நூறு ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட டி-ஷர்ட் கள் தற்பொழுது 250 ரூபாய் வரை விலை பேசப்பட்டு வருவதால் புதிய ஆர்டர்கள் பெறுவதில் கடுமையான சிக்கல் எழுந்துள்ளது. இதனை பயன்படுத்தும் போட்டி நாடுகளான சீனா, பங்களாதேஷ், வியட்நாம் மற்றும் கம்போடியா போன்ற நாடுகள் எளிதாக ஆர்டர்களை கைப்பற்றுகின்றனர். இதன் காரணமாக திருப்பூர் பின்னலாடை நிறுவனங்கள் 2000 கோடி ரூபாய் வரையிலான ஏற்றுமதி ஆர்டர்களை இழந்துள்ளனர். மேலும் குறைந்த விலைக்கு பெறப்பட்ட பழைய ஆர்டர்கள் செய்து கொடுக்க முடியாமல் பாதியிலேயே அவற்றை கைவிடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால் பல பின்னலாடை நிறுவனங்கள் இழப்பை சந்தித்து, மூடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
இது தொடர்பாக திருப்பூர் வளையங்காடு பகுதியில் பின்னலாடை ஏற்றுமதி நிறுவனம் நடத்திவரும் சதாசிவம் கூறுகையில், நூல் விலை உயர்வு தங்களை பெரிய இடர்பாடுக்கு தள்ளி உள்ளதாகவும் ஒரு கோடி ரூபாய் மூலதனத்தில் செய்யப்பட்ட ஆர்டர்கள் தற்பொழுது 3 கோடி வரை பிடிப்பதாகவும் இதனால் மூலதனச் செலவு இரண்டு மடங்கு அதிகரித்து உள்ளதாகவும் மேலும் விலை நிர்ணயம் தொடர்பாக ஆர்டர்களை எடுக்கமுடியாமல் போட்டி நாடுகளிடம் தோல்வியை சந்திப்பதாகவும் சிறிய அளவில் ஏற்றுமதி செய்து வரும் தனது நிறுவனத்தில் இரண்டு கோடி ரூபாய் ஆர்டர்களை தான் இழந்து உள்ளதாகவும் தெரிவித்தார்”.
ஒட்டுமொத்தமாக திருப்பூரில் உள்ள ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட ஏற்றுமதி நிறுவனங்களில் இது போன்று பல ஆர்டர்கள் இழந்துள்ள சூழலில் 2000 கோடி ரூபாய் மதிப்பிலான ஆர்டர்கள் இழந்துள்ளதாக ஏற்றுமதியாளர்கள் வேதனை தெரிவித்தனர். நூல் விலை உயர்வை கட்டுப்படுத்தினால் தான் விவசாயத்திற்கு அடுத்தபடியாக அதிக வேலைவாய்ப்பை வழங்கும் ஆடை உற்பத்தி தொழில் பாதுகாக்கப்படும் என்பதால் மூலப்பொருளாக உள்ள பருத்தி, நூல் இரண்டையும் அத்தியாவசியப் பொருட்கள் பட்டியலில் சேர்த்து ஏற்றுமதியை முற்றிலும் தடை செய்ய வேண்டும் என திருப்பூர் ஏற்றுமதியாளர் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் முத்து ரத்தினம் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், நூல் விலை உயர பருத்தி பதுக்கல் மிக முக்கிய காரணம் என்பதால் பருத்தி பதுக்கல்காரர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் காட்டன் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா சார்பில் பருத்தியை இறக்குமதி செய்து நூற்பாலைகளுக்கு பருத்தியை வழங்கினால் மட்டுமே விலை குறைய வாய்ப்புள்ளது. எனவே மத்திய அரசு தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தையும் வேலைவாய்ப்பையும் உறுதி செய்யும் விதமாக விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைத்தார்.
இந்நிலையில், நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த கோரி திருப்பூரில் இன்றும் நாளையும் இரண்டுநாள், பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், நாள் ஒன்றுக்கு 250 கோடி ரூபாய் உற்பத்தி பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த போராட்டத்தில், 10 லட்சம் தொழிலாளர்கள் பங்கேற்றுள்ளனர். இதனால் 20 ஆயிரம் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.