சென்னை கிண்டி கிங் இன்ஸ்டியூட்டில், தேசிய முதியோர் நல மருத்துவ மையம் அமைந்துள்ளது. இந்த மருத்துவ மையம்தான் கொரோனா பேரிடர் காலகட்டத்தில் கொரோனா சிகிச்சை மையமாக சிறப்பாகச் செயல்பட்டு வந்தது. தற்போது தமிழ்நாட்டில் கொரோனா தொற்று குறைந்துள்ள நிலையில், அந்த மருத்துவ மையத்தை, தேசிய முதியோர் நல மருத்துவ மையமாகத் திறப்பதற்கான ஏற்பாடுகளை அரசு செய்துவருகிறது.
மருத்துவ மையத்தின் கட்டடத்தை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், மக்கள் நல்வாழ்வுத் துறை அரசு முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், கல்வி இயக்குநர் நாராயணபாபு உள்ளிட்ட துறை சார் உயர் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அந்த மருத்துவ மையத்தை ஆய்வு செய்யும்போது, அங்கிருந்த சுவரை தொட்டாலே உதிரும் நிலையில் இருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து, சம்பந்தப்பட்ட துறை அதிகாரியைத் தொடர்பு கொண்ட அமைச்சர், “கட்டடம் கட்டி இரண்டு ஆண்டுகள் கூட ஆகவில்லை, அதற்குள் தொட்டாலே கையேடு வருகிறது. சுவர்கள் அனைத்தும் வெறும் மணலை கொண்டு மட்டும் கட்டப்பட்டது போன்று தெரிகிறது. இந்த கட்டடம் கட்டிய ஒப்பந்ததாரரைத் தொடர்பு கொண்டு உரிய விளக்கம் பெறவேண்டும்.
மேலும், துறை சார் நிபுணர்களுடன் வந்து ஆய்வு செய்து உடனடியாக விசாரணை நடத்தவேண்டும். இந்த கட்டடத்தின் உறுதித் தன்மையை உடனடியாக பரிசோதனை செய்து சான்று அளிக்க வேண்டும். அதற்கு அடுத்தபடியாகத்தான், மருத்துவமனை மாற்றுவது குறித்து நடவடிக்கை எடுக்க முடியும்” என்று பேசினார்.
இது தொடர்பாகப் பத்திரிகையாளர்களிடம் பேசிய அமைச்சர் மா. சுப்பிரமணியன், “இந்த கட்டடத்தை ஆய்வு செய்ய வந்த எங்களுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. அனைத்து சுவர்களும் தொட்டாலே அப்படியே வருகிறது. கட்டடத்தின் உறுதித் தன்மை குறித்து துறைசார் நிபுணர்கள் மூலம் ஆய்வு நடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஆய்வு முடிவுகளுக்குப் பின்பு தான் இங்கு மருத்துவமனையைத் திறப்பது பாதுகாப்பாக இருக்கும். அதேசமயத்தில், இந்த கட்டடம் கட்டப்பட்டதில் ஏதேனும் முறைகேடு நடந்திருந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு தண்டனை வாங்கித்தரப்படும்” என்று பேசினார்.