‘திருடா திருடி’ படத்தில் தனது இயல்பான நடிப்பினால் ரசிகர்களைக் கவர்ந்தவர் சாயா சிங். சினிமாவில் தொடர்ந்து நடித்துக் கொண்டிருந்தவர் பின்னாளில் சின்னத்திரைக்குள் அறிமுகமானார். ‘ரன்’ உட்பட பல தொடர்களில் நடித்தவர் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் ‘பூவே உனக்காக’ தொடரில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
இந்நிலையில், கலர்ஸ் தமிழில் சமீபத்தில் ஆரம்பிக்கப்பட்ட ‘நம்ம மதுரை சிஸ்டர்ஸ்’ தொடரில் இந்திராணி என்கிற முக்கிய கதாபாத்திரத்தில் இவர் நடித்து வந்தார்.
தற்போது அவர் அந்தத் தொடரில் இருந்து விலகிவிட்டதாகவும், அவருக்கு பதிலாக ராஜ் டிவியில் ஒளிபரப்பாகும் ‘நீ வருவாய் என’ தொடரில் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கும் ஸ்ருதி லட்சுமி நடிக்க இருக்கிறார்.
இதுகுறித்து சாயாசிங் இதுவரை அதிகாரபூர்வமாக எதுவும் தெரிவிக்காமல் இருந்தாலும் அவர் தொடரில் இருந்து வெளியேறியது உண்மையே!
அவர் நடித்த எபிசோடுகள் வருகிற 24-ம் தேதி வரையில் ஒளிபரப்பாக இருக்கிறதாம். 25 முதல் ஸ்ருதி நடிக்கும் எபிசோடுகள் வெளியாகும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.