Thursday, June 30, 2022
Homeஅரசியல் செய்திகள்தேனி கால் டாக்ஸி டிரைவர் மகன் ரஷ்யாவில் IFS அதிகாரி - விடா முயற்சியுடன் சாதித்த...

தேனி கால் டாக்ஸி டிரைவர் மகன் ரஷ்யாவில் IFS அதிகாரி – விடா முயற்சியுடன் சாதித்த கதை!

தேனி மாவட்டம் போடி அருகே சில்லமரத்துப்பட்டி என்ற குக்கிராமத்தைச் சேர்ந்த கால் டாக்ஸி டிரைவர் முருகேசன் மகன் அருண் பாண்டியநாதன் (29). இவர் கடைசியாக நடந்து முடிந்த சிவில் சர்வீஸ் தேர்வில் வென்று இந்திய வெளியுறவுப்பணி அதிகாரியாக ரஷ்யா செல்லவுள்ளார். தற்போது ஐஎப்எஸ் (Indian Foreign Service – IFS) பயிற்சியில் இருக்கும் அருண் பாண்டிய நாதன் 3 நாள் சிறப்புப் பயிற்சிக்காக சென்னை வந்திருந்தார். அவருக்கு பயிற்சி வழங்கிய தமிழக டிஜிபி சைலேந்திரபாபு கிராமப் பின்புலத்தில் இருந்து மிக உயரிய பணிக்கு செல்லும் அருண் பாண்டியநாதனை வெகுவாக பாராட்டி தனது ட்விட்டர், ஃபேஸ்புக் பக்கங்களில் பதிவிட்டிருந்தார்.

தமிழக டிஜிபி உடன்

சென்னையில் பயிற்சியை முடித்துக் கொண்டு டெல்லி செல்ல தயாராகி கொண்டிருந்த அருண் பாண்டியநாதனிடம் பேசினோம்.

“அப்பா படிக்க மிகவும் ஆசை கொண்டிருந்தபோதிலும் குடும்ப வறுமை காரணமாக படிக்க முடியாமல் போனது. எனது அப்பா 9 மற்றும் 10-ம் வகுப்பைக் கூட கிளீனர் வேலைக்குச் சென்று கொண்டேதான் முடித்துள்ளார். தொடர்ந்து அவரால் படிக்க முடியவில்லை. இதனால் தனது பிள்ளைகளாவது நன்றாக படிக்க வைத்துவிட வேண்டும் என உறுதியாக இருந்துள்ளார். எனது அம்மா நாகஜோதியும் 8-ம் வகுப்பு மட்டுமே படித்தவர். எனவே எனது அக்கா கார்த்திகா தேவியையும் என்னையும் நன்றாக படிக்க வைக்க முடிவெடுத்தனர். அக்கா அரசுப் பள்ளியில் படித்தார். நான் மெட்ரிக் பள்ளியில் படித்தேன். இருவருமே நன்றாக படிக்கக் கூடிய மாணவர்களாக இருந்தோம்.

கால் டாக்ஸி ஓட்டிக் கொண்டு குடும்பத்துக்குத் தேவையானதை அப்பா பார்த்துக்கொண்டார். பெரிய அளவில் பொருளாதார நெருக்கடி எப்போதும் ஏற்பட்டதில்லை. பள்ளிக் காலத்தை முடித்து அக்கா இன்ஜினியரிங் படித்தார். நானும் இன்ஜினியரிங் படிக்கவே முடிவெடுத்தேன். நல்ல மதிப்பெண்கள் பெற்றிருந்ததால் சென்னைக்கு கவுன்சிலிங் சென்றோம். அப்போது எங்கள் உறவினர் ஒருவர் நொய்டாவில் சிவநாடார் நடத்தும் கல்வி நிறுவனத்தில் நல்ல கல்வியைப் பெறலாம் எனத் தெரிவித்தார். அதற்கு விண்ணப்பித்தேன். ஸ்காலர்சீப் கிடைத்தது படிப்பைத் தொடர்ந்தேன். முதன்முதலில் சிவில் சர்வீஸ் எழுத வேண்டும் என்ற விதை அங்குதான் விதைக்கப்பட்டது. இருந்தாலும் குடும்பச் சூழல் காரணமாக சிவில் சர்வீஸ் தேர்வுக்கு தயாராவதில் தயக்கம் இருந்தது. இருப்பினும் சிவில் சர்வீஸ் மூலம் சமூகத்தில் நம்மால் முடிந்த மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணம் இருந்து கொண்டே இருந்தது.

