நமது விகடனின் `ஹலோ வாசகர்களே’ பகுதிக்கான 044-66802929 என்ற எண்ணுக்குத் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் ஓய்வூதியம் பெறுவோர் தொடர்பு கொண்டு, தங்களுக்கு மட்டும் அகவிலைப்படி உயர்த்தப்படவில்லை எனப் புகார் அளித்திருந்தனர். அவர்களைத் தொடர்பு கொண்டு பேசினோம்.
“நகராட்சி நிர்வாகம், நகர்ப்பகுதி மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் கீழ் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் செயல்பட்டு வருகிறது. இந்த வாரியம்தான் தமிழகம் முழுவதும் பொதுமக்களுக்குத் தேவையான குடிநீரை விநியோகம் செய்யும் பணியை மேற்கொள்கிறது. மத்திய அரசு ஊழியர்களுக்கு 2021-ம் ஆண்டு ஜூலை முதலும், மாநில அரசு 2022 ஜனவரி முதலும் அகவிலைப்படி 14 சதவிகிதம் உயர்த்தி வழங்கப்பட்டது. அதன்படி, ஏற்கெனவே பெறும் 17 சதவிகிதத்துடன் சேர்த்து 31 சதவிகிதமாக அகவிலைப்படி பணியாளர்களும் ஓய்வூதியர்களுக்கும் பெறுகின்றனர்.
ஆனால், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் ஓய்வூதியம் பெறும் நபர்களுக்கும் மட்டும் தமிழக அரசு உயர்த்தி வழங்கப்பட்ட அகவிலைப்படி வழங்கவில்லை. இதனால், சுமார் 9 ஆயிரம் ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்கள் பாதிக்கப்பட்டுள்ளோம். இதுகுறித்து நிர்வாகத்திடம் கேட்டபோது `வாரியம் நஷ்டத்தில் ஓடுகிறது!’ என்று சமாளித்தனர். நஷ்டத்தில் ஓடும் வாரியத்தால், தற்போதைய பணியாளர்களுக்கு மட்டும் எப்படி அகவிலைப்படி வழங்க முடிந்தது.
நஷ்டக்கணக்கை எழுத வயதான நாங்கள்தான் வாரியத்துக்குக் கிடைத்தோமா? உள்ளாட்சி அமைப்புகளிடமிருந்து மட்டும் ரூ.600 கோடிக்கும் மேல் பாக்கி வர வேண்டியிருக்கிறது. அதனை முறையாகப் பெற்றாலே வாரியத்தின் நிதிநிலையைச் சரி செய்து விடலாம்” என்றனர்.
முன்னதாக தமிழ்நாடு வடிகால் வாரிய ஓய்வூதியர்கள் சங்கத்தினர் சபாநாயகர் அப்பாவுக்கு இதுதொடர்பாக கோரிக்கை கடிதம் ஒன்றை வழங்கியுள்ளனர். அதன்படி, அவரும் ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி வழங்கவேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினுக்குக் கடந்த ஏப்ரல் 6-ம் தேதி கடிதம் எழுதியுள்ளார். ஆனாலும், குடிநீர் வடிகால் வாரிய ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி இன்னும் வழங்கப்படவில்லை.
இதுகுறித்து குடிநீர் வடிகால் வாரியத்தின் தலைவர் சிவதாஸ் மீனாவை தொடர்பு கொண்டு கேட்டபோது, “தற்போது வாரியத்தின் நிதிநிலை சரியில்லை. நிதி நிலைமை சரியானதும் ஓய்வூதியர்களுக்கு நிச்சயம் அகவிலைப்படி வழங்குவோம்” என்றார். அரியர் நிதியையும் சேர்த்து வழங்குவீர்களா என்று கேட்டதற்குப் பதில் எதுவும் அளிக்கவில்லை.
பிற அரசுத் துறைகளில் பணியாற்றிய அனைத்து ஓய்வூதியர்களுக்கும் அகவிலைப்படி வழங்கிவிட்டு, குடிநீர் வடிகால் வாரிய ஓய்வூதியர்களுக்கு மட்டும் வழங்காமல் இருப்பது பாரபட்சம்…