முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று உச்ச நீதிமன்றத்தால் சமீபத்தில் விடுவிக்கப்பட்ட பேரறிவாளனைத் தமிழ்நாட்டின் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்ததை சிவசேனா நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் ராவத் கடுமையாக விமர்சித்திருக்கிறார். இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், “யாராவது இப்படி ஒரு புதிய பரிமாணத்தை உருவாக்கினால், அது தேசத்துக்குச் சரியான வழியாக இருக்காது. தமிழ்நாட்டின் அரசியல் அனைவருக்கும் தெரியும். ராஜீவ் காந்தி தேசத்தின் தலைவராக இருந்தவர். அவர் தமிழ்நாட்டில் படுகொலை செய்யப்பட்டு, தன்னைத்தானே நாட்டுக்காகத் தியாகம் செய்தவர். முதல்வர் ஸ்டாலின், தேசத்தின் தலைவரைக் கொன்றவர்களைக் கொண்டாடினால், அது எங்கள் கலாசாரம் அல்ல என்று நான் நினைக்கிறேன்” என்றார்.
கடந்த மே 18-ம் தேதி தமிழ்நாட்டின் முதல்வர் ஸ்டாலின் பேரறிவாளனைச் சந்தித்துப் பேசியது தொடர்பாகத் தனது ட்விட்டரில், “30 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறைவாசம் முடிந்து இல்லம் திரும்பியிருக்கும் சகோதரர் பேரறிவாளனைச் சந்தித்தேன். சகோதரர் பேரறிவாளனையும் (அவர் தாயார்) அற்புதம்மாளையும் இனிமேலாவது வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழுமாறு கேட்டுக் கொண்டேன்.” என்று பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.