மோடி மாடல்’, `பா.ஜ.க மாடல்’, `குஜராத் மாடல்’, `ராமராஜ்யம்’ என பா.ஜ.க-வின் கூறி வருகிறார். திராவிடம் என்பதற்கு மாற்றாக இந்துத்துவம் என்ற கோட்பாட்டையும் முன்னிறுத்தி வருகிறார்கள். இப்போது ஹெச்.ராஜா தொடங்கி அண்ணாமலை வரை தாங்களும் திராவிடர்கள்தான் என்று சொல்லும் அளவுக்கு இந்தச் சொற்றொடர் சண்டை சென்றிருக்கிறது.
தி.மு.க ஆட்சிப் பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடையப் போகிறது. இந்தக் காலகட்டத்தில் இப்படியான வார்த்தைப் போர்கள் அதிகம் நடந்தேறியிருக்கின்றன. அவற்றில் அதிக கவனம் பெற்ற வார்த்தைகள் எவை ஏன் என்பது பற்றி ஒரு ஃபிளாஷ்பேக்…