துஷ்ட சக்தி – சமஸ்கிருத ஸ்லோகம் மூலம் சீனாவை மறைமுகமாக சாடிய பிரதமர் மோடி

பிரதமர் நரேந்திர மோடி வானொலி வாயிலாக நாட்டு மக்களிடம் பேசும் மன் கி பாத் நிகழ்ச்சி ஒலிபரப்பானது. அப்போது 2020ஆம் ஆண்டில் பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வரும் நிலையில், மக்கள் இந்த ஆண்டு எப்போது முடியும் என அதிகமாக பேசுவதை கேட்க முடிகிறது என்றார். ஆறேழு மாதங்களுக்கு முன்பு கொரோனா போன்ற சங்கடநிலை வரும் என்றோ அது நீண்டகாலம் நீடிக்கும் என்றோ யாரும் நினைத்துப் பார்க்கவில்லை என்றார். நாடு அடுத்தடுத்த சவால்களை சந்தித்துக்கொண்டிருப்பதாக தெரிவித்த பிரதமர், அண்மையில் கிழக்கு கடலோர பகுதிகளை ஆம்பன் புயலும், மேற்கு கடலோர பகுதிகளை நிசார்க் புயலும் தாக்கியதை குறிப்பிட்டார்.

பல மாநிலங்களில் விவசாயிகள் வெட்டுக்கிளிகளின் படையெடுப்பை எதிர்கொள்ள நேர்ந்ததையும் பிரதமர் சுட்டிக்காட்டினார். சில பகுதிகளில் நிலநடுக்கங்கள் ஏற்பட்டதையும் குறிப்பிட்ட பிரதமர், இவை எல்லாவற்றையும் விட அண்டை நாடுகள் விடுக்கும் சவால்களையும் நாடு எதிர்கொள்ள வேண்டியுள்ளது என்றார்.

எல்லைகளையும், இறையாண்மையையும் பாதுகாப்பதில் இந்தியாவுக்கு இருக்கும் உறுதியை உலகம் கண்டதாகவும், லடாக்கில் நமது பகுதிகளை ஆக்கிரமிக்க முயன்றவர்களுக்கு உரிய பதிலடி கொடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். நமக்கு நட்பை பேணவும் தெரியும், பாதகம் செய்ய நினைத்தால் தக்க பதிலடி கொடுக்கவும் தெரியும் என்றும் அவர் கூறினார். லடாக்கில் உயிரிழந்த வீரர்களின் தியாகத்தை எண்ணி நாடு பெருமை கொள்வதாகவும்,அவர்களது தியாகம் என்றென்றும் நினைவு கூறப்படும் என்றும் அவர் கூறினார்.

நாட்டின் எல்லைகளை பாதுகாப்பதும், நாட்டை தற்சார்புடையதாக்குவதுமே வீரர்களுக்கு செலுத்தும் மெய்யான அஞ்சலியாகும் என்றும் அவர் தெரிவித்தார்.  லடாக் நிகழ்வுக்கு பிறகு உள்நாட்டு பொருட்களையே பயன்படுத்துவோம் என்ற குரல்கள் அதிகரித்துள்ளதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார். மதுரையைச் சேர்ந்த மோகன் ராமமூர்த்தி என்பவர் நாடு பாதுகாப்புத்துறையில் தற்சார்புடையதாக மாறுவதை தான காண வேண்டும் எனக் கூறியுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

சுயமரியாதை மற்றும் இறையாண்மையை பாதுகாப்பதில் இந்தியா உறுதியோடிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். தனது உரையில் சீனா என்ற பெயரை எங்கேயும் பயன்படுத்தாத பிரதமர், சமஸ்கிருத ஸ்லோகத்தின் மூலம் சீனாவை துஷ்ட சக்தி என மறைமுகமாக சாடினார்.

இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.

Source link

Leave a Comment

Your email address will not be published.