திருவாரூர் தெற்கு வீதியின் பெயரை மாற்ற மாட்டோம் என அரசு அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள்மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லாததால்தான் இந்த பிரமாண்டான கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தியிருக்கிறோம். இதை மீறி திருவாரூர் தெற்கு வீதிக்குப் பெயர் மாற்றம் செய்ய நினைத்தால் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செயல்படாத அளவுக்கு பா.ஜனதா முற்றுகைப் போராட்டம் நடத்தும்.
இந்தியா முழுவதும் குடும்ப அரசியலுக்கும், குடும்ப ஆட்சிக்கும் முற்றுப்புள்ளிவைத்து 2024-ம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று பா.ஜனதா கட்சி மீண்டும் ஆட்சி அமைக்கும். இலங்கையில் குடும்ப ஆட்சியின் காரணமாக அங்குள்ள அரசு சொத்துகள் கொள்ளையடிக்கப்பட்டு வந்ததால், அங்கு மிகப்பெரிய அளவில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. அதேபோல், தற்போது குடும்ப ஆட்சி நடந்துவரும் தமிழ்நாட்டிலும் இதே நிலை ஏற்பட வாய்ப்புள்ளது.
ஆனால் பிரதமர் நரேந்திர மோடி, 2024-ம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் மீண்டும் வெற்றிபெற்று, அறிவாலயம் குடும்பம், சரத் பவார் குடும்பம், தாக்கரே குடும்பம் உள்ளிட்ட அனைத்துக் குடும்ப அரசியலுக்கும் முற்றுப்புள்ளி வைப்பார்.
பிரதமர் வீடு வழங்கும் திட்டத்தில் விண்ணப்பித்து வீடுகட்ட நினைத்த திருவாரூர் மாவட்டம், நன்னிலம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரிடம் லஞ்சம் கேட்கப்பட்டதால் அவர் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார். பிரதமர், மக்கள் ஏழையாக இருக்கக் கூடாது, அவர்கள் வாழ்வில் உயர வேண்டும் என்பதற்காக வீடு வழங்கும் திட்டத்தைச் செயல்படுத்திவருகிறார். மத்திய அரசுத் திட்டத்தை நடைமுறைப்படுத்தினாலும், அதிலும் ‘ஸ்டிக்கர்’ ஒட்டுகிற தமிழக அரசுக்கும், எந்தத் திட்டத்தில் எவ்வளவு பணம் கையாடல் செய்யலாம் என நினைப்பவர்களுக்கும் மத்தியில் ஓர் இளைஞரின் உயிர் பறிபோனது என்பது வேதனைக்குரியது. இந்தப் பிரச்னை குறித்து பிரதமரின் கவனத்துக்கு நிச்சயம் கொண்டு செல்வோம்’’ எனத் தெரிவித்தார்.