தஞ்சை வட்டாரத்தின் நடுக்காவேரியில் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த கமலிக்கு திடீரென சென்னை ஐ.ஐ.டியில் படிக்கவேண்டும் என ஆசை பிறக்கிறது. காரணம், ஒருதலைக்காதல். அதை மற்றவர்களிடம் மறைத்துவிட்டு ஐ.ஐ.டி ஆசையை மட்டும் வெளியே பகிர்கிறார். காதலைவிட சிக்கலாக இருக்கிறது ஐ.ஐ.டி நுழைவுத்தேர்வுகளுக்காக தயாராகும் நடைமுறை. போதுமான கோச்சிங் சென்டர்கள் இல்லாமல், பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் இல்லாமல் கலங்கி நிற்கும் கமலிக்கு ஆபத்பாந்தவனாய் வந்து உதவி செய்கிறார் ஓர் ஓய்வு பெற்ற பேராசிரியர்.
ஆனந்தி, அழகம்பெருமாள், பிரதாப் போத்தன், இமான் அண்ணாச்சி, ஶ்ரீஜா என படத்தில் இருப்பவர்கள் அனைவரும் இயல்பாய் நடித்திருப்பதால் நாம் பார்த்து, கேட்டு வளர்ந்த கிராமத்து மனிதர்களின் சாயலில் சிறப்பாக பொருந்திப் போகிறார்கள். அதுவே படத்தோடு நாம் ஒன்றிப்போவதற்கும் காரணமாகிறது.
தமிழில் முழுக்க முழுக்க பெண்களை மைய பாத்திரங்களாக வைத்து ஒரு ஃபீல் குட் படம் வந்து ஏகப்பட்ட நாள்களாகிறது. அந்தவகையில் கண்ணை உறுத்தும் காட்சிகள், தேவையில்லாத பாடல்கள், இரட்டை அர்த்தக் காமெடிகள் போன்வற்றை நம்பாமல் படமெடுத்ததற்காகவே இயக்குநரைப் பாராட்டலாம்.