தொடர் சரிவில் பங்குச் சந்தை; என்ன காரணம்? எப்போது மீண்டும் ஏற்றம் காணும்?

இந்தியப் பங்குச் சந்தைகள் தொடர் இறக்கத்தின் போக்கில் உள்ளன. வாரத்தின் முதல் நாளான இன்று சென்செக்ஸ் 250-350 புள்ளிகள் என்ற அளவில் இறக்கத்துக்குள்ளானது. நிஃப்டி 100-150 என்ற அளவில் இறக்கத்தில் வர்த்தகமானது.

ரஷ்ய-உக்ரைன் போர் காரணமாக கடந்த சில மாதங்களாகவே பங்குச் சந்தைகள் பாதிப்புக்கு உள்ளாயின. ஏப்ரல் மாதத் தொடக்கத்தில் போர் காரணமாக சந்தை உள்ளான தாக்கம் சற்று தணிந்திருந்த நிலையில், மீண்டும் போர் தீவிரம் அடைந்ததால் சந்தைகள் சரிய ஆரம்பித்தன.

Stock Market (Representational Image)

அதுமட்டுமல்லாமல் இந்தியப் பங்குச் சந்தைகளில் எஃப்ஐஐ தொடர்ந்து பங்குகளை விற்று வெளியேறி வந்தனர். இப்படி பல்வேறு காரணங்களினால் பங்குச் சந்தைகள் இறக்கத்தில் இருந்துவருகின்றன.

கடந்த சில மாதங்களாகவே காளையின் ஆதிக்கம் பெரிதாக சொல்லிக்கொள்ளும் வகையில் இல்லை. பெரும்பாலான துறைகளின் குறியீடுகளும் சரிவில்தான் உள்ளன. குறிப்பிட்ட சில பங்குகள் மட்டுமே ஏற்றத்தில் வர்த்தகமாகின்றன.

பங்குச் சந்தை தொடர்ந்து இறக்கத்தின் போக்கில் இருந்துவருகிறது. இந்த இறக்கம் இப்படியே தொடருமா, மீண்டும் ஏற்றத்தின் போக்கில் எப்போது நகரும் என்பது குறித்து பங்குச் சந்தை நிபுணர் ஏ.கே.பிரபாகரிடம் கேட்டோம். அவர் கூறியதாவது, “அமெரிக்க சந்தைகள் ஏப்ரல் மாதங்களில் வலுவான செயல்பாட்டைக் கொண்டிருக்கும்.

ஏ.கே.பிரபாகர்

ஆனால், கடந்த ஏப்ரல் மாதத்தில் மோசமான நிலையில்தான் வர்த்தகம் ஆனது. நாஸ்டாக் 12% வரை சரிந்துள்ளது. கடந்த 20 வருடங்களில் இது இரண்டாவது மோசமான சரிவாகும். இதற்கு முக்கியமான காரணம், ஃபெட் நடவடிக்கைகள் தொடர்பான பதற்றம்தான்.

ஃபெடரல் வங்கி தன்னுடைய வட்டி விகித முடிவு குறித்த கணிப்பைத் தெரிவித்துள்ளது. அதாவது, 50 அடிப்படை புள்ளிகள் வரை வட்டி விகிதம் உயர்த்தப்படலாம் எனக் கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே பங்குச் சந்தைகள் சரிவில் உள்ளன. டவ் ஜோன்ஸ், நாஸ்டாக் ஆகிய சந்தைகள் சரிவில் இருப்பதால், அது இந்தியச் சந்தைகளிலும் எதிரொலிக்கிறது.

அடுத்து வரும் செவ்வாய், புதன்கிழமைகளில் ஃபெடரல் வங்கியின் வட்டி விகித முடிவுகள் வெளியாக உள்ளன. அதேசமயம் ஃபெடரல் வங்கியின் வட்டி விகித முடிவு குறித்த பதற்றம் ஏற்கெனவே பங்குச் சந்தைகளில் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளன. வட்டி விகித முடிவுகள் வரும் விதத்தைப் பொருத்து சந்தையின் நகர்வுகள் மாறுவதற்கான வாய்ப்புள்ளது. எதிர்பார்த்தபடியே 50 அடிப்படை புள்ளிகள் மட்டும் உயர்த்தப்பட்டால், சந்தை ஓரளவுக்கு கட்டுக்குள் வரும் என்று எதிர்பார்க்கலாம்.

ஒருவேளை, 75 அல்லது 100 அடிப்படை புள்ளிகள் உயர்த்தப்பட்டால் சந்தை இறக்கத்தின் போக்கில் தீவிரமாக நகர வாய்ப்புள்ளது.

பங்குச் சந்தை

எனவே, ஃபெடரல் வங்கியின் வட்டி விகித முடிவுகளைப் பொருத்தே இந்த வாரம் சந்தையின் நகர்வு இருக்கும். போர்ச் சூழல், பணவீக்கம், கச்சா எண்ணெய் விலை, டாலர் மதிப்பு ஆகியவை சந்தைக்குச் சாதகமாக மாறும்போது பங்குச் சந்தைகள் ஏற்றத்தை நோக்கி திரும்பும்” என்றார்.

கடந்த இரண்டு ஆண்டுகளில் பங்குச் சந்தையானது ஏற்றத்தின் போக்கில் நல்ல வளர்ச்சியைக் கண்ட நிலையில், தற்போது சந்தை ஏற்ற, இறக்கத்துடன் இருப்பது பங்குச் சந்தை முதலீட்டாளர்களின் பொறுமையை சோதிப்பதாகவே இருக்கிறது!

Source link

Leave a Comment

Your email address will not be published.