நூல் விலை தொடர்ந்து உயர்வு… ஆடைகளின் விலை அதிகரிப்பு

நூல் விலை உயர்வால், திருப்பூரில் பின்னலாடைகளின் விலை 15 சதவீதம் அதிகரிக்கப்படுவதாக தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

திருப்பூரில் சிறு, குறு மற்றும் நடுத்தர பனியன் உற்பத்தி நிறுவனங்கள் மூலமாக, ஆண்டுக்கு 60 ஆயிரம் கோடி ரூபாய் வர்த்தகம் நடைபெற்று வருகிறது. மேலும் நேரடியாகவும் மறைமுகமாகவும் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் திருப்பூரில் பனியன் தொழிலை நம்பி உள்ளனர்.

இந்நிலையில் கடந்த ஆறு மாதமாக நூல் விலையானது தொடர்ந்து உயர்ந்து வருகிறது. மேலும் இந்த ஆண்டு உள்நாட்டு பருத்தி உற்பத்தி குறைந்த அளவே இருந்த நிலையில் தொடர்ந்து ஏற்றுமதி செய்யப்பட்டதால் உள்நாட்டுத் தேவைக்கு பருத்தி தட்டுப்பாடு ஏற்பட்டது.

இதனால் பருத்தி மற்றும் நூல் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. புதிய பருத்தி பஞ்சு அக்டோபர், நவம்பர் மாதத்திலேயே கிடைக்கும் என்பதால் இடைப்பட்ட காலத்திற்கு பற்றாக்குறை மிக அதிக அளவில் ஏற்படும் என்பதால் மத்திய அரசு பருத்திப் பஞ்சு இறக்குமதிக்கான 11 சதவிகித வரியை முற்றிலும் ரத்து செய்தது.

இதையும் படிங்க: கோவையில் சவர்மா கடைகளில் அதிகாரிகள் அதிரடி சோதனை.. 57 கிலோ பழைய சவர்மாக்கள் பறிமுதல்!!

என்றாலும் பருத்தி இறக்குமதி செய்ய 3 மாதம் பிடிக்கும் சூழலில் உள்நாட்டுத் தேவைக்கு பருத்தி தட்டுப்பாடு அதிக அளவில் காணப்பட்டது. இந்நிலையில் இந்த மாதம் நூல் விலை 40 ரூபாய் கிலோவிற்கு உயர்த்தப்பட்டது.  இதனால் பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் புதிய ஆர்டர்களை பெற முடியாமலும் ஏற்கனவே பெற்ற ஆர்டர்களை முடித்துக் கொடுக்க முடியாமலும் தவிக்கும் சூழல் ஏற்பட்டது

மேலும் படிக்க: திமுக அரசின் ஓராண்டுப் பயணமும்.. சர்ச்சைகளும்!

மேலும் இதனால் ஆயிரம் கோடி ரூபாய் அளவில் வர்த்தகம் பாதிக்கப்படும் என ஏற்றுமதியாளர்கள் வேதனை தெரிவித்து வந்தனர். இந்நிலையில் உள்நாட்டு பனியன் உற்பத்தியாளர்கள் சங்கமான தென்னிந்திய பனியன உற்பத்தியாளர்கள் சங்க அவசர கூட்டத்தில் நூல் விலை உயர்வு காரணமாக தொழிலை நடத்த முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டு உள்ளதாகவும்  விலை உயர்வு அவசியம் என்பதாலும் 15 சதவிகித விலை உயர்வு செய்வது என அறிவித்துள்ளனர்.

மேலும் 1.5.2022 முதலே இந்த விலை உயர்வு அமலுக்கு வருவதாகவும் தெரிவித்தனர். மேலும் அடுத்த ஒரு மாதத்தில் நூல் மற்றும் பருத்தி முற்றிலும் இல்லாத சூழல் ஏற்படும் எனவும் எனவே பருத்தி மற்றும் நூல் ஏற்றுமதியை மத்திய அரசு முற்றிலும் தடுக்க வேண்டும் என்ற தீர்மானத்தையும் நிறைவேற்றினர் இது தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து டெல்லியில் மத்திய நிதி அமைச்சர் மற்றும் பிரதமரிடம்  மனு அளிக்க உள்ளதாகவும் தெரிவித்தனர்.

 

 

இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.

Source link

Leave a Comment

Your email address will not be published.