அருண் பாண்டியநாதன்

கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு டெல்லி ஆக்ரா அருகில் மதர் டெய்ரி என்ற நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தேன். ஒன்றரை ஆண்டுகள் அங்கே வேலை செய்தேன். நல்ல வேலை நல்ல ஊதியம் என்றபோதிலும் ஈடுபாடு இல்லாமல் இருந்தேன். வேலையை விட்டுவிட்டு சிவில் சர்வீஸ் தேர்வுக்குத் தயாராகப் போவதாக வீட்டில் தெரிவித்தேன். எனது அம்மா மட்டுமே தயங்கினார். அப்பா, அக்கா இருவரும் எனது முடிவை வரவேற்றனர். குறிப்பாக இன்போசிஸில் வேலை பார்த்து கொண்டிருந்த அக்கா எனக்கான செலவுகளை ஏற்றுக் கொள்வதாகவும், குடும்பச் செலவை அப்பா பார்த்துக் கொள்ளட்டும் எனவும் கூறி எனக்கு நம்பிக்கை அளித்தார்.

இதனால் சென்னை திரும்பி அகாடமியில் சேர்ந்து சிவில் சர்வீஸ் தேர்வுக்குத் தயாரானேன். முதல் முறை பிரிலிமினரி தேர்வில் வென்றேன். இரண்டாவது முறை மெயின் தேர்வில் வென்று மூன்றாம் கட்டத் தேர்வில் தோற்றேன். 3வது முறை தேர்வுக்கு தயாராகி கொண்டிருந்தபோது எனது உறவினரான விஷ்ணுபாரதியை காதலித்து திருமணம் செய்து கொண்டேன். அப்போது மெயின் தேர்வில் தோற்றேன். இதற்கிடையே பொருளாதார சிக்கல் காரணமாக பெங்களுரூவில் போட்டித் தேர்வுக்கு தயாராவதற்கு வசதியான ஆப் தயாரிக்கும் நிறுவனத்தில் கன்டென்ட் மேனேஜராக பணியில் சேர்ந்தேன். வேலை பார்த்துக் கொண்டே படிப்பில் முழுமையாகக் கவனம் செலுத்த முடியவில்லை. எனது மனைவியும் சிவில் சர்வீஸ் தேர்வு தயாராகியவர் என்பதால் எனது நிலையறிந்து சப்போர்ட் செய்தார். அவரது வீட்டிலும் வேலையை விட்டுவிட்டு தேர்வுக்கு தயாராக உத்வேகம் அளித்தார்கள். இதனால் 4வது முறையாக தேர்வில் வென்றேன். நான்கு ஆண்டுகால முயற்சிக்குக் கிடைத்த பரிசாக ஐஎப்எஸ் கிடைத்தது.

மனைவியுடன் இளம் ஐஎப்எஸ்

டிரேட் அண்ட் காமர்ஸ், நேஷனல் செக்யூரிட்டி அண்ட் டிப்லமசி இவற்றில் ஆர்வம் இருந்ததால் ஐஎப்எஸ் தேர்வு செய்தேன். உத்தரகாண்ட்டில் முதற்கட்ட பயிற்சியை முடித்துவிட்டு தற்போது டெல்லியில் பயிற்சி மேற்கொண்டு வருகிறேன். ரஷ்ய மொழி கற்பது உள்ளிட்ட பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இப்பயிற்சி செப்டம்பர் மாதம் முடிவடைந்துவிடும். ஜனவரியில் ரஷ்யா தூதரக 3-ம் நிலை செயலராக பொறுப்பேற்க உள்ளேன். இந்திய – ரஷ்ய உறவை மேம்படுத்துவது, இருநாட்டுப் பொருளாதார மேம்பாடு, பண்பாடு, கலாசாரம், அரசியல் ரீதியான பேச்சுவார்த்தை, டிரேடிங் உள்ளிட்டவற்றில் கவனம் செலுத்துவேன். எனது பணியின் மூலம் இந்திய நாட்டிற்குப் பெருமை தேடித் தருவேன்” என்றார்.

மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப்பகுதியில் குக்கிராமத்தில் பிறந்த ஒரு தமிழன், இன்று இந்திய நாட்டின் வளர்ச்சிக்காக உயர் பதவிக்குச் செல்வது நம் அனைவருக்குமான பெருமையே!

Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments